தமிழர் அரசியலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும்
வீரகத்தி தனபாலசிங்கம்
வடமாகாண சபையில் மூண்டிருந்த அரசியல் நெருக்கடி முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து கடந்தவார நடுப்பகுதியில் முடிவுக்கு வந்திருந்தது. வடக்கின் மதத்தலைவர்களின் நல்லெண்ண உதவியும் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களின் சமரச முயற்சிகளும் சில வெளிநாட்டு தூதரகங்களின் வற்புறுத்தலும் இதைச் சாத்தியமாக்கின.
நெருக்கடி அடிப்படையில் முதலமைச்சருக்கும் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலானதாக இருந்த போதிலும், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான சம்பந்தனும் முதலமைச்சரும் மனந்திறந்து பேசக்கூடிய ஒரு உறவுமுறையை தொடர்ந்தும் பேணக்கூடிய ஒரு பக்குவத்தை தங்களுக்குள் வளர்த்திருந்த காரணத்தினால் நெருக்கடியை மேலும் நீடிக்கவிடாது ஒரு வார காலத்துக்குள் இணக்கப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருந்தது.

விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களினால் கையளிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படுமென்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் சம்பந்தன் அறிவித்ததையடுத்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு தன்னால் நியமிக்கப்பட்டிருந்த உயர்மட்டக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்களையும் தொடர்ந்து பதவியில் இருக்க அனுமதிப்பதாக முதலமைச்சர் இணங்கிக் கொண்டார். முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருப்பதாக விசாரணைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இரு அமைச்சர்களைப் பதவி துறக்குமாறும் முறைபாடுகளைத் தெரிவித்தவர்கள் விசாரணைகளின் போது சாட்சியங்களை முன்வைக்க சமுகமளிக்காத காரணத்தால் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களை (நடத்தப்பட வேண்டியிருக்கும் புதிய விசாரணைகளுக்கு குந்தகம் ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதற்காக) ஒரு மாத விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் முன்னதாக ஜூன் 14ஆம் திகதி மாகாண சபைக் கூட்டத்தில் வைத்து ‘தீர்ப்புக்’ கூறியிருந்தார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாதவர்கள் என்று கூறப்படுகின்ற இரு அமைச்சர்களை ‘கட்டாய விடுமுறையில்’ அனுப்புவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த முடிவையடுத்தே தமிழரசுக் கட்சி சர்ச்சை கிளப்பியது. இவ்விரு அமைச்சர்களுக்கும் எதிராக புதிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைக்குழுவொன்று அமைக்கப்படுமென்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். விசாரணைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடலாகாது என்று இரு அமைச்சர்களுக்கும் ஆலோசனை கூறுவதாக சம்பந்தன் உறுதியளித்திருந்தார். பதவிதுறந்த இரு அமைச்சர்களினதும் பொறுப்புக்களை முதலமைச்சர் இப்போது தானே ஏற்றுக்கொண்டிருக்கிறார். சம்பந்தனுடனான கடிதப் பரிமாற்றங்களையடுத்து இணக்கப்பாடு காணப்பட்டு அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்த கையோடு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுநரிடம் கையளித்ததன் மூலமாக மாகாண சபையின் தலைவரான சி.வி.கே.சிவஞானம் நடுநிலையாகச் செயற்பட வேண்டிய தனது பொறுப்பில் இருந்து தவறி பக்கச்சார்பாக நடந்துகொண்டதால் பதவி விலகவேண்டும் என்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறியிருந்தார். மாகாண சபையின் அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போது சிவஞானம் சபைக்குத் தலைமை தாங்கினார். முதலமைச்சர் அது தொடப்பில் பிரச்சினை எதுவும் கிளப்பவில்லை.
எது எவ்வாறிருந்தாலும், தனது அமைச்சர்களுக்கு எதிராக பெரும்பாலும் மாகாண சபை உறுப்பினர்களினாலேயே முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு இரு ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகளையும் ஒரு நிருவாக சேவை உயரதிகாரியையும் கொண்ட குழுவை நியமித்த முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயல் இலங்கையில் மாகாண சபைகளின் சுமார் மூன்று தசாப்த கால வரலாற்றில் முன்னுதாரணமில்லாதது என்பதில் சந்தேகமில்லை. இதற்கு முன்னர் எந்தவொரு மாகாண முதலமைச்சரும் தனது அமைச்சர்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழுவை நியமித்ததில்லை. ஆனால், விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடிய விதப்புரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடைப்பிடித்த அணுகுமுறை தொடர்பாகவே விமர்சனங்கள் எழுந்தன. மாகாண சபைகளுக்கு உருப்படியான அதிகாரங்கள் எதுவும் இல்லை என்பதே தமிழர்கள் மத்தியிலான பெரும்பாலும் உறுதியான அபிப்பிராயமாக இருக்கிறது. ஆனால், அதிகாரமில்லாத மாகாண சபையொன்றின் ‘அதிகாரமுடைய’ முதலமைச்சராக தனது செயற்பாடுகள் மூலமாகவும் நிலைப்பாடுகள் மூலமாகவும் விக்னேஸ்வரன் வெளிக்கிளம்பியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கையின் ஒன்பது மாகாணங்களினதும் முதலமைச்சர்களில் முனைப்பாக தெரிகிற முதலமைச்சராக அவரே விளங்குகிறார். தனியான வடமாகாண சபைக்கு முதன் முதலாக நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்று அதன் முதலாவது முதலமைச்சராக பதவியேற்ற அவரின் நிருவாகத்தின் கீழ் கடந்த நான்கு வருடங்களாக அச்சபை செயற்பட்டு வருகிறது. அவரின் அமைச்சரவையின் நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன என்றால், தன்னால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவே குற்றமற்றவர்கள் என்று விடுவித்திருக்கும் இரு அமைச்சர்களையும் கூட சுற்றவாளிகள் என்று முதலமைச்சரே நம்பத்தயாரில்லை என்றால் எந்த இலட்சணத்தில் அந்த மாகாணசபையின் நிருவாகம் இருந்திருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஒரு அமைச்சர் கூட குற்றச் சாட்டுக்கு அப்பாற்பட்டவராக இருக்கவில்லையே!

விசாரணைக்குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பித்து முதலமைச்சர் உரையாற்றி அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளை அறிவித்த பிறகு தோன்றிய தகராறுகளுக்குள் அரசியல் மாச்சரியங்கள் ஊடுருவ அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில் மாகாண சபையின் நிருவாகத்தின் இலட்சணம் பற்றி தமிழ் மக்கள் நோக்க முடியாத வகையில் கவனம் திசை திருப்பப்பட்டுவிட்டது என்று தான் கூற வேண்டியிருக்கிறது. அதேவேளை, வடமாகாண சபை நெருக்கடியின் நிகழ்வுப் போக்குகளை உன்னிப்பாக அவதானித்தால் தகராறு பிரதானமாக ஊழல் மோசடிகளுடனோ முறைகேடுகளுடனோ சம்பந்தப்பட்டதல்ல என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாகவிருக்கும். முதலமைச்சருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கும் இடையில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பனிப்போரை பகிரங்க அரசியல் அமளியாக வெடிக்கவைக்க உடனடி விசைவில்லாகவே நான்கு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தை நோக்க வேண்டும்.
எது எவ்வாறிருந்தாலும் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவசர அவசரமாக ஆளுநரிடம் கொண்டுபோய்க் கொடுத்திருக்க வேண்டியதில்லை. அது தவறானது என்பது மாத்திரமல்ல, தருணப் பொருத்தமானதுமில்லை. அந்த குழப்பகரமான சூழ் நிலைக்குள் முதலமைச்சராகி விடவேண்டுமென்று யாரோ ஒருவருக்கு அங்கலாய்ப்பு. அந்த நடவடிக்கையின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களின் அணுகுமுறையுடன் சம்பந்தன் எந்தளவுக்கு இணங்கிப் போனார் என்பது தெரியவில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதற்கு அடுத்த இரு தினங்களும் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு கொந்தளிப்பான நிலையே காணப்பட்டது. முதலமைச்சருக்கு ஒருமைப்பாட்டை வெளிக்காட்டி வீதி ஆர்ப்பாட்டங்களும் ஹர்த்தாலும் நடத்தப்பட்டன தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டுமென்று ஏற்கனவே ஒலித்த குரல்கள் ஓங்கியொலிப்பதற்கு இந்த நெருக்கடியைப் பயன்படுத்தின. நல்லூரில் உள்ள தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் முன்பாக கூடிய மக்கள் கூட்டத்தின் மத்தியில் நிகழ்த்திய உரைகள் மூலமாக விக்னேஸ்வரன் ஒரு, ஜனரஞ்சக அரசியல் தலைவர் , என்ற பரிமாணத்தையும் பெறத் தொடங்கியிருந்தார். அவருக்கு ஆதரவான மக்கள் பேரணி என்ற பெயரில் ஒரு ‘எழுக தமிழை’ நடத்தக்கூடிய வாய்ப்பு தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்தவர்களுக்கும் கிடைத்தது. முதலமைச்சருடன் தமிழரசு கட்சிக்கு எத்தகைய அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், அவரை பதவி நீக்குவதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கும் வடக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கப்போவதில்லை என்பதை ஒருவாரத்தைய நிகழ்வுப் போக்குகள் வெளிக்காட்டின என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் மக்களினால் பாரம்பரியமாக முன் வைக்கப்பட்டு வந்திருக்கக் கூடிய நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் மற்றும் உரிமைக்கோரிக்கைகளுக்காக (உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில்) விட்டுக் கொடுப்புக்கு இடமின்றி உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் உரத்துக் குரல் கொடுக்கின்ற ஒருவராக தன்னை முன்னிலைப்படுத்தக் கூடிய வாய்ப்பை வடமாகாண முதலமைச்சர் பதவி விக்கினேஸ்வரனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. போரின் முடிவுக்குப் பிறகு தீர்வு காணப்படாமல் இருக்கும் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்காக, குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் தொடர்ந்தும் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கும் ஆயுதப் படைகள், இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட குடிமக்களின் காணிகளில் பெருமளவிலானவை இன்னமும் மீளக்கையளிக்கப்படாமல் இருக்கின்ற நிலைமை, மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் தாமதம், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு எதிராக விக்னேஸ்வரன் இடையறாது குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்துவதுடன் மாகாணசபையிலும் தீர்மானங்களை தானேமுன் மொழிந்து நிறைவேற்றச் செய்திருக்கிறார். அதன் காரணத்தினாலேயே தமிழர்கள் மத்தியில் மதிக்கப்படுகின்ற ஒருவராக அவர் விளங்குகிறார். கோட்பாட்டுப் பிடிவாதமுடைய தமிழ்த் தேசிய வாதியாக அவர் தோற்றமளிக்கிறார்.ஆன்மீக ஈடுபாடு கொண்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் என்ற படிமம் காரணமாக அவரை பொதுவாழ்வில் நேர்மையானவராகவும் மக்கள் பார்க்கிறார்கள். ஆனால், அத்தகைய ஒருவரின் தலைமையின் கீழ் இயங்கிய ஒரு மாகாண சபையில் ஊழல் முறைகேடுகள் எவ்வாறு இடம்பெறக்கூடியதாக இருந்தது?
தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை அல்லது புதிய தலைமை என்று வரும்போது அது இன்றைய நிலையில் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமின்றி, சம்பந்தன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அல்லது அந்தக் கூட்டமைப்பின் பெரிய கட்சியாக விளங்குகின்ற தமிழரசுக் கட்சிக்கு மாற்றான ஒரு புதிய அமைப்பொன்றை வேண்டி நிற்கின்ற கோரிக்கையேயாகும். உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வலுவானதும் கட்டுறுதியானதுமான அரசியல் சமுதாயம் ஒன்று இருக்கவில்லை. நாளடைவில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான அரசியல் அணியாக கூட்டமைப்பு தன்னைத் தகவமைத்துக் கொண்டாலும், அதன் அணுகுமுறைகள், செயற்பாடுகளில் இருக்கக்கூடிய குறைபாடுகள், போதாமைகள் குறித்து தமிழர்கள் மத்தியிலிருந்து பெருவாரியான விமர்சனங்கள் கிளம்பவே செய்தன. 2013 செப்டெம்பர் வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சகல அங்கத்துவக் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் முதலமைச்சர் வேட்பாளராக சம்பந்தனால் களமிறக்கப்பட்ட விக்னேஸ்வரன், வடபகுதி மக்களின் மகத்தான ஆதரவுடன் வெற்றிபெற்று பதவியேற்ற பிறகு கூட்டமைப்பிலிருந்து குறிப்பாக தமிழரசுக்கட்சியிடமிருந்து தன்னை அரசியல் ரீதியில் தூரவிலக்கிக் கொள்ளவதிலேயே அக்கறை காட்டினார். தன்னை கூட்டமைப்பின் சார்பிலான வடமாகாண முதலமைச்சர் என்று கூறுவதற்குக் கூட அவர் தயங்குவது போன்று தெரிந்தது. முதலமைச்சர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் எந்தவொரு அங்கத்துவக் கட்சியினதும் உறுப்பினராக முறைப்படியாக சேர்ந்துகொள்ளவில்லை.

என்றாலும் தமிழரசு கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிடும் ஒரு வேட்பாளராகவே அவர் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தார். 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அவர் ஆதரிக்கவில்லை என்பது மாத்திரமல்ல, தமிழ் மக்கள் ஆதரிப்பதையும் அவர் விரும்பவில்லை. தனது அணுகு முறைகள் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டமைப்பிற்கு பொறுப்புக் கூற வேண்டியவராக தன்னை அவர் கருதவில்லை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்துடன் இணக்கப்போக்கைக் கடைப்பிடித்து, புதிய அரசியலமைப்பொன்றின் மூலமாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு சம்பந்தனும் கூட்டமைப்பும் பின்பற்றுகின்ற அணுகுமுறையை எதிர்க்கின்ற அரசியல் கட்சிகளுடன் தன்னை அடையாளப்படுத்துகின்ற போக்கை நாளடைவில் முதலமைச்சர் வளர்த்துக் கொண்டார். இதன் விளைவே சிவில் சமூக அமைப்பு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையாகும்.
தான் எந்தவொரு கட்சியிலும் உறுப்பினராக சேருவதென்றால் அது தமிழரசு கட்சியாகவே இருக்க முடியும்.
ஏனென்றால் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் முன்னாள் ஆயுதக் குழுக்களே என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறியவர் விக்னேஸ்வரன் . பேரவை அரசியல் கட்சியாக மாற்றப்படப் போவதில்லை என்று உறுதிமொழி வழங்கப்பட்டதையடுத்தே அதில் இணைந்து செயற்படவும் இணைத்தலைவரக இருக்கவும் இணங்கிக் கொண்டதாக அவர் கூறிக்கொண்டார். ஆனால், பேரவையின் தோற்றத்துக்குப் பின்னரே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் அணியொன்றைத் தோற்றுவிப்பது ஒப்பேறக்கூடிய காரியம் என்ற எண்ணம் அல்லது நம்பிக்கையைத் தோற்றுவிக்கக்கூடிய பிரசாரங்களை முனைப்புடன் முன்னெடுக்க தமிழரசு கட்சிக்கு எதிரான சக்திகளினால் இயலுமாக இருக்கிறது. பெருமளவுக்கு விக்னேஸ்வரனின் வகிபாகம் காரணமாகவே தமிழ் மக்கள் பேரவை தமிழர் அரசியல் அரங்கில் ஒரு தீவிர உப கட்சியாக அல்லது சமாந்தரமான அமைப்பாக தோற்றமளிக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்தப் பின்னணியிலேயே புதியதொரு அரசியல் அணிக்கு அண்மைய எதிர்காலத்தில் விக்னேஸ்வரன் தலைமை தாங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் தோற்று விக்கப்படுகின்றன வடமாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடியில் விக்னேஸ்வரனுக்கு ஒருமைப்பாட்டை வெளிக்காட்டிய அரசியல் கட்சிகளும், குழுக்களும் புதிய அரசியல் அணியொன்றை உருவாக்குவதற்கான தங்கள் வியூகத்தில் கணிசமான தூரம் முன்னோக்கி நகர்ந்துவிட்டன என்றே தோன்றுகிறது.
வடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒருவருடமும் மூன்று மாதங்களுமே இருக்கின்றன. அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக விக்னேஸ்வரன் தனது அரசியலின் புதிய மார்க்கம் குறித்து அல்லது தனது அரசியல் எதிர்காலம் குறித்து வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய நிலை உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
புதிய தலைமைத்துவத்தின் அவசியம் குறித்து வலியுறுத்துகின்ற அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் ஒன்றும் அரசியலுக்கு புதியவர்கள் இல்லை. இவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலில் ஈடுபட்டுவருவதுடன் ஏற்கனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் அல்லது இப்போதும் அடையாளப்படுத்திக் கொள்பவர்களே. இவர்களின் புதிய தலைமைக்கான கோரிக்கை தங்களைத் தாங்களே புதிய தலைமைத்துவத்துக்குத் தகுதியற்றவர்கள் என்று நிராகரிப்பதுபோன்றும் அர்த்தப்படுகிறது. அந்தப் ‘புதிய தலைமையை’தங்களால் வழங்க முடியும் என்று வெளிக்காட்ட முனையாமல் தங்களைவிடவும் வயதில் மூத்தவரும் சம்பந்தனால் அடையாளம் காணப்பட்டு அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவருமான முதலமைச்சரை ஏன் முன்தள்ளுகிறார்கள்? தமிழ் மக்களைப் பொறுத்த வரை இன்று அவசியமாகத் தேவைப்படுவது புதிய தலைமைத்துவம் என்ற பெயரில் புதிய அரசியல்வாதிகள் அல்ல, புதிய அணுகுமுறைகளே. அத்தகைய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூடியவர்களாக இன்றைய தமிழ் அரசியல்வாதிகளில் அதிகப் பெரும்பான்மையானவர்களை அடையாளம் காணமுடியவில்லை. தமிழ் அரசியல் சக்திகளின் இன்றைய பலவீனமான நிலை மூன்று தசாப்தகாலப் போரின் பாதிப்புகளின் தவிர்க்க முடியாத விளைவு. இதற்கு தனிப்பட்ட முறையில் தமிழ் அரசியல் வாதிகளைக் குறைகாண்பது உகந்த செயல் அல்ல.
போரில் தோல்வி கண்டவர்களாக தமிழ்ச் சமூகத்தை நோக்கும் சிங்கள அரசியல் சமுதாயத்திடம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எதிர்பார்த்து நிற்கின்ற ஒரு துரதிர்ஷ்ட வசமான நிலையில் தமிழ் மக்களை வழிநடத்துவதென்பது உணர்வெழுச்சியான பேச்சுக்களையும் முழக்கங்களையும் செய்வது அல்ல. கொழும்பு மீது சர்வதேச சமூகத்தின் நெருக்குதலை அதுவும் குறிப்பாக மேற்குலக நாடுகளின் நெருக்குதலை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட அரசியல் தந்திரோபாயத்தையே கூட்டமைப்பும் சரி அதை எதிர்க்கின்றவர்களும் குறிப்பாக தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளவர்களும் சரி கடைப்பிடிக்கிறார்கள்.
அதைத் தவிர அவர்களால் வேறு எதையும் செய்ய முடியவில்லை என்பது கூட அவர்களைக் குறை காண்பதற்காகச் சொல்லப்படுகிற கருத்தல்ல.
அத்தகைய இடரார்ந்த நிலையில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்கக்கூடியதாக ஒப்பேறக் கூடிய அரசியல் தந்திரோபாயத்தை வகுப்பது பற்றிச் சிந்திக்காமல் மாற்றுத் தலைமை….. புதிய தலைமை….. புதிய அணி என்று உரக்கப் பேசுவது வெறுமனே ஆளுமைகளுக்கிடையிலான அரசியல் மாச்சரியமாகவே அர்த்தப்படும்.




