செய்திகள்

தமிழில் தேசிய கீதம் பாடியதற்காக அதிகாரி மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்

கிழக்குப்  பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற  கண்காட்சியின் நேற்றைய இறுதி நாள் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டதால் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் கிழக்குப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் கடும் தாக்குதலுக்குள்ளாகிப் படுகாயமடைந்துள்ளார்.

விதாதா வள நிலையமும் செங்கலடி பிரதேச செயலகமும் இணைந்து கடந்த மூன்று தினங்களாக கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்தக் கண்காட்சியை நடத்தின.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் கண்காட்சியின் இறுதி நிகழ்வில் தமிழில் தேசிய கீதம்  ஒலிபரப்பப்பட்டது. இதற்கு பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்களினால் கடும்  எதிர்ப்பு தெரிவிக்கப்படவே மீண்டும் சிங்களத்தில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்ட நிலையில் திடீரென சிங்கள மாணவர்கள் சிலர்  பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது  கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.