தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு அனுமதிக்க முடியாது: உதய கம்பன்பில் உறுதி
எமது நாட்டின் அரச தேசிய நிகழ்வுகளில் ஒரு போதும் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று மேல்மாகாண சபை உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமையின் தலைவருமான உதய கம்பன்பில எனவும் தெரிவித்தார்.
தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடுவது தொடர்பில் சட்டபூர்வ உரிமை நாடு முழுவதிலும் அமுலாக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருப்பதானது புதிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் உள்ளடக்கப்படாதொன்று என்றும் தெரிவித்தார்.
தூய்மையான ஹெல உறுமய அமைப்பினரின் ஊடகவியலாளர் சந்திப்பு மேல் மாகாண சபை அழகியற் கலையரங்கில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே உதய கம்பன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது தொடர்பின் சட்டபூர்வ உரிமை நாடு முழுவதும் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால குறிப்பிட்டிருப்பதற்கு நாம் ஒரு போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மறுபுறம் எமது நாட்டின் தேசிய ரீதியான அரச நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க போவது இல்லை. அவ்வாறு நடந்திடும் பட்சத்தில் நாம் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வருவதற்கும் தயங்கிட மாட்டோம். புதிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் இவ்வாறான விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
உலக நாடுகளை எடுத்து கொண்டால் பல்வேறு மொழிகளை பிரதிநிதுவப்படுத்தும் சில நாடுகள் ஒரு மொழயினை பிரதிநிதுவப்படுத்தியே தேசிய கீதத்தை பாடுகின்றனர் எமது நாட்டில் இவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கும் எமது சட்டத்தில் இடமும் இல்லை என தொிவித்தார்.




