செய்திகள்

தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல!

மன்னார் தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களினால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், சூழலியலாளர்களும், உளவியல் அறிஞர்களும், கருத்து தெரிவிக்கின்ற நிலையில் அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் எத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகளும் மக்களின் வளமான எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டுமே அன்றி அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கையில் மாற்று வலுசக்தியை வலுப்படுத்துமுகமாக காற்றாலை மின்கோபுரங்கள் சூரிய சக்தி மின் ஆலைகள் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக மன்னார் தீவுப்பிரதேசத்தில் அப்பிரதேசம் சுற்றிவர கடலைக் கொண்டிருப்பதன் காரணமாக பாரிய காற்றாலைகளை அமைக்க அரசாங்கம் தனியார் துறைகளுக்கு ஊக்கமளித்து வருகின்றது.

மன்னார் மக்கள் இரண்டு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர். ஒன்று கனியவளமிக்க மண் கொள்ளையிடப்படுகின்றது. மக்கள் செரிவாக வாழக்கூடிய பிரதேசங்களில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.

மன்னார் தீவில் ஏற்கனவே முப்பதுக்கும் மேற்பட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் அதனுடைய இரைச்சல் ஒலி என்பது மக்களையும், மாணவர்களையும் வெகுவாக பாதித்து வருவதாக மக்கள் ஏற்கனவே முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

மேலதிகமாக இன்னும்பல காற்றாலைகளை அமைக்க நிறுவனங்கள் முயற்சிப்பதானது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மேல் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

மாற்றுவலுசக்திகள் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. காற்றாலை மின் உற்பத்தியும் மின்உற்பத்திக்கான மாற்றுவழி என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மக்கள் செரிவாக வாழும் பிரதேசங்களில் மிக அதிகப்படியான காற்றாலைகளை நிறுவுவதானது மக்களின் அன்றாட வாழ்வில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

என்பதும் உண்மையானது. இவை ஒருபுறமிருக்கரூபவ் ஒவ்வொரு காற்றாலை மின்கோபுரத்தை நிறுவும்பொழுதும் எழுபதடிக்குமேல் நிலம் தோண்டப்படுகின்றது. இதன் காரணமாக கடல்நீர் ஊருக்குள் வரக்கூடிய வாய்ப்பும் மழைநீர் மண்ணுக்குள் சேகரிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிலத்தடிநீர் மாசுபடுவதென்பதும் கடல்நீர் உட்புகுவதும் வெறுமனே மன்னார் தீவை மட்டும் பாதிக்கின்ற விடயமல்ல. அது மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நிலத்தடிநீரை பாதிக்கக்கூடும் என்ற அச்சமும் மக்களுக்கு உள்ளது. இதற்கெதிராகத்தான் மன்னார் தீவுப்பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

தேர்தலின் போது இவை அனைத்தும் நிறுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தாலும் இந்த வேலைத்திட்டத்தைத் தொடரும்படி ஜனாதிபதி இப்பொழுது உத்தரவிட்டிருக்கின்றார். தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் வாழ்வியல் உரிமைகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் அவை பாதித்துவிடக்கூடாது.

இந்த விடயத்தில் அத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. ஏற்கனவே முப்பது காற்றாலைகளை நிறுவும்பொழுது மக்கள் அதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. ஆனால் அதனால் இன்று ஏற்படுத்தப்படும் இரைச்சலினால் நிகழும் ஒலி மாசுபாடானது மக்களுக்கு பெரும்பிரச்சினையாக இருக்கின்றது என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

எனவே மேற்கொண்டு காற்றாலை மின்கோபுரங்களை அமைக்க வேண்டாம் என்பதுதான் மன்னார் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. இதனை அரசு கவனத்துடன் பரிசீலப்பதை விடுத்து இதற்கெதிராகப் போராடுபவர்களை அடித்துத் துன்புறுத்துவதும் சிறையிலடைப்பதும் ஜனநாயக விரோதமானதும் சர்வாதிகார அணுகுமுறையுமாகும்.

அரசாங்கம் இவற்றைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்கள் தேர்தல்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் மன்னார் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் கவனத்தில் எடுத்து ஏனைய காற்றாலை மின்கோபுர அமைப்புகளை வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதே சிறந்ததெனக் கருதுகிறோம். அத்தகைய முடிவெடுப்பதானது மன்னார் மக்கள் அமைதியாகவும் தமது வாழ்வாதாரங்களைப் பாதுகாத்து வாழவும் வழிவகுக்கும் எனக் கருதுகின்றோம் என தெரிவித்தார்.