தமிழர் பிரதேசங்களில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
இன்று மாலை 6.05 மணிக்கு மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
இதன்படி யாழில் தீவகம் சாட்டி, கோப்பாய், கொடிகாமம், உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லங்களிலும், வல்வெட்டித்துறை தீருவில் திடல், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில், கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதோடு, அம்பாறையில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.




