தமிழ் தேசியக் கூட்டமைப்பு உயிர்திருக்கிறதா…?
ருத்திரன்-
புதிய அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளிவந்ததன் பின்னர் பல தரப்பினருடன் உரையாடிய போது பலராலும் எழுப்பப்பட்ட கேள்வி இந்த தலைப்பை தெரிவு செய்ய தூண்டுகோலாக அமைந்தது.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் முதலாவதாக இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலைக் தொடர்ந்து கூட்டமைப்பின் போக்கு குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலவுவதை காணமுடிந்தது. அந்த அதிருப்தியானது இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்னர் கோபமாக மாறியிருப்பதை உணரமுடிகிறது. தாங்கள் பெரிதும் விரும்பிய, மிகவும் எதிர்பார்த்து இருந்த ஒரு அரசியல் தலைமை தமது எதிர்பார்ப்புக்களையும், அபிலாசைகளையும், எதிர்கால சகஜ வாழ்க்கையையும் குழி தோண்டி புதைத்து விட்டதாக அவர்கள் மத்தியில் விரக்தியும் கோபமும் ஏற்பட்டு இருப்பதை உணர முடிகிறது.
2010 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச சமூகம் இலங்கை அரசின் மீது கொடுத்த அழுத்தத்தை, தாங்கள் மிகவும் நேசித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பே நீர்த்துச் போகச் செய்தமையானது தமிழ் மக்களை மிகவும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. சர்வதேச சமூகத்தின் அழுத்த்தின் காரணமாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிண்ணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த ஆணைக் குழு சில பரிந்துரைகளுடன் கூடிய ஒரு அறிக்கையை அன்றைய மஹிந்தா அரசாங்கத்திடம் கையளித்தும் இருந்தது. அந்த அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியது. அந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமமைப்பு நேரடியாக ஜெனீவா சென்று தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து எடுத்துரைக்கும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்திருந்தார். பின்னர் கூட்டமைப்பு கட்சிகளுடன் கலந்துரையாடமலேயே, ஜெனீவா செல்வதில்லை என்ற முடிவை அவரே அறிவித்தார். இது அன்றைய அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
யுத்தம் நடந்து முடிந்த கையோடு போரில் நேரடி சாட்சியாகவிருந்த தமிழ் மக்களின் கருத்துக்களை தங்களது பிரதிநிதிகள் நேரடியாக ஜெனீவாவில் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து உரிய அழுத்தம் இன்மை காரணமாக இலங்கை அரசாங்கம் மெத்தனப் போக்கை கையாண்டதுடன், வெற்றிவாதத்தில் மிதந்த மஹிந்த ராஜபக்ஸ தனது அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டு தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதற்கும் திட்டமிட்டு இருந்தார். தாங்கள் கொடுத்த கால அவகாசத்தில் இலங்கை அரசாங்கம் தானே முன்வந்து மேற்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தாமையின் காரணமாக ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கோபத்திற்கு இலங்கை அரசாங்கம் உள்ளானது. இது ஆட்சி மாற்றத்திற்கும் வழிகோலியது.
ஆட்சி மாற்றம் ஏற்படவுடன் நடைபெற்ற 30 ஆவது மனிதவுரிமைகள் ஆணையகக் கூட்டத்தில் இலங்கை அரசதாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் பல்வேறு நெருக்குதல்களை ஏற்படுத்தியதுடன், புதிய அரசாங்கம் அவைகளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தையும் வழங்கி, அதற்கு இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையையும் பெற்றுக் கொண்டது. போர்க்குற்றம், மனிதவுரிமை மீறல், மனிகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் பரிந்துரை செய்திருந்தார். ஆனால், அதனை ஒரு கலப்பு பொறிமுறையாக கூட்டமைப்பின் பபாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கூட்டமைப்பினருடன் கலந்து விவாதிக்காமலேயே முடிவு எடுத்திருந்தார். இது குறித்து கூட்டமைபபின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்று மட்டுமே தனது ஆட்சேபனையை வெளியிட்டு இருந்தது. ஏனைய இரண்டு கட்சிகளும், தங்களது கருத்துக்கள் எதையும் முன்வைக்கவில்லை.
இதன்காரணமாக ஐ.நாவில் 2017 வரை கால அவகாசம் பெற்றுக் கொண்ட அரசாங்கம் தான் வழங்கிய இணை அணுசரணைக்கு ஏற்ப இதயசுத்தியுடன் செயற்பாடாமல், அழுத்தத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டிருந்தது. மேலும், எக் காரணம் கொண்டும் சர்வதேச நீதிபதிகளோ, சட்டத்தரணிகளோ ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்றும், எந்த ஒரு படைத்தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட மாட்டார்கள் என்றும் அரசாங்கம் திட்வட்டமாக தெரிவித்திருந்தது. இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற எந்தவொரு கட்சியும் வினைத்திறன் மிக்க வகையில் தங்கள் எதிர்ப்பை வெளியிடவில்லை.
இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனிதவுரிமைக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் இணை அணுசரணை வழங்கி ஏற்றுக் கொண்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்குவதற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுப்பதற்கு பதிலாக, தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்ற மற்றும் மகாணசபை உறுப்பினர்களை கூட்டி கால அவகாசம் வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர். இதற்கு முன்னர் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 11 பேரும், கனிசமான அளவு மாகாணசபை உறுப்பினர்களும் கால அவகாசம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். இதில் அங்கத்துவ கட்சிகள் மூன்றின் பிரதிநிதிகளும் அடக்கம். கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னரான இந்த முடிவு மாற்றத்தில் ஈபிஆர்எல்எப் தவிர்ந்த ஏனையவர்கள் தாம் முன்னர் கொண்டிருந்த நிலைக்கு மாறான ஓரு முடிவை எடுத்திருந்தனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே சர்வதேச விசாரணை முடிந்து விட்டது. இனி அந்த விசாரணையைக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டும் என்று தமிழரசுக் கட்சி கூறிய போது அங்கத்துவ கட்சிகள் தங்களது எதிர்ப்பை வெளியிடவில்லை. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீள் கட்டியெழுப்புவதற்கான நிதியை போதுமானளவுக்கு ஒதுக்காமல் யுத்தச் சூழல் அற்ற நிலையில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கியமைக்கு ஒரு கட்சியை தவிர, கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தன. தமிழர் பகுதியில் அதிக அளவில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்று கோரியவர்கள், பாதுகாப்பு தரப்பினருக்கான செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டது குறித்து முறையான கண்டனங்கள் எதனையும் வெளியிடவில்லை. இந்நிலையில் வடக்கு – கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் மக்களின் காணிகளில் இருந்து வெளியேறுவதற்கு மீள் குடியேற்ற அமைச்சிடம் இருந்து நிதி உதவி கோரியிருந்தனர். இதனை கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் எவரும் தட்டிகேட்க முன்வரவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளான காணி விடுவிப்பு, காணாமல் போகச் செய்யப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவை தொடர்பில் வினைதிறன் மிக்க செயற்பாடுகள் எவையும் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்படவில்லை. இவை அனைத்துக்கும் மேலாக மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தாமே வீதியில் இறங்கிப் போராடுகின்ற போதும் அதற்கு அணுசரனையான எத்தகைய செயற்பாடுகளையும் அந்த மக்களின் பிரதிநிதிகள் வெளிப்படுத்தவில்லை.
பாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளும், பாராளுமன்றத்திற்கு வெளியில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், தொழில் சங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பொதுச் சபையின் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிக் கொணர்வதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையை தமிழரசுக் கட்சி தலைமை உண்மையை அறிந்து கொள்ளாமல் தனக்கு எதிரான ஒரு அமைப்பாக கருதி அதற்கு ஆதரவு அளிப்பவர்களை கூட்டமைப்பின் எதிரிகளாக சித்தரித்தது. இதனை அங்கத்துவக் கட்சியான ரெலோ எதிர்க்கவில்லை.
இவைகளுக்கு சிகரம் வைத்ததைப் போன்று அண்மையில் வழிநடத்தல் குழுவினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை அமைந்திருக்கின்றது. இதுவரை காலமும், இடைகடகால அறிக்கை வந்த பின் பாருங்கள். அதில் தனிநாட்டைத் தவிர ஏனைய அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும். அது வந்ததன் பின்னர் நாங்கள் செய்த பணி உங்களுக்கு தெரிய வரும் என்று கூறிய தமிழரசுக் கட்சி இன்று அது குறித்து வாய்திறக்க வேண்டாம் என்று சொல்கிறது. வழிநடத்தல் குழுவில் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சியைத் சேர்ந்த இருவர் மட்டுமே அங்கம் வகித்த நிலையில் அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து இருக்க வேண்டும். அல்லது கலந்துரையாடலை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று அங்கத்துவ கட்சிகள் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஈபிஆர்எல்எப் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க கூட்டப்பட்ட கூட்டத்தில், அக்கட்சியினால் வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய இரண்டு கட்சிகளும் கருத்து தெரிவித்ததாக தெரியவில்லை.
வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு ஒன்றுக்கு தலைமை தாங்கிய கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகளின் ஒன்றான புளொட்டின் தலைவர் தனது பரிந்துரைகள் எந்தளவிற்கு இடைக்கால அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளது என்ற கருத்தை இதுவரை வெளியிடவில்லை. மேலும் இது வெறும் இடைக்கால அறிக்கை தான், முழுமையான அறிக்கை வரும் வரையில் பொறுமை காக்க வேண்டும் எனக் கூறி, அதில் உள்ள குறைபாடுகளையும் சுருக்கமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்ளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் மட்டுமே முடிவுக்கு வந்துள்ளது. மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படும் வரையிலும், உரிமைகளை வென்றெடுக்கும் வரையிலும் எமது போராட்டம் தொடரும் என்று கூறியவர்கள் இனி எதற்காக போராட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இணைந்த வடக்கு – கிழக்கில் ஒரு சமஸ்டி அலகை கோருவதற்கு தமிழ் தேசிய இனத்திற்கு முழு உரித்தும் உள்ளது. அதை எவரும் தட்டி பறிக்க முடியாது என்று சொல்லி அதற்காக மக்களது ஆணையைப் பெற்றவர்கள் இன்று அவைகள் சாத்தியமில்லை என்று சொல்வதன் மூலம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கி விட்டார்கள் என்று தமிழ் சமூகத்தினர் கருதுகின்றனர். இதன்காரணமாகவே முதன்மையானதும், முக்கியமானதுமான கொள்கையில் இருந்து நிலைபிழறழ்ந்த இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் உயிர்திருக்கிறதா என்ற கேள்வியை தமிழ் மக்களுடன் சோந்து நாமும் கேட்க வேண்டியுள்ளது.
N5



