செய்திகள்

தமிழ் தேசியம் ஒரு தோல்வி வாதமா?

யதீந்திரா

சில தினங்களுக்கு முன்னர் விக்கினேஸ்வரன் கூறியதான ஒரு தகவல் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, விக்கினேஸ்வரன் ஒருவரின் சாதியை கேட்டதாகக் கூறி, அவர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஒரு படித்த மனிதர் இவ்வாறு கேட்கலாமா – இவரை அரசியலுக்கு கொண்டுவந்தவர்கள் தவறிழைத்துவிட்டனர், என்றவாறு விக்கினேஸ்வரனை பலரும் சமூக ஊடங்களில் விமர்சித்திருந்தனர். ஆனால் விக்கினேஸ்வரன் தான் சாதியை கேட்டதை மறுக்கவில்லை. அது பல வருடங்களுக்கு முன்னர் தனிப்பட்ட உரையாடல்  ஒன்றின் போது, கேட்கப்பட்ட விடயம், இப்போது அரசியல் நோக்கத்திற்காகவே அது தொடர்பில் பேசுகின்றனர் – என்று விக்கினேஸ்வரன் பதலளித்திருக்கின்றார்.

இந்த இடத்தில் எழும் கேள்வி. ஒரு வேளை விக்கினேஸ்வரன் வெளிப்படையாக கேட்காமல், மற்றவர்களை போன்று, சாதிய மேலாதிக்க எண்ணத்தை தலைக்குள் பாதுகாத்துக் கொண்டு, உதட்டளவில் சமதர்மம் பேசியிருந்தால், அவர் ஒரு சிறந்த தமிழ் தேசியவாதிக்கான தகுதியை பெற்றிருப்பாரா? விக்கினேஸ்வரன் மேட்குடித்தனமானவர் – அவரிடம் மேலாதிக்க சிந்தனை இயல்பாகவே இருக்கின்றது, என்றெல்லாம் இப்போது சேப்படுகின்றது. ஆனால் அவ்வாறான ஒருவரை முன்னிறுத்தியே தமிழ் தேசிய அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு பலரும் முயன்ற கதையை நாம் எவ்வாறு இலகுவாக மறந்துவிட முடியும்? விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், அரசர்கள் வெளியில் வருகின்ற போது, ஒரு காவலாளி ஆலாவட்டத்துடன் வருவது போன்று, ஒருவர் குடையுடன் வருவார்.

விக்கினேஸ்வரன் மேடைகளில் பேசுகின்ற போது, அவருக்கு குடை பிடித்தவாறு ஒருவர் மேடையில் நிற்பார். இவற்றை எவருமே தவறாக நோக்கவில்லை. எந்தத் தமிழ் தேசியவாதியும் கண்டிக்கவில்லை. இப்படியான விக்கினேஸ்வரனை தலைவராகக் கொண்டே, தமிழ் மக்கள் பேரவையின் மூலம் தமிழ் தேசிய இயக்கமொன்றை கட்டியெழுப்ப முடியுமென்று பலரும் நம்பினர். அதாவது, விக்கினேஸ்வரன் எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும் , எங்களுக்கு, தமிழ் தேசியத் தேரை இழுப்பதற்கு ஒரு முகம் தேவைப்படுகின்றது. அதற்கு விக்கினேஸ்வரனை பயன்படுத்திக் கொள்வோம். இந்த அடிப்படையில்தான் விக்கினேஸ்வரன் பலரது தெரிவானார். இதுவே மறுபுறமாக விக்கினேஸ்வரனின் பலமாகவும் இருந்தது. விக்கினேஸ்வரனை ஈழத்து தலைலாமா என்று சொன்னவர்களும் உண்டு. விக்கினேஸ்வரனின் தலைமையில் ஒரு வலுவான மாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்க முடியுமென்று நம்பிச் செயற்பட்டவர்களும் உண்டு. ஆனால் ஒரு கட்டத்தில் விக்கினேஸ்வரன் தங்களின் கற்பனைகளுக்கு அதிக தூரத்திலிருக்கின்றார் என்பதை கண்டுகொண்ட போது, பலரும் விக்கினேஸ்வரன் மாயையிலிருந்து வெளியேறிவிட்டனர்.

விக்கினேஸ்வரன் கேட்டதாகச் சொல்லப்படும் சாதிக் கதையானது, நம் மத்தியிலுள்ள பலருக்கும் பொருத்தமானது. பலரும் விக்கினேஸ்வரன் வெளிப்படையாகக் கேட்டதைத்தான், தங்கள் மத்தியில் காதும்காதும் வைத்தாற்போல், முணுமுணுத்துக் கொள்கின்றனர். விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவந்த சம்பந்தனும் சாதித்தடிப்பில் கூறிப்போன ஒருவர்தான். சம்பந்தனுக்கு வாக்களித்த நகரசுத்தித் தொழிலாளர் ஒருவரின் வீட்டில் சம்பந்தனை நீர் அருந்தச் சொல்லுங்கள் – நான் இந்த அரசியல் ஆய்வுத்துறையை விட்டே வெளியேறுகின்றேன். எனவே பலரும் தங்களை சுற்றியிருப்பவர்களிடம் கேட்கும் கதையைத்தான், விக்கினேஸ்வரனும் சாதாரணமாக கேட்டிருக்கின்றார். ஆனால் மெல்லுவதற்கு விக்கினேஸ்வரன் கிடைத்ததும் தங்களை உத்தமர்கள் போல் காண்பித்துக்கொள்ள பலரும் முயற்சிக்கின்றனர். தமிழ் சமூகம் சாதிய அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகம்தான். இந்த சமூக அமைப்பிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் எவ்வாறு இந்தக் கட்டமைப்பிலிருந்து தங்களை தூரத்தள்ளி வைப்பார்களென்று எதிர்பார்க்க முடியும்? தமிழ் தேசிய அரசியல் மிதவாத கட்சிகளான தமிழரசு கட்சி பின்னர், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில், தமிழ் தேசிய அரசியலை தீர்மானித்த அனைவருமே, சாதிய நிலையில் உயிரடுக்கினராக தங்களை கருத்திக் கொண்டவர்கள்தான்.

தமிழ் தேசிய அரசியலானது சாதிகளை கடந்த ஒரு விடயமென்று கூறிக்கொண்டாலும் கூட, அரசியல் பதவிநிலைகள் சாதியத்தை கடந்த ஒன்றாக இருக்கவில்லை. தமிழ் தேசிய அரசியல் இளைஞர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர்தான், இந்த நிலைமையில் உடைவுகள் ஏற்பட்டன. குறிப்பாக அன்றைய சூழலில் இடதுசாரித்துவ சிந்தனையை முன்னிலைப்படுத்திய இயக்கங்களான, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) மற்றும் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு (ஈரோஸ்) போன்ற இயக்கங்கள் இன விடுதலையோடு இணைந்து, சமூக விடுதலைக்கான சிந்தனைகளையும் முன்வைத்தன. இயக்கங்களின் வரவின் பின்னர்தான் சமானியர்களும் அரசியலுக்குள் பிரவேசிக்க முடிந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் சமூக விடுதலை சிந்தனைகளை முன்னிலைப்படுத்திய, ஒரு இயக்கமாக இருக்காவிட்டாலும் கூட, தங்களுடைய கட்டமைப்பில் சாதிய படிநிலைகளில் கீழ் நிலையிலிருந்த சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கிய இடங்களை வழங்கியதன் ஊடாக, யாழ்ப்பாணிய வெள்ளாள மேலாதிக்க சிந்தனைப் போக்கின் செவிப்பறையில் அடிக்க முயற்சித்தனர். விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்புக்கள் பலவற்றில் சாதிய படிநிலையில் குறைவான பிரிவுகளை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகள் காலத்தில்தான், அவ்வாறானவர்கள் அதிகாரத்திலிருக்க முடிந்தது. பிரபாகரன் வெள்ளாளர் அல்லாத சமூகத்தை சேர்ந்தவர். பிரபாகரனையும் ருகுணு விஜயவீரவையும் ஒப்பிட்டு, போக்குணம்மிக்க கராவ சமூகத்தை சேர்ந்தவர்களென்று கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் வெள்ளாளர் சமூகத்திற்கு வெளியில், ஒருவர் தமிழ் மக்களுக்கான ஏகபோக தலைவராக இருந்த சந்தர்ப்பம் பிரபாகரன் காலத்தில் மட்டும்தான் நிகழ்ந்தது. பிரபாகரனுக்கு முன்னரும் நிகழவில்லை அதற்கு பின்னரும் நிகழவில்லை. உண்மையில் ஜனநாயக அரசியல் தளத்தில் பிரபாகரன் போன்ற பின்புலம் கொண்ட ஒருவர், ஒருபோதுமே தமிழ் மக்களின் தலைவராக இருக்க வாய்ப்பில்லை.  ஏனெனில் அவ்வாறானதொரு நிலைமை இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. இந்தக் கட்டுரையாளரின் வாதத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டுமாயின், அது நிரூபிக்கப்பட வேண்டும். பிரபாகரனுக்கு அவ்வாறானதொரு இடத்தை சமூகம் வழங்கவில்லை. ஆயுத பலத்தின் மூலம் அவ்வாறானதொரு சூழலை அவர் ஏற்படுத்தியிருந்தார். விரும்பியோ விரும்பாமலோ அவரை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அனைவருக்கும் ஏற்பட்டது.

ஆனால் என்னதான் இயக்கங்கள் சமூகத்தின் மத்தியில் உடைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, சமூக தளத்தில் சாதியவாதம் நீறுபூத்த நெருப்பாக இருந்து கொண்டேயிருந்தது. இயக்கங்களால் ஏற்படுத்தப்பட்ட உடைவுகள் சமூகதளத்தில் சிந்தனை மாற்றமாக பரிணமிக்கவில்லை. யாழ்வைதீக சிந்தனைப் போக்கில் பெரியளவில் உடைவுகள் ஏற்படவில்லை. விடுதலைப் புலிகளின் வீழ்சியை தொடர்ந்து, அவர்கள் செயலின் மூலம் ஏற்படுத்த முற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் புஸ்வானமாகிவி;ட்டது. புளொட் இயக்கத்தின் செயலதிபர் உமா மகேஸ்வரன் கூறிய போன்று, யாழ்ப்பாண வெள்ளாள சமூகம் குளிரூட்டியில் கவனமாக பாதுகாத்து வைத்திருந்த சாதிய மேலாதிக்க சிந்தனைகள் இப்போது மீண்டும் துளிர்விடத் தொடங்கிவிட்டது.

ஆனால் முன்னர் காணப்பட்டது போன்ற நிலையில் இப்போது சாதிய கட்டமைப்பு வலுவாக இருப்பதாக கூறவிடமுடியாது. அதில் உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் ஒருவரின் சாதியை குறிப்பிட்டு அவரை ஒடுக்க முற்படும், உதாசீனப்படுத்த முற்படும் வேலையை இப்போது எவராலும் செய்ய முடியாது. ஏனெனி;ல் சாதிய படிநிலைகளில் கீழ்நிலையில் இருப்பதாக கூறப்பட்டவர்கள் புலப்பெயர்வின் மூலமும், கல்விப் பின்புலங்களாலும் தங்களை உயர்த்தியிருக்கின்றனர். பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்திருக்கின்றனர். அவ்வாறானவர்களை முன்னரைப் போல் இலகுவாக புறம்தள்ள முடியாது. ஆனால் அரசியலில் சாதிய மேலாதிக்கம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட, மறைமுகமாக ஏதோவொரு வகையில் தொடரத்தான் செய்கின்றது.

ஒரு பெரும் விடுதலைப் போராட்டம் நிகழ்ந்ததாக கூறப்படும் சூழலில், சாதிய மேலாதிக்க மனோபாவத்தை கடந்துசெல்ல முடியாமல் இருக்கின்றதென்றால், இதுவரை காலமும் முன்னிலைப்படுத்தப்பட்ட தமிழ் தேசியவாதம் தோல்வியடைந்துவிட்டது என்னும் முடிவுக்கே நாம் வரவேண்டும். தமிழ் தேசியவாதம் ஒரு முற்போக்கு வாதமாக பரிணமிக்கவில்லை. அது வெறும் அரசியல் சுலோகமாகவே நிலைபெற்றிருக்கின்றது. சமூகத்தின் பாகுபாடுகளை சிதைத்து, மேலெழும் ஒரு மந்திரச் சொல்லாக தமிழ் தேசியவாதம் எழுச்சியுறவில்லை. இதன் விளைவாகவே, இப்போதும் சாதியம் தொடர்பில் விவாதிக்கக் கூடிய நிலைமை தமிழ்ச் சூழலில் காணப்படுகின்றது. இதற்கு மதில் மேல் பூனையாக வாழும் ஆய்வாளாகள், புத்திஜீவிகள் என்போரும் ஒரு காரணமாவர். ஏனெனில் அரசியல்வாதிகள் உச்சரிக்கும் தமிழ் தேசியத்தையே சரியானதொரு வாதம்போன்று ஆய்வாளர்கள் என்போரும் பிரதிசெய்ய முற்படுகின்றனர்.

உண்மையில் இன்று உச்சரிக்கப்படும் தமிழ் தேசியம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்திற்குள் சுருங்கிப்போன வாதமாகவே இருக்கின்றது. யாழ்ப்பாணத்திற்கு வெளியில், இதற்கு பெரியளவில் மக்கள் கவர்ச்சியிருப்பதாக தெரியவில்லை. ஒரு பலமான புலம்பெயர் சமூகமிருப்பதால், ராஜதந்திரிகள், கொழும்பு அரசியல்வாதிகள் அடிக்கடி யாழ்ப்பாணத்திற்குச் செல்வதாலும் அனைத்தும் தங்களை சுற்றியே வட்டமிடுவதான மாயத் தோற்றமொன்றுக்குள் பலர் சிக்கியிருக்கின்றனர். ஆனால் பலரும் காணத் தவறுகின்ற விடயமொன்றுண்டு. அதாவது, ஏனைய மவாட்ட மக்கள் தமிழ் தேசிய அரசியல் சுலோகத்திலிருந்து விலகிக்கொண்டு செல்கின்றனர்.

உதாரணமாக யாழ்ப்பாணத்தில் பேசப்படும் விடயங்கள் எதனையும் ஏனைய மாவட்டங்களிருப்பவர்கள் கருத்தில்கொள்ளவில்லை. ஏன் ஆகக் குறைந்தது யாழ்ப்பாணத்திலிருக்கும் சாதாரண மக்களும் இவைகள் தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை. உண்மையில் இன்றைய தமிழ் தேசிய சுலோகம் பெருமளவு மக்களுக்கு அன்னியமான ஒன்றாகவே காட்சியளிக்கின்றது. சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செயற்கையாக சில எதிர்ப்புக்களை ஏற்படுத்துவதன் ஊடாக, தமிழ் தேசியத்திற்கு உயிரூட்டலாமென்று எண்ணுகின்றனர். முன்னரைப் போன்று, சிங்கள எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி தமிழ் தேசிய அரசியலுக்கு உரமூட்ட முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது. விடயங்களை அறிவுபூர்வமாக அணுகுவதன் ஊடாகவே இன்றைய சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

சிங்கள ஆளும் வர்க்கம் அதன் நகர்வுகளை திறம்பட செய்து கொண்டேயிருக்கின்றது. சிறிய விடயங்களில் தமிழ் அரசியல்வாதிகளின் கவனத்தை சிதறடித்துவிட்டு, நீண்டகால நோக்கிலான நகர்வுகளை காதும் காதும் வைத்தாற்போல் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். திருகோணமலையை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு நகர்வுகள் இடம்பெறவுள்ளது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகளோ, புத்தர் சிலையை தாண்டி சிந்திக்கத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். காலப்போக்கில் சாதியபடிநிலைகளில் – கீழ்நிலையில் இருப்பதாக கூறப்படும் மக்கள் பிரிவொன்று, புத்தரையும் தங்களுடைய விடுதலைக்கான மார்க்கமாக கூறினாலும் கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை.