தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் கூறிய கருத்தை ஏற்க முடியாது : சிறிதரன் எம்.பி சபையில் தெரிவிப்பு
சொந்த காணிகளுக்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதி கோரி வடக்கில் தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரெலியாவில் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு தொடர்பான 3 சட்டங்களின் கீழான கட்டளைகளை அங்கீகரித்துக் கொள்வதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தின் போதே சிறிதரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“கேப்பாபிலவு மக்கள் தொடர்ந்து 22 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 42 ஏக்கர் பரப்பு காணிக்காக 56 சிறுவர்களும், 13 முதியவர்களும் உள்ளடங்கலாக 84 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் பற்றி ஜனாதிபதி, பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளபோதும் இன்று நாளை என நாட்கள் இழுத்தடிக்கப்படுகின்றனவே தவிர தீர்வெதுவும் வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலைமையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இருப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட இதனை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் கூறியிருந்தார். மக்கள் வீதியில் அமர்ந்து சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு தமது காணிக்காக போராடிவரும் சூழ்நிலையில் அரசின் தலைவர் ஒருவர் இவ்வாறு பொய்யான தகவலைக் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கேப்பாபிலவு, புதுக்குடியிருப்பு, பரவிபாய்ஞ்சான் என பல இடங்களில் பொது மக்களின் காணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி தீர்வொன்றை உடனடியாக வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். -(3)




