தமிழ் புலம்பெயர் சமூகம் (டயஸ்போறா) என்ன செய்யலாம்?
யதீந்திரா
தமிழர் அரசியலில் புலம்பெயர் சமூகம் பிரிக்க முடியாதவொரு அங்கம். இதனை எவராலும் சீர்குலைக்க முடியாது. சீர்குலைக்கவும் அனுமதிக்கக் கூடாது. 2009இல் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, புலம்பெயர் சமூகம் தமிழ் தேசிய அரசியலில் பிரதான குரலானது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான சர்வதேச குரலாக மாறியது. எனினும் புலம்பெயர் சமூகத்தின் உழைப்பு எதிர்பார்த்த பலனை தரவில்லை. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகள், சில தனிநபர்கள் மீதான அமெரிக்க தடைகள், தற்போது முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சக்கள் மீதான கனடாவின் தடை – இவற்றை தவிர குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயங்கள் எவையும் கடந்த 13 வருடங்களில் நிகழவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கினால், புலம்பெயர் சமூகம் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. அதற்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டியிருக்கின்றது. ஆனால் இதிலுள்ள அடிப்படையான சவால் தாயகத்தின் நிலைமையாகும். தாயகமென்று ஒன்று இருந்தால்தான் புலம்பெயர் சமூகம் செயற்பட முடியும்.
தாயகத்தின் பிரதான சவால்கள் இரண்டு. ஒன்று, மிகவும் பலவீனமான அரசியல் தலைமைத்துவம். அதாவது, கடந்த 75 வருடகால தமிழர் அரசியல் வரலாற்றில் இப்போது இருப்பது போன்றதொரு பலவீனமான அரசியல் தலைமைத்துவம் முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. சிதறிச் செல்லுவோரை ஒன்றுதிரட்டி, வழிநடத்தக் கூடிய ஆளுமைமிக்க நபர்(கள்) தமிழ் சமூகத்திலில்லை. கடந்த பதின்மூன்று வருடகால அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கினால், எந்தளவிற்கு தமிழ் தேசிய அரசியல் சிதைந்து, சீரழிந்திருக்கின்றது என்பதை காணலாம். 2009இல் யுத்தம் முடிவுற்ற போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே, தமிழ் மக்களின் ஒரேயொரு தாயக தலைமையாக இருந்தது. ஆனால் இன்றோ பத்து கட்சிகள் தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றன. இப்போது கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சியும் வெளியேறிவிட்டது.
இவ்வாறு தாயக அரசியல் சிதைந்து போனமைக்கு சிலரின் சுயநலப்போக்கை ஒரு காரணமாக கூறிமுடியுமனாலும் கூட, அனைவரையும் அரவணைத்து, வழிநடத்தக் கூடிய தனிநபர் ஆளுமைகள் இல்லைமையே பிரதான காரணமாகும். ஏனெனில் ஒரு அரசியல் இயக்கத்தில் பல்வேறு வகையானவர்கள் வந்து சேர்வார்கள். அவர்களில் சிலர், அரசியலை தங்களின் சுயநலத்திற்கும் புகழுக்கும் பயன்படுத்த வேண்டுமென்று எண்ணுபவர்களாக இருக்கலாம், ஆனால், அவ்வாறானவர்களின் ஆதிக்கத்திற்குள் ஒரு இயக்கம் வீழ்ந்துவிடாமல் இருக்க வேண்டுமானால், அது நான் மேலே குறிப்பிட்டவாறான ஆளுமைமிக்க தலைவர்களில்தான் தங்கியிருக்கின்றது. ஆனால் அவ்வாறான ஆளுமைகளுக்கு பஞ்சம் காணப்படுகின்றது அதே வேளை அண்மைக்காலத்தில் அவ்வாறானதொரு ஆளுமை வெளித்தெரிவதற்கான வாய்ப்பும் இல்லை.

இந்த நிலையில் ஒரு கூட்டுத் தலைமை ஒன்றின் மூலம்தான் அரசியலை முன்னெடுக்க முடியும். ஆனால் அதிலும் பிரச்சினைகள் ஏராளம். இவ்வாறானதொரு சூழலில் தாயக அரசியலை பலப்படுத்த வேண்டிய பணியும் புலம்பெயர் சமூகத்திற்குண்டு. இதற்கு முன்னரும் சில சந்தர்பங்களில் இந்தக் பத்தியில் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றேன். அதாவது, புலம்பெயர் சமூகம் தாயக அரசியல் கட்சிகள் மத்தியில், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. விடயங்களின் அடிப்படையில்தான் தாயக அரசியலில் தலையீடு செய்ய வேண்டும். அவ்வாறில்லாது, கட்சியடிப்படையில் சில நிலைப்பாடுகளை முன்னெடுக்கும் போது, அது புலம்பெயர் சூழலிலும் பிளவுகளை ஏற்படுத்தும். ஏற்படுத்தியுமிருக்கின்றது. ஆரம்பத்திலிருந்தே சில புலம்பெயர் அமைப்புக்கள் இந்த விடயத்தில் தவறிழைத்திருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்நிலையிலிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியை சிலர் ஆதரித்தனர். அவர்களை பலப்படுத்த முயற்சித்தனர். அதே போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசு கட்சியை முன்னிலைப்படுத்துவதற்கு சிலர் முன்னுரிமையளித்தனர். விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய அயுதப் போராட்ட இயக்கங்களுக்கும் இடையில் பல முரண்பாடுகளிருந்ததும், ஏனைய அமைப்புக்களை விடுதலைப் புலிகள் தடைசெய்தமையும், மோதலில் ஈடுபட்டதும், பலர் உயிரிழந்ததும் வரலாறு. ஆனால் பிற்காலத்தில் அதே அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட விடுதலைப் புலிகள் அமைப்பு பின்நிற்கவில்லை. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் சிலவற்றை ஏற்க வேண்டிய யதார்த்தத்தை புலிகளாலும் நிராகரிக்க முடியவில்லை.
இந்த பின்னணியில் சிந்தித்தால், 2009இற்கு பின்னரான சூழலில் அனைத்து தரப்புக்களையும் அரவணைத்து, முன்நோக்கி பயணிப்பதில் புலம்பெயர் சமூகம்தான் முன்னணி வகித்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. ஆனால் சில கட்சிகளை, சில நபர்களை முன்னிலைப்படுத்தியதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்கள் சாதித்தது என்ன? எதுவுமில்லை. கடந்த பதின்மூன்று வருடங்களில் தாயக அரசியல் பலவீனமடைந்திருக்கின்றதே தவிர பலமடையவில்லை. அது பலமடையவில்லையாயின், அந்தப் பலவீனத்திற்கு கட்சிகளை, தனிநபர்களை ஆதரித்த புலம்பெயர் அமைப்புக்களுமல்லவா பொறுப்பேற்ப வேண்டும். தமிழர் தாயகத்தில், அரச ஆதரவு கட்சிகளின் செல்வாக்கு முன்னரைவிடவும் அதிகரித்திருக்கின்றது. தற்போது தமிழ் தேசிய அரசியல் தரப்புக்கள் நான்கு அணிகளாக போட்டியிடுகின்றன. இந்த நிலைமையானது, அரசாங்க கட்சிகளை பொறுத்தவரையில், பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகலாம்.
புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு விடயத்தை குறித்துக் கொள்ள வேண்டும். ஒரு அரசின் நகர்வுகளுக்கு எதிராகவே புலம்பெயர் அமைப்புக்கள் போராடிவருகின்றன. ஒரு அரசிற்கு இருக்கின்ற எந்தவொரு வாய்ப்பும் புலம்பெயர் சமூகத்திற்கில்லை. ஆனால் ஜரோப்பிய நிலத்தில் நின்றவாறு, மேற்குலகின் மனச்சாட்சியை உலுப்பும் கேள்விகளை முன்வைக்கும் வல்லமை புலம்பெயர் சமூகத்திற்குண்டு. டயஸ்போறா லொபியென்பது இந்த அடிப்படையை கொண்டதாகவே இருக்க வேண்டும். ஆனால் என்னதான் நீதி பற்றியும் ஜனநாயக விழுமியங்கள் தொடர்பில் பேசினாலும் கூட, சர்வதேச நகர்வுகளை தீர்மானிப்பது நீதிக்கான தீர்மானங்கள் அல்ல – மாறாக, பலம்பொருந்திய நாடுகளின் நலன்கள் மட்டுமே இறுதியில் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. அதனை கருத்தில் கொள்ளாமல் மேற்குலகின் – உதாரணமாக கனடிய தடைகளை கருத்தில் கொண்டு திருப்திப்பட்டுக் கொண்டால், அது நமக்கு பயன்படாது.

இது பல்துருவ உலகம். உலக அதிகார கட்டமைப்புக்கள் பெரியளவில் மாறிவிட்டன. இருபது வருடங்களுக்கு முன்னர் இருந்தது போன்ற நிலையில் அமெரிக்காவுமில்லை. இன்றைய உலக நகர்வுகளில் பிராந்தியங்கள் பிரதான செல்வாக்குச் செலுத்துகின்றன. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் யதார்தங்களை புறம்தள்ளி ஒரு இம்மியளவு கூட நம்மால், நகர முடியாது. இந்த பின்புலத்தில் இந்தியாவின் கரிசனைகள், நிலைப்பாடுகள் தவிர்க்கவே முடியாதவை.
தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரம் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது. அதே வேளை, அதன் அடிப்படையாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் அழுத்திவருகின்றது. ஒரு பிராந்திய சக்தியும் உடனடி அயல்நாடுமான இந்தியா, இருதரப்பு உடன்பாட்டை கொண்டிருக்கும் போது, அதில் எந்தவொரு வெளித்தரப்பும் தலையீடு செய்ய முடியாது. மேலும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சில விடயங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் கூட, இந்தோ-பசுபிக் மூலோபயத்தில் இந்தியா ஒரு வலுவான பங்காளி. மேலும் இந்தியா பொருளாதா ரீதியிலும் வேகமாக வளர்ச்சிடைந்துவரும் ஒரு நாடு. அண்மையில் முன்னாள் கலானிய ஆட்சியாளரான பிரித்தானிவையே இந்தியா பொருளாதார ரீதியில் பின்னுக்கு தள்ளியிருந்தது. இந்தியாவின் சர்வதேச முக்கியத்துவம் முன்னரைவிடவும் வேகமாக பெருகிவருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால், புலம்பெயர் அமைப்புக்கள் மேற்கை தளமாகக் கொண்டு உறுதியுடன் செயற்படும் அதே வேளை, இந்த பிராந்திய யதார்தங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
தற்போது, மீளவும் கொழும்பு அரசியல் தீர்வு தொடர்பில் பேசிவருகின்றது. ரணில் விக்கிரமசிங்க அதில் எந்தளவு தூரம் உண்மையாக இருப்பார் – உறுதியாக இருப்பார் என்பது நமது பிரச்சினையில்லை. அது கொழும்பின் – சிங்கள அரசியல் சமூகத்தின் பிரச்சினை. ஆனால் ரணில் கையிலெடுத்திருக்கும் விடயம் சிக்கலானது. ரணில் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக கூறுகின்றார். அதனையே இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. ஆனால் தற்போது அதனை அமுல்படுத்த விடமாட்டோமென்று கூறி, சிங்கள கடும்போக்கு தரப்புக்களும் பௌத்த சங்கங்களும் வீதிக்கு வருகின்றன. 13வது திருத்தச்சட்டத்தின் நகலை கொழுத்தி எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது.
ஆனால் ரணில் விக்கிரமசிங்கவோ எவர் எதிர்த்தாலும் நான் சில விடயங்களை செய்யத்தான் போகின்றேன் என்கின்றார். ரணில் விரைவில் இந்தியா செல்லவுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, ரணில், 13 தொடர்பில் நிச்சயம் பேசுவார். உத்தியோகபூர்வமாக அறிவிக்கவும் இடமுண்டு. இந்த விடயங்களில் புலம்பெயர் சமூகம் அசமந்தமாக இருக்கக் கூடாது. சிலர் (தாயகத்திலும் புலத்திலும்) கூறுவது போன்று இது சாதாரண நகர்வல்ல. இது ஒரு மூலோபாய நகர்வு. நாங்கள் எப்போதோ, 13வது திருத்தத்தை நிராகரித்துவிட்டோம் – அது பற்றி இப்போது பேச வேண்டியதில்லையென்று சாதாரணமாக கூறிவிட்டுச் செல்லக் கூடிய விடயமல்ல. இது வெறுமனே 13பற்றியதல்ல. மாறாக இது ஒரு புவிசார் அரசியல் விவகாரம். இந்த விடயங்கள் தொடர்பில் புலம்பெயர் அமைப்புக்கள் நிதானமாகவும், சகிப்புணர்வோடும் விடயங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டும்.
13இற்கு வெளியிடப்படும் எதிர்ப்பையே சர்வதேச அரங்குகளில் அரசியல் லொபியாக முன்வைக்க வேண்டும். 13இனை அமுல்படுத்த ரணிலால் முடியாமல் போகும் இடம்தான், புலம்பெயர் சமூகத்தின் அடுத்த கட்ட லொபிக்கான அஸ்திபாரமாகும். இந்த லொபியை பலமாக முன்னெடுப்பதற்கு புலம்பெயர் சமூகம் தன்னை தயார் செய்ய வேண்டும். நான் மேலே குறிப்பிட்டவாறு, பிளவுண்டு செல்லும் தாயக கட்சிகள் மீது முதலிட்டுக் கொண்டிருக்காமல், ஒரு புலம்பெயர் சமூகமாக திரட்சிபெற வேண்டும். இதற்கு அறிவூட்டக் கூடிய தனிநபர்களையம் அமைப்புக்களையும் (இரு இடங்களிலும்) அணிதிரட்ட வேண்டும். குறிப்பாக, புலம்பெயர் சமூகத்தின் லொபி அமெரிக்காவை தளமாகக் கொண்டிருக்க வேண்டும். வேறு நாடுகளில் என்னதான் குரல்களை எழுப்பினாலும் அது பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தாது. உலக ஒழுங்கினை தீர்மானிக்கும் மேற்குலக சக்தி அமெரிக்கா மட்டும்தான். அங்குதான் புலம்பெயர் லொபி மையம்கொள்ள வேண்டும். அப்போதுதான் புதுடில்லியுடனும் ஊடாடுவது இலகுவாகும். ஆனால் அதற்கு சில தகுதிநிலைகள் அவசியம். புலம்பெயர் செயற்பாடுகளுக்கு தலைமையேற்பவர்கள் தங்களை தாராளவாத அரசியல் விழுமியங்களுக்குரியவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம்மால், அமெரிக்க உலகில் அசைய முடியாது.


