தமிழ் தேசியம் யார் கையில்…?
-நரேன்-
தடம் மாறுகிறதா தமிழ் தேசியம் என்கின்ற சிந்தனை தமிழ் மக்கள் மத்தியில் வந்துள்ளது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் அதன் தலைமையினதும் செயற்பாடுகளே காரணம். கடந்த 2004 அம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்று தேர்தலில் போட்டியிட்டு பெரு வெற்றியை பதிவு செய்தது. போர் நிறைவுற்ற நிலையில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் விடுதலை என்பவற்றை வலியுறுத்த தமிழ் மக்களின் ஒட்டு மொத்த ஆதரவும் தேவை எனக் கூறப்பட்டு அதற்கு மக்கள் ஆணையும் கிடைத்தது. அதற்கு பின்னர் வந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள், இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேல்களில் சர்வதேசம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கின்றது. சர்வதேச விசாரணை தேவை என் கருத்தியல் முன்வைக்கப்பட்டு தமிழ் மக்களின் ஒற்றுமையான வாக்குபலத்தை காட்ட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. அதற்கு வெற்றியும் கிடைத்தது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டடைப்புக்கு அபரிநிதமாக கிடைத்த மக்கள் ஆணை சரியாக பயன்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டமைப்பு சொன்னதை செய்யவில்லை என்ற ஆதங்கமும் மக்களிடம் வந்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி புதிய ஆட்சி மாற்றத்தைக் ஏற்படுத்தியிருந்தது. தற்போதைய அரசாங்கத்தில் கூட்டமைப்பு எதிர்கட்சி ஆக இருப்பினும் அரசாங்கத்தின் ஆதரவு சார் தளத்திலேயே அது செயற்படுகின்றது. அப்படி இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் எதனையும் சாதிக்க முடியவில்லை. செய்ய முடியவில்லை என்ற நிலை உள்ளது. பதவிகள் இருக்கிறது. அரசுடன் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் மக்களுக்காக எதையும் செய்ய முடியவில்லை என்ற நிலை தோன்றியிருக்கின்றது. சர்வதேச விசாரணை இன்று உள்ளக விசாரணையாக மாறி அது கூட நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எந்த நிலை வந்தாலும் அதை ஏற்கும் நிலையிலேயே கூட்டமைப்பின் தலைமை இருக்கிறது. 32வது ஜெனீவா கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் எமது மக்கள் சர்வதேச விசாரணையையே கோருகின்றனர் என்று கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர்களினுடைய பிரதிநிதியாக நானும் அதனையே வலியுறுத்துகிறேன் என்று அவர் தெளிவாக சொல்லவில்லை. இதன் மூலம் அவர் கூட்டமைப்பினுடைய நிலைப்பாட்டை உறுதியாக சொல்லவில்லை. காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் பிரச்சனை, காணாமல் போக செய்யப்பட்டவர் பிரச்சனை என்பவற்றைக் கூட தீர்க்க முடியாத நிலையிலேயே கூட்டமைப்பு உள்ளது. இந்த பின்னனியிலேயே தடம் மாறுகிறா தமிழ் தேசியம் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இதனாலேயே மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் தடம் மாறுகின்றதா தமிழ் தேசியம் என்னும் பெயரில் ஒரு கருத்தாடல் நடத்த வேண்டிய தேவையும் எழுந்தது. தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் சில நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களும் அந்த கருத்தாடலில் கலந்து கொண்டனர். இதில் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் உள்ளது. மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவரோ அவர் சார்ந்த எவரும் அந்த கருத்தாடலில் கலந்து கொள்ளவில்லை. பொது அமைப்புக்கள் முன்னால் முகம் காட்ட முடியாத நிலையில் தான் சில உறுப்பினர்களின் தமிழ் தேசியம் சென்று கொண்டிருக்கின்றதா என்ற ஐயத்தை அது ஏற்படுத்தியே உள்ளது. சரி பிழைக்கு அப்பால் ஏனையோர் அதில் கலந்தும் கொண்டிருந்தனர்.
இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவும், பாராளுமன்றக் குழுவும் மட்டுமே தமிழ் மக்களது அரசியல் தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்த நிலையை மாற்றி புத்திஜீவிகளையும் பத்தி எழுத்தாளர்களையும் சில சமூக அரசியல் ஆர்வலர்களையும் உள்ளடக்கியதாக இந்த அமர்வு விரிவுபடுத்தப்பட்டிருந்தது. அவர்கள் தமது ஆதங்கங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதன் ஒரு கட்டமாகவே 2016 ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை ரோல் மொடலாக பின்பற்றி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது. முள்ளியவாய்கால் அவலத்தின் போது பதவி விலகாதவர்கள் தற்போது பதவி விலகுவதால் எதை அடைந்து விடப் போகிறார்கள். மறுபுறம் இருப்பதை கொண்டு அழுத்தம் கொடுக்க முடியாதவர்கள் பதவி விலகித் தான் அழுத்தம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.
அங்கு கலந்து கொண்ட அனைவராலும் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை கேட்ட கூட்டமைப்பின் தலைமை இறுதியில் கடந்த காலவரலாறுகளை மீள நினைவுபடுத்தி விட்டு சென்றுள்ளார்கள். ஆக குறைந்த பட்சம் அதில் சொல்லப்பட்ட கருத்துக்களை கேட்டு தம்மை சுயவிமர்சனம் செய்யக் கூட கூட்டமைப்பின் தலைமை விரும்பவில்லை. மாறாக தாம் செய்வது சரி. தமது செயறடபாடுகள் இராஜதந்திரத்துடன் இடம்பெறுகின்றது என்ற மூடுமந்திர அரசியலை மீள வெளிப்படுத்தியுள்ளார்கள். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்கள் இங்கு கருத்துரைத்த போது, நான் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வேன். ஏன் எனில் நான் ஒரு ஆயுதம் தூக்கியவனோ, வன்முறையாளனோ இல்லை. ஜனநாயகவாதி என குறிப்பிட்டிருந்தார். தற்போது தமிழ் மக்களுக்கு ஆயுதம் தூக்கியது யார், தூக்காதவர் யார் என்பது பிரச்சனை இல்லை. இருப்பினும் ஆயுதப் போராட்டமே தமிழர் பிரச்சனையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றதுடன் கூட்டமைப்புக்கான ஒரு தளத்தையும் உருவாக்கியிருந்தது. இன்று கூட்டமைப்பு செய்யும் அரசியல் கூட ஆயுதம் தூக்கி போராடியவர்களின் கல்லறைகளின் மேல் நின்று தான். மறுபுறம் ஆயுதம் ஏந்திய கட்சிகளின் தயவுடன் தான் கூட்டமைப்பு வெற்றிகளையும் பதிவு செய்தது. தற்போது ஆயுதம் தூக்கிய பங்காளிக் கட்சிகளை தமிழரசுக் கட்சி புறம்தள்ள முயன்றாலும் அதன்தயவால் தான் போர் முடிந்த கையுடன் தேர்தல்களில் வென்றதும் இன்று தமிழரசுக் கட்சி எழுச்சி பெற்று நிற்பதும் உண்மை. இதை கூட்டமைப்பின் தலைமை மறந்து விடக்கூடாது.
ஆக தமிழ் மக்களின் பிரச்சனைகளில் வெளிப்படைத் தன்மையையுடன் செயற்பட பொறுப்பு கூட்டமைப்புக்கு இருக்கிறது. தமிழின விடுதலைக்காக தமிழ் மக்கள் இழந்தவை அதிகம். அதன் மேல் சவாரி செய்து கொண்டு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை புறந்தள்ள முடியாது. இராஜதந்திரம் என்கின்ற ஒன்று இன்று மக்கள் கருத்தியலுக்கு பதில் அளிக்க முடியாது தமது பொய்களையும், கருத்துக்களையும் மறைத்து வைக்கும் அலுமாரியாக மாறிவிட்டதா என்ற சந்தேகம் கூட உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது விமர்சனங்கள் உள்ள போதும் மாற்று சக்தி இல்லாத காரணத்தினால் தமிழ் மக்கள் அதனையே தமது கூடாரமாக அரவணைத்து செல்கிறார்கள். அதை புரிந்து தம்மை சுயவிமர்சனம் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உள்ளது.
அதேநேரத்தில், தங்களுடைய கூடாரம் உக்கிப் போனதாக, ஓட்டை விழுந்ததாக, பாதுகாப்பற்றதாக மாறுவதற்கு மக்களும் இடம் கொடுக்க கூடாது. ஆகவே, எத்தகைய தயவு தாட்சனையுமின்றி கூட்டமைப்பின் தலைமை விடுகின்ற தவறுகளை துணிந்து நின்று சுட்டிக்காட்டி அவர்களை தமது நலன்களின் மீது அக்கறை செலுத்துபவர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களிடமும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடமும், பொது அமைப்புக்களிடமும் உள்ளது. இதனை புரிந்து கொண்டு அனைத்து தரப்பினரும் செயற்படாத வரையில் தமிழ் தேசியம் தடம் மாறவும், தடுமாறவுமே வாய்ப்புக்கள் அதிகம்.
N5




