செய்திகள்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் இன்று

தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்டுள்ள உத்தேச அரசியல் அமைப்பு தீர்வுத் திட்ட முன்மொழிவு இறுதி வடிவம் பெற்றுள்ள நிலையில் இன்று  செவ்வாய்க்கிழமை அது வெளியிடப்படும் என பேரவையின் இணைப்பாளர் சட்டத்தரணி புவிதரன் தெரிவித்தார்.

பேரவையின் தீர்வுத் திட்ட இறுதி வரைபு பெரும்பாலான மாற்றங்களின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுதிட்ட முன்மொழிவு தொடர்பான இறுதி முடிவெடுக்கும் கலந்துரையாடல் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில்   இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிடும்போதே சட்டத்தரணி புவிதரன் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுதிட்ட முன்மொழிவு தொடர்பில் மக்களுடைய கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டிருந்தன. வெளிநாடுகளிலிருந்தும் புலம்பெயர் தமிழர் தரப்புக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு தீர்வுத் திட்ட முன்மொழிவில் இணைக்கப்பட்டது.
விகிதாசார பிரதிநித்துவம் தொடர்பில் நாம் ஜேர்மன் முறைமையைக் குறிப்பிட்டிருந்தோம். எனினும்  மலையக மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநித்துவம் குறையலாம் என்ற விமர்சனங்கள் இது தொடர்பில் முன்வைக்கப்பட்டன.
அதற்கமைய அவற்றிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவற்றைவிட மாநிலங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் தொடர்பிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் அரசியல் யாப்பில் வழங்கப்பட்ட அதிகாரங்களை மீறி ஆளுநர் செயற்படுகின்ற போது அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் இத் தீர்வுதிட்ட முன்வரைபில் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாகாணங்களில் இயற்கை அனர்த்தங்கள், வன்முறைகள் ஏற்பட்டு அவசரகால நிலை ஏற்படுகின்றபோது மாகாணத்தில் அவசரகால நிலையை  முதலமைச்சர் எவ்வாறு பிரகடனப்படுத்துவார் என்பது தொடர்பிலும் கிடைத்த ஆலோசனைகளுக்கு அமைய திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான சில மாற்றங்களுடன் தமிழ் மக்கள் பேரவையின் அரசியலமைப்பு முன்மொழிவு  ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்த தீர்வுத் திட்டத்தை இன்னும் இரு நாட்களில் வெளியிடவுள்ளோம்.
இத்தீர்வுத் திட்ட முன்மொழிவை நேரடியாகவும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முதலமைச்சர் ஊடாகவும் அமைப்புக்கள் மற்றும் சர்வதேசத்தின் ஊடாகவும் அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம். அத்துடன் தீர்வுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்ற அரசுக்கு அழுத்தங்களைப்  பிரயோகிக்கவும் தீர்மானித்துள்ளோம்.
இத்தீர்வுத் திட்டமானது மொழி, நிலப்பரப்பு, பொருளாதாரம், கலை, பண்பாடு என்பவற்றின் அடிப்படையில்  வடக்கு, கிழக்கை ஒருங்கிணைந்த மாநிலமாக நிர்வகிப்பதை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது எனவும் பேரவையின் இணைப்பாளர் சட்டத்தரணி புவிதரன் தெரிவித்தார்.
n10