செய்திகள்

தமிழ்க் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது நல்லிணக்கத்துக்கு தடை: சம்பந்தன்

விடுதலை செய்வதாக அரசாங்கம் தெரிவித்த கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பது நல்லிணக்க நடைமுறைகளுக்கு தடையாக அமைகிறது எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை சமர்ப்பித்த ஒத்திவைப்புப் பிரேரணையிலேயே சம்பந்தன் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது தொடர்பான தமது பிரேரணையில் சம்பந்தன் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“பயங்கரவாத் தடைச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல மோசான ஏற்பாடுகள் காரணமாக அச்சட்டத்தை நீக்குவதாக அராங்கம் தொடர்ச்சியாக வாக்குறுதி வழங்கிவந்திருக்கின்றது. ஆயுதப் போராட்டத்திலிருந்து தோன்றிய பல்வேறு குற்றங்களுக்காக சொல்லப்பட்ட சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பல தமிழர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து இப்போது ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. பெருமளவு காலம் கடந்துவிட்ட போதிலும், தடுப்புக் காவலிலுள்ள இந்த தமிழ்க் கைதிகளின் பிரச்சினைக்கு இன்னும் முடிவு ஏற்படவில்லை என்பதோடு பலர் நீண்டகாலம் தடுப்புக் காவலில் உள்ளனர். இக்கைதிகள் தமது விடுதலையைக் கோரி காலத்துக்குக் காலம் பல்வேறு எதிர்ப்புக்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டைக் கூறுவதும், சொல்லப்பட்ட கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதும் கட்டாயமாகும். அவர்கள் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் இருப்பது அவர்களுடைய குடும்பங்களுக்கு அளப்பரிய துன்பங்களையும், தொல்லைகளையும் ஏற்படுத்துவதோடு, நல்லிணக்க நடைமுறைக்கும் தடையாக அமைகிறது. இக்கைதிகளின் உண்மையான பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எவ்வித உணர்வுமற்றதாகவே பார்க்கப்படுகின்றது.”

-06