செய்திகள்

தமிழர் அரசியலில், மூலோபாய கூட்டு ஒன்றின் தேவை?

யதீந்திரா

இந்தியாவின் வெளியுறவுச் செயலர் தமிழ் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் வலியுறுத்தியிருந்தார். ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்திலாவது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. நீங்கள் சில அப்படையான விடயங்களில் ஒன்றுபடாவிட்டால், இந்தியாவினால் பெரிதாக எதனையும் செய்ய முடியாது என்பதுதான் இதன் பொருள். இந்திய வெளியுறவுச் செயலரின் விஜயத்தை தொடர்ந்து, மாகாண சபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் தேர்தலை வைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்துவருவதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்பதாக, தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டால், அதில் ஆச்சரியமில்லை. மாகாண சபை தேர்தல் ஒன்றுதான் அரசாங்கத்தினால் நிறைவேற்றக் கூடிய ஒரேயொரு விடயமாக இருக்கின்றது. இறுதியாக இலங்கை மீது கொண்டுவரப்பட்ட ஜெனிவா பிரேரணையிலும், மாகாண சபை தேர்தல் தொடர்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதால், தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதால், சர்வதேசத்தை எதிர்கொள்ளுவது கடினம் என அரசாங்கம் கருதலாம்.

ஆனால் இந்த இடத்தில் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அதாவது, அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்த முற்படுவதும், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல் என்பதும் ஒன்றல்ல. 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை வழமைபோல் அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டே செல்லலாம். இதுவரை செய்யாதது போல். இந்த இடத்தில்தான், இந்திய வெளியுறவுச் செயலர் வலியுறுத்தியிருக்கும் ஆகக் குறைந்தது, 13வது திருத்தச்சட்ட விடயத்திலாவது, தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்னும் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது. புதுடில்லி சில விடயங்களை வெளிப்படையாக கூறாது. கூறவும் முடியாது. நாங்கள்தான் அதில் உள்ளடங்கியிருக்கும் அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செய்த காலத்தில், 1985இல் திம்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. கருத்து முரண்பாடுகள் இருந்த போதும் தமிழ் இயக்கங்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் திம்புவில் ஒன்றுபட்டிருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கம் கூட, தனித்து செல்லவில்லை. ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்னும் பெயரிலேயே விடுதலைப் புலிகள் திம்புவில் பங்குகொண்டனர்.

அன்றைய காலத்தின் பிரதான இயக்கங்களான புளொட், தவிர்ந்த ஏனைய நான்கு இயக்கங்களும் ஈழத் தேசிய விடுதலை முன்னணியாக ஒன்றுபட்டிருந்தன. புளொட் செயலதிபர் உமா மாகேஸ்வரனுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையிலான தனிப்பட்ட முரண்பாடுகளால், ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் புளொட் இணையவில்லை ஆனால், திம்புவில் அரசியல்ரீதியில் அனைவரும் ஒரணியாகவே நின்றனர். உண்மையில் திம்பு பேச்சுவார்த்தையில் இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஓரணியாக அரசாங்கத்தை எதிர்கொண்டமையானது கொள்கைரீதியான ஒன்றல்ல. அது முற்றிலும் மூலோபாயம் சார்ந்தது.

பிராந்திய சக்தியான இந்தியாவின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியின் போது, ஒவ்வொருவரும் தனித்து நின்றால், அது தமிழர்களின் பேரம்பேசும் ஆற்றலை பலவீனப்படுத்திவிடும் என்பதால்தான் அன்று அனைவரும் ஓரணியில் நின்றனர். ஏனெனில் ஆயுத இயக்கங்களுக்கிடையில் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் இருந்தன. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈரோஸ் ஆகியவை இடதுசாரி கருத்தியில்மீது நம்பிக்கை கொண்ட இயக்கங்களாக இருந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் டெலோ ஆகியவை அவ்வாறான கருத்தியல் போக்கில் நாட்டம் கொண்டிருக்கவில்லை. அவ்வாறாயின் திம்புவில் எவ்வாறு இவர்களுக்கிடையில் இணைவு ஏற்பட்டது? இந்த அடிப்படையில்தான் நான் திம்புவை ஒரு மூலோபாய ரீதியான தமிழ் கூட்டு என்று குறிப்பிடுகின்றேன்.

இன்று அப்படியானதொரு மூலோபாய அரசியல் கூட்டு தொடர்பில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில் அப்படியானதொரு மூலோபாய கூட்டையே புதுடில்லி விரும்புகின்றது. அதனைத்தான் அவர்கள் மறைமுகமாக உணர்த்த முற்படுகின்றனர். இந்தக் கூட்டு 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல் என்னும் இலக்கை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இதுவும் புதுடில்லியின் விரும்பம்.

இன்று தமிழர் உரிமையரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் மூன்று அணிகளாக இருக்கின்றன. பிரதான அணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது. ஒப்பீட்டடிப்படையில் கூட்டமைப்பே பிரதான தலைமையாகும். அதே வேளை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் இருக்கின்றது. இந்த மூன்று அணிகளும் ஒரு மூலோபாய கூட்டாக இயங்க வேண்டியது காலத்தின் தேவையாகும். ஆனால் 13வது திருத்தச்சட்டத்தை ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக்கொண்டு பயணிப்பதில் கஜேந்திரகுமார் உடன்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ஏனையவர்கள் ஒரு மூலோபாய கூட்டுக்குள் இணைந்து கொள்வதில் பெரிய தடைகள் எவையும் இல்லை.

இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படையான ஒரு விடயமுண்டு. அதாவது அடிப்படையில் இது 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விடயமல்ல. இந்த விடயத்தை சிலர் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை அல்லது அவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில் 13வது திருத்தச்சட்டம் என்பது அடிப்படையில் இந்திய-ஈழத் தமிழர் அரசியல் ஊடாட்டத்திற்கான அடித்தளமாக இருக்கின்றது. எனவே புதுடில்லி தொடர்ந்தும் வலியுறுத்திவரும் ஒன்றை மிகச் சாதாரணமாக நிராகரித்துவிட்டு, புதுடில்லியுடன் ஈழத் தமிழர் தலைமைகள் உரையாடலை மேற்கொள்ளவே முடியாது. தமிழ் தலைமைகள் என்போர், இந்த விடயத்தை சரியாக விளங்கிகொள்ள முயற்சிக்க வேண்டும்.

தேர்தல் மேடைகளில் எதையும் பேசலாம் ஆனால் கடந்த பன்னிரெண்டு வருடங்களில் அரசியல் தீர்வு விடயத்தில், தமிழ் தலைமைகளால் எதையாவது சாதிக்க முடிந்திருக்கின்றதா? நம்பிக்கையுடன் நோக்கப்பட்ட, மேற்குலக அழுத்தங்களின் விளைவான, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையிலும் கூட, 13வது திருத்தச்சட்டம், வினைத்திறனான மாகாண சபை என்பவைதான் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் சூழலில் பிறிதொரு தவறான புரிதலும் உண்டு. அரசியல்வாதிகள் மட்டுமன்றி, சில அரசியல் கருத்துருவாக்கிகளும் இந்த தவறான புரிதலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதவாது, 13வது திருத்தச்சட்டத்தை ஒரு ஆரப்ப புள்ளியாக ஏற்றுக்கொண்டுவிட்டால், பின்னர் அதற்கு மேல் நாங்கள் பயணிக்க முடியாது. இது முற்றிலும் தவாறான அரசியல் பார்வை. இன்றைய சூழலில் முன்வைக்கப்படும் ஒன்றுதான் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று எண்ணுவது தவறானது. அரசியல் சூழல் தமிழர்களுக்கு சாதகமாக மாறுகின்ற போது, புதிய கோரிக்கைகளுடன், புதிய சூழலை தமிழர்கள் எதிர்கொள்ள முடியும். ஆனால் இப்போதுள்ள அரசியல் யதார்த்தம் என்ன என்பதுதான் இங்குள்ள கேள்வி.

எனவே இந்த கட்டுரை வலியுறுத்தும் மூலோபாய கூட்டு என்பது, அடிப்படையில் 13வது திருத்தச்சட்டம் தொடர்பானதல்ல. இது அடிப்படையில் இந்திய-ஈழத் தமிழர் அரசியல் உரையாடலை மீளவும் புதுப்பதற்கான ஒரு அரசியல் தயார்படுத்தல். இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால், இது தமிழ் கட்சிகள் தாங்களாகவே, தங்களை திம்பு இரண்டிற்கு தயார்படுத்துதல். திம்பு ஒன்று பற்றி இப்போது பிரஸ்தாபிப்பதில் எவ்வித பயனும் இல்லை. ஏனெனில் அதன் விளைவாக வந்ததுதான் இந்திய-இலங்கை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக வந்ததுதான் 13வது திருத்தச்சட்டம். இந்;த திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைக்கக் கூடிய உரிமையும் தகுதியும் ஈழத் தமிழர் அரசியலுக்கு இருக்கின்றது. ஏனெனில் இதனை முழுமையாக அமுல்படுத்தும் கடப்பாட்டை இலங்கை அரசாங்கங்கள் இதுரையில் நிறைவேற்றவில்லை. யுத்தத்தில் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ச, 13 பிளஸ் தொடர்பில் இந்தியாவிற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் இன்றுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதுவும் தமிழர்களுக்கு சாதகமான ஒன்று.

இந்த அடிப்படையில் நோக்கினால், 13வது திருத்தச்சட்டத்திலிருந்து செல்லுதல் என்பது, ஒரே நேரத்தில், இந்தியாவுடனும் மேற்குலகத்தோடும் இணைந்து பயணிப்பதற்கான அரசியல் அடித்தளம் ஒன்றை வழங்குகின்றது. ஆனால் இந்த அடிப்படையில் அரசியலை முன்னெடுக்க வேண்டுமாயின், அதற்கு இந்த கட்டுரை பரிந்துரைக்கும் மூலோபாய கூட்டு கட்டாயமான ஒன்றாகும். இந்த மூலோபாய கூட்டு ஒரு அரசியல் நிலைப்பாட்டை பிரகடணம் செய்யலாம். அதாவது, நாங்கள் அனைவரும், புதுடில்லியின், மேற்குலகத்தின் விரும்பத்திற்கு அமைவாகவே 13வது திருத்தச்சட்டத்திலிருந்து பயணிக்க இணங்குகின்றோம். ஆனால் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை அரசாங்கம் தொடர்ந்தும் தட்டிக்கழித்தால் இந்தியாவும், மேற்குலகும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இவ்வாறானதொரு நிலைப்பாட்டை தமிழ் கூட்டுத் தலைமை முன்வைக்கும் போது, அதுவே அரசாங்கத்தின் மீதான கடுமையான அழுத்தமாக மாறும். 13வது திருத்தச்சட்டத்தையாவது, முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்னும் நிர்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்படலாம். இந்திய- இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்ற காலத்தில் இருந்தது போன்ற நிலைக்கு மாகாண சபைகள் இயங்கக் கூடிய சூழல் உருவாகினால் அதுவே போதுமானது. அவ்வாறானதொரு சூழல் உருவாகினால், இந்தியாவின் உதவியுடன் வடக்கு கிழக்கை மீளவும் கட்டியெழுப்ப முடியும். இந்தியா நிச்சயம் தமிழர்களின் கோரிக்கையை தட்டிக்கழிக்காது.

ஆனால் இவை அனைத்திற்கும், இந்த கட்டுரை பரிந்துரைக்கும் ஒரு மூலோபாய கூட்டு அவசியம். மாகாண சபை தேர்தலை இந்த மூலோபாய கூட்டை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன், தற்போதுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாண சபையில் மூன்று அணிகளாக போட்டியிட்டால், வடக்கு மாகாண சபையில் கூட, கூட்டமைப்பு அறுதிப் பெரும்பாண்மையை பெற முடியாமல் போகலாம். அதே வேளை, ஏனையவர்களும், தனியாக போட்டியிடுவதன் மூலம், எதனையும் சாதிக்கப் போவதில்லை. விக்கினேஸ்வரன் தலைமையிலான அணியினர் தனியாக போட்டியிடுவதன் மூலம், ஆகக் கூடியது நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை பெறலாம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைமையும் அப்படியான ஒன்றுதான். இதனால் ஏற்படப் போகும் நன்மை என்ன? வடக்கு கிழக்கு மாகாண சபைகளில், அரச தரப்பு, பலமான நிலையில் இருப்பதற்கே, இது வழிவகுக்கும். அதே வேளை, இந்தக் கட்டுரை பரிந்துரைக்கும் மூலோபாய கூட்டு ஒரு கவர்ச்சிகரமான அரசியல் சுலோகமாகவும் இருக்கும். இதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு தேர்தல் எழுச்சியையும் உருவாக்க முடியும். தமிழ் தலைவர்கள் என்போரிடம் தெளிவுண்டானால் மூலோபாய கூட்டு என்பது எட்டாக் கனியல்ல.