தமிழர்களுக்கு கடவுள் கொடுத்த அடுத்த தலைவர் விக்னேஸ்வரன்
தமிழர்கள் அழிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நிர்க்கதியாய் நிற்கின்ற இவ்வேளையில் கடவுள் கொடுத்த தலைவனே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என தமிழ் மக்கள் பேரவையின் மாபெரும் எழுச்சிப் பேரணியில் பேரவையினரும் கலந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் கோஷமெழுப்பியதுடன் பேரணி ஆரம்பத்திலும் எழுச்சிக் கூட்டத்தில் முதலமைச்சரின் உரையின்போதும் மக்கள் கூச்சலிட்டு கரகோஷம் எழுப்பி முதலமைச்சருக்கு அமோக வரவேற்பை வழங்கினர்.
வட, கிழக்கு தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் நிலப்பறிப்புகள், சிங்கள குடியேற்றங்கள், வளச் சுரண்டல்கள், காணாமல்போனவர்கள் விடயம், தமிழ் அரசியல் கைதிகள் விடயம் உள்ளிட்ட பல்வேறு உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரி தமிழ் மக்கள் பேரவை நேற்றைய தினம் யாழ் நகரில் மாபெரும் பேரணியை நடத்தியிருந்தது. இந்தப் பேரணியை யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்பாகவும் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாகவும் முதலமைச்சர் தொடக்கிவைத்தார்.இதன்போது பேரணியில் கலந்துகொண்டிருந்த மக்கள் வெள்ளம் முதலமைச்சருக்கு அமோக வரவேற்பை வழங்கியது. முதலமைச்சரை வாழ்த்தியும் புகழ்ந்தும் பெரும் கூச்சலிட்ட மக்கள் காலமும் கடவுளும் கொடுத்த தலைவனே முதலமைச்சர் எனக் கூறினர்.
தொடர்ந்து முதலமைச்சர் யாழ்.முனியப்பர் கோவில் முன்றிலில் நடைபெற்ற எழுச்சிக் கூட்டத்தில் உரையாற்ற தொடங்கும் முன்னதாக முதலமைச்சரை பேச அழைத்த தமிழ் மக்கள் பேரவையினர், தமிழர்கள் அழிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நிர்க்கதியாக நிற்கும் இன்றைய நிலையில் கடவுள் கொடுத்த அடுத்த தலைவனே முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் என புகழாரம் சூட்டினர். இங்கு முதலமைச்சர் உரையாற்றுகையில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூடியிருந்த மக்கள் பெரும் கரகோஷத்தை எழுப்பியதுடன் கூச்சலிட்டு முதலமைச்சரை வாழ்த்தியதுடன் காணாமல் போனவர்களின் உறவினர்களும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் தங்கள் உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கியவாறு முதலமைச்சரை நோக்கி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி தமது பிள்ளைகளை மீட்டுத் தரும் கோரிக்கையினை முன்வைத்ததையும் காண முடிந்தது.
N5




