செய்திகள்

தமிழ் உரிமை காக்க தமிழ்நாட்டில் புதிய கூட்டமைப்பு உருவாகியது

1965 ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டை நினைவுகூர்வதற்கும் அதை மொழி உரிமை ஆண்டாகக் கடைப்பிடிப்பதற்கும் தமிழ்நாட்டில் மொழி உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் என்கிற ஒரு புதியக் கூட்டமைப்பு சென்னையில் இன்று தொடங்கப்பட்டது.

தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்குவது, தமிழ்நாட்டில் அனைத்துத் தளங்களிலும் தமிழ் ஆட்சிமொழி என்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு மொழி உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்து பல தமிழ் அமைப்புகளும் மக்கள் அமைப்புகளும் தமிழறிஞர்களும் படைப்பாளிகளும் சேர்ந்து இந்தக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக எழுத்தாளரும் மக்கள் இணையம் கட்சியின் பொதுச்செயலருமான திரு ஆழி செந்தில்நாதன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டியக்கத்தின் நெறியாளுகைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக எழுத்தாளர் திரு. பா.செயப்பிரகாசம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழகத்தில் இதுவரை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நினைவாக பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய கூட்டியக்கம் முடிவு செய்திருக்கிறது. 1965 மொழிப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சனவரி 25 மொழிப் போர்த் தியாகிகள் தினத்தை இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் நடத்துவது என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

சென்னையிலும் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் இந்தி எதிர்ப்புப் போரில் பேரளவு உயிரிழப்பும் தியாகங்களும் நடந்த நகரங்களிலும் சனவரி 25 இல் எல்லா இயக்கங்களும் இணைந்து நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது. அத்துடன், 1938 இல் முதலில் மொழிக்காக உயிரீந்த தியாகி நடராசன் நினைவு நாளான சனவரி 15 இல் அவருக்கு சிறப்பு நினைவேந்தல் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிழக்ச்சியில் கலந்துகொண்ட மொழி உரிமைச் செயல்பாட்டாளர்கள், தமிழ் மொழிக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய தேவை முன்பைவிட இப்போது அதிகமாக இருக்கிறது என கருத்து தெரிவித்தார்கள். நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு மிகத்தீவிரமாக இந்தியையும் சமற்கிருத்ததையும் திணித்துக்கொண்டிருக்கிறது என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள். மோடி அரசின் மொழிக்கொள்கை காரணமாக விரைவில் மத்திய அரசின் எந்த துறையிலும் தமிழர்கள் நுழையமுடியாதச் சிக்கல் வரும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தார்கள். தமிழ்நாட்டில் கல்வித் துறையில் தமிழின் நிலை பற்றியும் கவலை தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய பேரியக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, தமிழ்த்தேச மக்கள் கட்சி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழக மக்கள் புரட்சிக் கழகம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழ் இளைஞர்கள் – மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ்த்தேச நடுவம், மக்கள் இணையம், தமிழர் பண்பாட்டு நடுவம், தமிழர் முன்னணி, தமிழர் முன்னேற்றக் கழகம், தமிழர் விடுதலைக் கழகம், தமிழ் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம், தென்மொழி இயக்கம், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம், மக்கள் வழக்கறிஞர் கழகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு மாணவர் இணையம், தமிழியக்கம், பாவேந்தர் பேரவை, கொற்றவை இலக்கிய இயக்கம், சிங்காரவேலர் பெரியார் பேரவை, வளரி ஆகிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ் மொழிக்காக போராடிய சான்றோர்களும் 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் கலந்துகொண்ட தியாகிகளும் மாணவர் அமைப்பினரும் புதிய கூட்டமைப்பின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

மேலும் பல அமைப்புகளையும் தமிழறிஞர்களையும் இணைத்துக்கொண்டு கூட்டியக்கம் பல போராட்டங்களையும் பரப்புரை இயக்கங்களையும் நடத்தும் என்று ஒருங்கிணைப்புக் குழுவினர் கூறினார்கள்.1

2

3

4

6