செய்திகள்

தமிழ் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுமா ஐ.நா…?

நரேன்-

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதவுரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை தொடர்பான ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரின் அறிக்கை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே இலங்கை அரசாங்கம் ஐ.நா சபையையும், சர்வதேச நாடுகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நன்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே கடந்த 2015 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி எடுக்கப்பட்ட எச்.ஆர்.சி 30- 1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் பெற்றிருந்தது. அந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க எத்தகைய முன்னேற்றத்தையும் காட்டாத நிலையில், கடந்த வருடம் அந்த பிரேரணையை நடைமுறைப்படுத்த வாக்கெடுப்பின்றி மீண்டும் இரண்டு வருட கால அவகாசத்தைப் பெற்றிருந்தது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் ஆதரவையும் பெற்றிருந்தது. இன்று கால அவகாசம் வழங்கி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் கூட அவை நிறைவேற்றப்படாத நிலையே தொடர்கிறது.

இந்த நிலையில் தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையில் தமிழ் தலைமைகள் எவ்வாறு செயற்படப் போகின்றன என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்தின் கொள்கைகளையும், நகர்வுகளையும் துல்லியமாக கணித்து தனக்கு வாக்களித்த ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் குரலாக ஓங்கி ஒலிப்பதற்கு முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அத்தகைய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா மனிதவுரிமைக் கூட்டத்தில் ஐ.நா மனிவுரிமை ஆணையாளரால் வரையப்பட்ட தீர்மானமானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வலிகளை உணர்த்தியது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்வதேச சமூகம் தம்மால் ஏற்படுத்தப்பட்ட புதிய அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை குறைப்பதற்கு தீர்மானித்து அதில் பாரிய மாற்றங்களை செய்திருந்தது. இதற்கு தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளரும் பங்களிப்பு வழங்கியிருந்ததை தானே பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருந்தார். அந்த தீர்மானத்தையே சர்வதேச சமூகம் மன்றில் சமர்ப்பித்து இலங்கையின் இணை அணுசரனையுடன் நிறைவேற்றியது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு 18 மாத கால அவகாசத்தையும் வழங்கியிருந்தது. அந்த தீர்மானங்கள் எவையும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் இரண்டு வருட கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் பெற்றிருந்தது. தற்போது ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற அறிக்கையை ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் வழங்கவுள்ளார்.

பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தைப் பொறுத்தவரை எத்தகைய முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் தற்போதும் உரிமைக்காகவும், நீதிக்காகவும் ஜனநாயக ரீதியாக தினமும் போராடி வருவதுடன் அதனை கண்டு கொள்ளாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளது.

கடந்த வருடம் ஐ.நா மனிதவுரிமை கூட்டத்தொடருக்கு முன்னதாக தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களை ஐ.நா அமர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட போராட்டமாகவே ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் கருதியிருந்தது. தற்போது வெள்ளைவான் கலாசாரம் இல்லை. மக்கள் சுதந்திரமாக வீதிகளில் இருந்து போராட முடிகிறது. மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம் என அரசாங்கம் அப்போது கூறியிருந்தது. ஆனால் அந்த மக்களது போராட்டங்கள் எந்தவித தொய்வுமின்றி நீதிகோரி ஓரு வருடத்தை கடந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் கால அவகாசத்தைப் பெற்ற மைத்திரி – ரணில் அரசாங்கம் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் நியாயமான குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட இன்று வரை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என போராடி வரும் தாய்மார் சிலர் போராட்ட களத்தில் இருந்தே மரணமடைந்தும் உள்ளனர். தமது உறவுகளுக்காக போராடிய தாய்மார் தமது உயிரையே மாய்க்கும் நிலை ஏற்பட்டும் இந்த அரசாங்கம் கண்மூடியே இருக்கின்றது. மறுபுறத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டி வீதிகளில் ஒரு வருடமாக காத்திருக்கும் மக்களுக்கும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராடி வருகின்ற உறவுகளுக்கும், தமது சொந்த காணிகளில் மீள்குடியேறி தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக வீதிகளில் ஒராண்டு காலமாக போராடி வரும் மக்களுக்கும் ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அந்த மக்களின் வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வரை முயற்சிக்காதது மட்டுமன்றி, அத்தகைய போராட்டங்களை கண்டு கொண்டதாக தெரியவில்லை. இப்போராட்டங்களில் மக்கள் கோருகின்ற விடயங்கள் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு ஐ.நாவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை செய்வதாக வாக்குறுதி வழங்கிய விடயங்களே. அவை மூன்று ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படாத நிலையில், இன்னும் கால அவகாசம் வழங்குவதன் மூலம் எதனை சாதிக்க முடியும் என்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்கள் இடத்தில் இயல்பாகவே எழுந்துள்ளது.

ஐ.நா மனிதவுரிமை பேரவையால் வலியுறுத்தப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக உண்மையை கண்டறிதல், பொறுப்புகூறல், நிவாரணம் வழங்குவதல், மீள் நிகழாமையை உறுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அரசாங்கம் கணக்கு காட்டப் போகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட சில நிலப் பகுதிகளையும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அமைக்கப்படவுள்ள அலுவலகம் தொடர்பான செயற்பாடுகள் குறித்தும், புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் கணக்கு காட்டவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான செயற்பாடுகள் மந்த கதியிலேயே இருந்தது. தற்போது அது தொடர்பான விடயங்களை அரசாங்கம் மீள கையில் எடுத்திருக்கின்றது. முதல் மூன்று விடயங்களுமே நிறைவேற்றப்படாத நிலையில் நான்காவது விடயமாகவுள்ள மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கின்றது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களது அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நாட்டில் தேசிய இனப் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமாக இருந்த அதே மூல விடயங்களே உள்ளன. இந்த நிலையில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் தரபோவதில்லை. மறுபுறம் தமிழரசுக் கட்சி, அரசாங்கம் பல கருமங்களை முன்னெடுத்துள்ளது என்றும், சில விடயங்கள் நடைபெற்றுள்ளது என்றும், வேகம் போதாது என்றும், இன்னும் ஆற்றவேண்டிய கருமங்கள் உள்ளன என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரால் அரசாங்கத்திற்கு நன்சான்றிதழ் வழங்கியிருக்கின்றது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்கட்சித் தலைவர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகிய பதவிகள் தமிழருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் தெரிவித்திருந்தது. தற்போது எதிர்கட்சித் தலைவர் மட்டுமே தழிழராகவுள்ளார். ஆனாலும் அவரும் அரசாங்கத்திற்கு எத்தகைய அபகீர்த்தியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக செயற்படுவதாகவே தெரிகிறது. இதன் விளைவாகவே அவரது தலைமையின் கீழான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளதை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றது.

அரசாங்கம் தற்போதைய அரசியல் சூழலை காட்டி தனது இக்கட்டான சூழ்நிலையை ஐ.நாவிடம் எடுத்துச் சொல்லி தனக்கு அனுதாபம் திரட்டவும் முற்படும். இங்கு சர்வதேவச சமூகம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஜனாதிபதி தேர்தலின் போதும், அதனையொட்டிய இடைக்கால தேசிய அரசாங்கத்தின் போதும், அதன் பின்னரான நல்லாட்சி அரசாங்கத்தின் போதும் கடந்த காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் எத்தகைய தராதரமும் பாராமல் சட்டத்தின் முன் நிறுத்தி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது. அது நடைபெற்றிருந்தால் இன்றைய அரசாங்கத்திற்கு அனுதாபம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஆகவே இந்த அனுதாபத் தேடலானது இன்றைய அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடா என்று சர்வதேச மனிதவுரிமை ஆர்வலர்கள் மத்தியிலும், சிவில் சமூக அமைப்புக்கள் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில் தமது தலைமைகள் மீதும், அரசாங்கம் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து உள்ளனர். அரசாங்கம் ஐ.நா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே மந்த கதியில் காய்களை நகர்த்தி வருகின்றது. இதனை ஐ.நாவின் ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிவுற்ற பின்னரும் அரசாங்கம் வெளிப்படையாகவே கூறிவருகின்றது. மேலும் இந்த நாட்டின் மீது எழுந்திருந்த சர்வதேச அழுத்தத்தை தாமே வலுவிழக்கச் செய்ததாகவும், ஐ.நாவில் விடயங்களை நிறைவேற்றாமலேயே தாம் சர்வதேச நெருக்கடிகளை சமாளித்து அனைவரையும் நேச சக்திகளாக மாற்றியதாகவும் அரசாங்கம் மார் தட்டுகின்றது. இந்த நிலையில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின் பன்முகத்தன்மையை கணக்கில் எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கி, அந்த மக்கள் சமத்துவ, சகவாழ்வை மேற்கொள்வதற்கு வழிவகுக்க வேண்டும். அதுவே ஐ.நா மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை நிலைநிறுத்த முடியும்.

N5