தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சட்டபூர்வமாக முன்னெடுக்கத்தூண்டும் இலங்கையின் இடைக்கால அரசியல் வரைபு
அண்மையில் இலங்கை அரசினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான வரைபு. ஈழத்தமிழர்கள் அடிப்படைக் கோரிக்கையான வடகிழக்கிற்கான சமஸ்டி ஆட்சியினை முற்றாக நிராகரிக்கின்றது. இவ் வரைபில் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைய முடியாதபடி பிரிக்கின்றது. வடக்கு கிழக்கை சுயாட்சி அலகாக ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணத்தினையும், சிங்கள பௌத்த நாடாகத் திணிக்கும் தன்மையும் காணப்படுகின்றது. அரசின் இத்தகைய இனவிரோதச் செயற்பாடு ஈழத்தமிழர்களைத் தாமாகவே தமக்குரிய அரசியல் எல்லைகளை வரையறுக்க, சுயநிர்ணய உரிமைகளைப் பெற, சுய வாக்கெடுப்பினை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். (Exercise of democratic self determination) இதனையே உத்தேச அரசியல் வரைபு ஈழத்தமிழர்களுக்கும், சர்வதேசத்திற்கும் எடுத்துச் சொல்கின்றது.
2008 – 2009இல் பாரிய அழிவுகளைச் சந்தித்த தமிழ் இனத்திற்கு புதிய அரசியலமைப்பும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கான ஒரு உபகரணமாகவே தென்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு, அதிகாரச் சர்வாதிகாரம், இராஜதந்திர ஆக்கிரமிப்பு மூலம் தமிழ் மக்களைத் தொடர்ந்தும், அடக்கமுடியாது என்பதனைக் காட்ட சுயநிர்ணய பிரகடனத்தை ஈழத்தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்.
காலம் காலமாக இலங்கையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு தமிழின அடக்குமுறையை நோக்கியே அமைந்து இருந்தன. 1972ம் ஆண்டு அரசியலமைப்பு, பொதுநலவாய நாடுகளின் பொருளாதார பலத்துடன் மேற்கொள்ளப்பட்டது. 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு அணிசேரா நாடுகளின் பலத்துடன் மேற்கொள்ளப்பட்டது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பே ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படவும், சுமார் இரண்டு இலட்சத்திற்கு அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்படவும் காரணமாக அமைந்தது. தற்போது 2017இல் பிறிக்ஸ் நாடுகளின் பொருளாதாரப் பலத்துடன் முன்னைய அரசியலமைப்பின் 13ம் திருத்தத்தில் உள்ள சில சலுகைகளையும் இல்லாமல் செய்து விடும்.
தமிழர் தரப்பிற்கும், சிங்கள அரசிற்கும் இடையிலான அரசியல் பேச்சு வார்த்தைகளை அணுகினால் 1984 தொடக்கம் 2005 வரையான பேச்சுவார்த்தைகள் பறியினுள் மீன் உள்ள உத்திமுறை அவதானிக்கப்பட்டது. (Fish a bag Strategy) இதன்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதபலமே பேரம் பேசும் சக்தியாக அமைந்தது. 2005 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதி விடுதலைப்புலிகளுடனான பேச்சு வார்த்தைகளை மகிந்த அரசு முறித்துக்கொண்ட காலமாக சர்வதேச அனுசரணையைப் புறந்தள்ளிய காலமாக அமைந்தது. இது கடினப்பந்து உறுதியாக அமைந்து பாரிய அழிவினைத் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி, தமிழீழ விடுதலைப்புலிகளும் முற்றாக அழிக்கப்பட்டனர் அல்லது செயலிழக்கப்பட்டனர்.
2009 தொடக்கம் 2017 வரையான காலத்தை அணுகும்போது தமிழீழ விடுதலைப்புலிகளை வென்ற மமதையில் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை முற்றாகப் புறம் தள்ளுகின்றது. ஆனால் தமிழின அழிப்புக்கான ஆதாரங்கள் ஐநாவில் போர்க்குற்றங்கள் வடிவில் இருப்பதனால், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை மேற்கொள்வதாகப் பாசாங்கு காட்டுவதற்கே தற்போதைய அரசியல் வரைபு தொடர்பான காலங் கடத்தல்கள். இதற்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகளும் துணைபோயுள்ளமை மிகவும் துரோகத்தனமான செயலாகும். இலங்கை அரசு வெளிப்படையாகப் பேச்சுவார்த்தைகளை தமிழ்த்தரப்புடன் மேற்கொள்ளவில்லை. இக்காலத்தினை மாமிசக்கோழி உத்தி என வரையறுக்கலாம். (Chicken Strategy) இங்கு இருதரப்பும் இழப்பைச் சந்திக்கின்ற நிலையே உள்ளது. அதாவது நாடு பிரிவினையை நோக்கி நகர்கின்றது.
தற்போதைய இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பிறிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளதால், ஈழத்தமிழர்கள் ஐக்கிய அமெரிக்காவின் அனுசரணையிலான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். அன்றேல் ஈழத்தமிழர்களின் தாயக அடையாளம் முற்றாக இழக்கப்பட்டுவிடும். அதனையே புதிய அரசியல் யாப்புவரை எமக்குத் தெளிவுபடுத்துகின்றது. எம்மை நாமே தீர்மானிப்போம் என கூட்டான நடவடிக்கையினை தமிழினம் எடுக்க வேண்டும். (Right to Decide as a Collectively exercised) .
சிவா செல்லையா




