செய்திகள்

தமிழ் மக்களின் வாக்குகளா ஜனாதிபதியின் இலக்கு?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வ கட்சி மாநாட்டை நடத்தியமைக்கான காரணத்தை அறிய முடியவில்லை என்றும், இது ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டதா? என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

புதன்கிழமை சர்வகட்சி கூட்டத்தை நடத்துவதற்கு முன்னர் 7 மாதங்களுக்கு முன்னரும் ஜனாதிபதி இதுபோன்ற சர்வகட்சி கூட்டத்தை நடத்தியிருந்தார். இவ்வாறு அவர் 7 மாதங்களின் பின்னரும் ஏன் இந்த கூட்டத்தை நடத்தினார் என்று தெரியவில்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு இவ்வாறு கூட்டத்தை கூட்டினாரோ தெரியவில்லை.

அவர் இந்த கூட்டத்தில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலேயே கூறினார். ஆனால் அது 1987இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்திற்கு இதில் கடமைகள் இல்லை. இது தொடர்பான நடவடிக்கைகள் நிறைவேற்று ஜனாதிபதியிடமே உள்ளன. .இந்த விடயம் தொடர்பில் கதைக்க முன்னர் 6 வருடங்களாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது இருக்கின்றன.

அதேபோன்று உள்ளூராட்சி தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை கோருகின்றோம். இதற்கான நிதி பிரச்சினை இருக்குமாக இருந்தால் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துங்கள் என்றும் கோருகின்றோம்.

இந்நிலையில் ஜனாதிபதியின் தற்போதைய முயற்சிகள் அதிகார பரவலாக்கமா? அல்லது எதிர்வரும் தேர்தலை இலக்காக கொண்டு வேறு பிரதேச வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளா? என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன. இந்த விடயம் தொடர்பில் முதலில் எதிர்க்கட்சியிடம் கேட்பதற்கு முன்னர் ஆளும் கட்சி குழுவினரை ஒன்றிணையுங்கள். கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் செயலாளர் வேறு நிலைப்பாட்டில் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை தற்போது மாகாண சபைகளே இல்லாத நிலையில் அதிகாரங்களை வழங்க போகின்றார். அதற்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு நாங்களும் வடக்கு கட்சிகளும் கூறும் போது ஜனாதிபதி எழுந்து சென்றுவிட்டார். அப்படியென்றால் தேர்தலை ஒத்தி வைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தி வடக்கு மக்களை ஊமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றீர்களா? என்று கேட்கின்றோம் என்றார்.

-(3)