தமிழர்களுக்கான பொருளாதார நிதியம் ஒன்றின் தேவைப்பாடு?
யதீந்திரா
தமிழ்ச் சூழலை பொருத்தவரையில், ஒரு பிரச்சினை வந்த பின்னர்தான் – அது தொடர்பில் சிந்திப்பதுண்டு. இது ஒரு பொதுவான தமிழ் பழக்கம். ஆனால் இதில் உள்ள உண்மை என்னவென்றால், தமிழர்கள் தனிப்பட்ட வாழ்வில் இதற்கு எதிர்மறையானவர்கள். தனிப்பட்ட வாழ்வில், தங்களதும் – தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, பணத்தை – சொத்துக்களை திரட்டிக் கொள்ளும் பழக்கமுள்ளவர்கள். தமிழ் மத்தியதர வர்க்கம் இதில் மிகவும் கெட்டித்தனமானது. இன்று புலம்பெயர்ந்து வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு ஜரோப்பிய நாடுகளில் நல்ல வாழ்க்கைத்தரத்துடனும் பொருளாதார பலத்துடனும் இருக்கின்றனர். எதிர்காலத்தை திட்டமிட்டு, நிகழ்காலத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் பண்புதான் அவர்களது வளர்சிக்கு காரணம். சிறுகச் சிறுகச் சேமித்துக் கொள்வதும், அதனைக் கொண்டு முடிந்தவரை சொத்துக்களை பெருக்கிக் கொள்வதும்தான் தமிழ் மத்தியதர வர்க்கத்தின் பொருளாதார பலத்திற்கு முக்கியமான காரணம். தேவைப்பட்டால் இதற்காக குறுக்கு வழிகளை கையாளுவதிலும் எவருமே பின்நிற்பதில்லை.
அரசாங்க திணைக்களம் ஒனறில் பணியாற்றி, ஓய்வு பெற்றிருக்கும் ஒருவரிடம் இரண்டு வீடுகள் – சிலருக்கு கொழும்பிலும் வீடுகள் இருக்கின்றன. ஒருவர் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் சிந்தித்தால் நிச்சயமாக அவரால் ஒரு வீட்டுக்கு மேல் வைத்திருக்க முடியாது. ஆனாலும் இவ்வாறான பலரை நான் கண்டிருக்கின்றேன். இது எப்படிச் சாத்தியப்படுகின்றது? அதே போன்று தங்களின் பிள்ளைகளை டொக்டராக்க வேண்டும் – அது சாத்தியப்படவில்லையாயின் இன்ஜினியராக்க வேண்டும் என்பதே தமிழ் மத்தியதர வர்க்கத்தின் கல்விச் சிந்தனை. அதில் வெற்றியும் பெறுகின்றனர்.
ஆனால் பொது வாழ்வு என்று வரும்போது, நான் மேலே குறிப்பிட்ட ஆற்றல்கள் காணாமல் போய்விடுகின்றன. தமிழர்களின் முயற்சிகள் அனைத்துமே தோல்வியடைகின்றன. அறப் போராட்டம் (வன்முறையற்ற போராட்டம்) ஆயுதப் போராட்டம் என்று இரண்டு வழிகளில் தமிழ் சமூகம் பேராடிய போதும், தமிழர்களால் எதனையுமே அடைய முடியவில்லை. எழுபது வருடங்களுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டும் தமிழ் தலைவர்களால் எதனையுமே அடைய முடியவில்லை. தமிழர்கள் படித்தவர்கள் – விவேகமானவர்கள் – விண்ணர்கள் – இப்படியான எண்ணங்கள் பொது வாழ்வில் ஆக்கபூர்வமான தாக்கங்கள் எதனையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. மீண்டும் – மீண்டும் தோல்வியே நிகழ்கின்றது!
தமிழ் அரசியல் இரண்டு தடவைகள் அன்னிய தலையீடுகளுக்குட்பட்டது. முதல் தடவை பிராந்திய சக்தியான இந்தியா நேரடியாக தமிழர் அரசியலில் தலையீடு செய்தது. தமிழ் ஆயுத இயக்கங்களுக்கு பயிற்சியளித்தது. நிதியளித்தது. அவர்களை இராணுவ ரீதியாக தத்தெடுத்தது. இரண்டாவது தடவை, தமிழ் அரசியல், நோர்வேயின் மத்தியஸ்தம் என்னும் பெயரில் மேற்குலகத்தின் தலையீட்டை எதிர்கொண்டது. இரண்டு தடவைகளிலும் ஒரே விடயமே நிகழ்ந்தது. தலையீட்டின் முடிவில், தமிழ் அரசியல், இரண்டு தரப்பினரதும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் சம்பாதித்தது. உண்மையில் ஒவ்வொரு தலையீட்டின் போதும் குறித்த நாடுகளோடு தமிழர்கள் நெருக்கமான உறவை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவர்களது நட்பை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை.
உடனடி அயல்நாடான இந்தியாவின் நட்பை தமிழ் அரசியல் இழந்தது. இழந்தது மட்டுமல்ல அதனை பகைத்தும் கொண்டது. இந்தியாவின் ஆதரவை பெற முடியாவிட்டாலும் அதன் பகையை சம்பாதித்துக் கொள்ளக் கூடாது என்னும் அடிப்படையிலாவது தமிழ் அரசியல் இருந்திருக்க வேண்டும் ஆனால் அதில் தமிழ் அரசியல் தோல்வியடைந்தது. சர்வதேச அரசியல் பரப்பில் இந்தியாவை பகைத்துக் கொண்டு தமிழர்களுக்கு உதவக் கூடிய நிலையில் எந்தவொரு நாடும் இல்லை. அதுதான் தெற்காசிய பிராந்தியத்தின் யதார்த்தம். ஆனால் இந்த யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு அரசியலை கையாளுவதில் தமிழர்கள் தவறினர். இதன் விளைவாக சர்வதேச அரசியல் பரப்பில் தமிழ் அரசியல் அனாதரவான நிலைக்குச் சென்றது. இப்போதும் இதுதான் அரசியல் யதார்த்தம்.
இதில் ஒரு தரப்பினர் இப்படி ஒரு வாதத்தை வைப்பர். ஒவ்வொருவரும் தமிழர்களை தங்களது நலன்களுக்காக பயன்படுதிக் கொள்ளவே முயன்றனர். முக்கியமாக இந்தியா. இதில் விவாதிக்க ஒன்றுமில்லை. பலம்பொருந்திய நாடுகள் ஒரு விடயத்தில் தலையீடு செய்கின்றதென்றால், தங்களது நலனை நிறுத்துப் பார்த்துத்தான் ஒவ்வொரு விடயத்திலும் இறங்குவர். இப்படித்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு தலையீடுகளும் சில விடயங்களை திணிப்பதற்காகத்தான் நிகழ்கின்றன. இலங்கைத் தீவில் தலையீடு செய்கின்ற ஒவ்வொரு தரப்பினரும் சில நலன்களை அடிப்படையாகக் கொண்டுதான் தலையீடு செய்கின்றனர். இதனை புரிந்துகொண்டுதான் நாம் செயலாற்ற வேண்டும். மற்றவர்களது நலன்களோடு எங்களுடைய தேவைகளை பொருத்துவதற்கான வாய்ப்புக்களை இனம்கண்டு, அதில் வெற்றிகொள்வதில்தான் தமிழர்களின் வெற்றி தங்கியிருந்தது. ஆனால் அது நிகழவில்லை. வெறும் எதிர்ப்பு கோசங்களிலேயே தமிழ் மனம் குளிர்ந்து போனது. இப்போதும் குளிர்காய்கிறது.
இந்த விடயங்கள் ஏன் இப்போது என்னும் கேள்வி எழலாம். ஏனெனில் ஒரு விடயம் நடந்து முடிந்த பின்னர், அது தொடர்பில் பேசும் தமிழ் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளியிட வேண்டும் என்பதே இக்கட்டுரை முன்வைக்கும் வாதமாகும். அந்த அடிப்படையில் கொரோனாவிற்கு பின்னரான நிலைமைகளை கணித்து இப்போதே செயலாற்ற வேண்டிய – அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட வேண்டிய பொறுப்பு தொடர்பில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

கொரோனா உலகளவில், பொருளாதார ரீதியில் பெரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதே உலக அவதானமாக இருக்கின்றது. இந்த நிலையில் தமிழர் தரப்பினர், ஏற்படப் போகும் புதிய உலக நிலைமைகளுக்கு ஏற்ப தமிழ் சமூகத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கின்றது. ஒரு சமூகத்திற்கு பொருளாதார ரீதியான பலம் மிகவும் அவசியம். தமிழர்கள் தேசமாக சிந்திக்க வேண்டும் என்று கூறுவதற்கு பலர் இங்குண்டு. அவ்வாறானவர்கள், தமிழர்கள் பொருளாதார ரீதியில் எவ்வாறு ஒரு தேசமாக சிந்திப்பது – நிமிர்வது என்பது தொடர்பில் பேசுவதில்லை. ஏனெனில் இது மற்றைய விடயங்கள் தொடர்பில் பேசுவது போன்று, இலகுவானதல்ல. இன்று கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட பின்னர்தான் நாம் தமிழர்களுக்கான பொருளாதாரம் தொடர்பில் பேசுகின்றோம். இதுதான் நமது பக்கத்தில் இருக்கும் பெரிய குறைபாடு.
2009இல் யுத்தம் நிறைவுற்று பத்து வருடங்கள் சென்றுவிட்ட பின்னரும் கூட, வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கான ஒரு பொருளாதார நிதியத்தை தமிழர்களால் உருவாக்க முடியவில்லை. ஒரு அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் அதற்காக நிதி சேகரிக்கும் நிலையில்தான் தமிழ் சமூகமும் அதன் தலைமைகளும் இருக்கின்றன. ஜரோப்பாவில் ஒரு மில்லியனுக்கு மேல் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களது பங்களிப்புடன் ஒரு பலமான பொருளாதார நிதியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். கடந்த பத்து வருடங்கள் இதற்கு போதுமான காலமாக இருந்தது. ஆனால் எவரும் இது தொடர்பில் சிந்திக்கவில்லை. ஆகக் குறைந்தது அதற்கான ஒரு முயற்சியை கூட மேற்கொள்ளவில்லை. உதாரணமாக பத்து லட்சம் தமிழர்களில், ஆகக் குறைந்தது இரண்டு லட்சம் தமிழர்கள் ஒரு மாதத்திற்கு இருபது டொலர்கள் என்னும் அடிப்படையில் பங்களித்தால் மிகவும் பலமானதொரு தமிழ் பொருளாதார நிதியம் இப்போது தமிழர்களிடம் இருந்திருக்கும். இதற்கான ஒரு பொறிமுறை உருவாக்கியிருந்தால் இதனை செய்திருக்கலாம். ஒரு வேளை இப்படியானதொரு முயற்சி தமிழ் சமூகத்தில் சாத்தியமில்லை என்றால் தமிழர்கள் ஒரு தேசாக இல்லை என்பதை நாம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் தேசமாக சிந்திக்கிறோம் என்பது இப்படியான தகுதிநிலையை வளர்த்துக் கொள்வதன் மூலம்தான் காண்பிக்க முடியுமே தவிர, வெறுமனே தேசம் என்னும் சொல்லை உச்சரிப்பதால் நாம் தேசமாகிவிட முடியாது.
கொரோனா ஒரு நல்ல படிப்பினையை தந்திருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தமிழ் உரையாடலை மேற்கொள்ளலாம். தமிழர்களுக்கான சமூக அரசியல் பொருளாதார கட்டமைப்புக்களை பலப்படுத்த வேண்டுமாயின் தமிழர்களுக்கென்று ஒரு பலமான பொருளாதார நிதியம் அவசியம். நாஸி ஜேர்மனியால் நிலைகுலைந்து போன யூதர்கள், மீண்டும் நிமிர்ந்ததில் அவர்களது பொருளாதார பலத்திற்கு மிகப் பெரிய பங்குண்டு. விடுதலைப் புலிகள் இயக்கம் மூன்று தசாப்தங்களுக்கு மேல் தாக்கு பிடித்ததில், அவர்களது பொருளாதார பலத்திற்கு முக்கிய பங்குண்டு. தொடர்ச்சியான பொருளாதார வரத்துக்கான ஒரு வலுவான அடித்தளம் அவர்களிடம் இருந்தது. களத்திலும் புலத்திலும் இயங்கும் தமிழ் தரப்பினர் இப்போது சிந்திக்க வேண்டிய முக்கியமான விடயம் – எவ்வாறு தமிழர்களுக்கான ஒரு பொருளாதார நிதியத்தை உருவாக்குவது?




