செய்திகள்
தமிழ்- முஸ்லிம்களை பிளவுபடுத்தி வேடிக்கை பார்த்த காலம் மலையேறிவிட்டது
தமிழ், முஸ்லிம் சமூகங்களைப் பிளவுபடுத்தி வேடிக்கை பார்த்த பயங்கரவாத சூழல் மாறி இன்று நல்லதோர் புரிந்துணர்வினூடாக இரு சமூகங்களும் ஒன்றிணைந்து புதியதோர் கலாசாரத்தினை தோற்று வித்திருக்கின்றன என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பா×க் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட ஆரையம்பதி காங்கேயனோடை அல் அக்ஷா மகா வித்தியாலத்திற்கு போட்டோ கொப்பி மற்றும் பிரிண்டர் இயந்திரங்களை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ;
தமிழ், முஸ்லிம் சமூகங்களைப் பிளவுபடுத்தி வேடிக்கை பார்த்த பயங்கரவாத சூழல் மாறி நல்லாட்சி மலர்ந்திருக்கின்ற இத்தருணத்தில் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு இந்நாட்டின் சுபீட்சத்திற்கும் ஒற்றுமைக்கும் பாடுபட வேண்டும்.
இனப்பாகுபாடின்றி எமது மாவட்டத்திலுள்ள பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் பாடுபடுகின்றனர். அதன் அடிப்படையில் இப்பாடசாலையில் சகோதர இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் கல்வி கற்பிக்கின்றமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
காங்கேயனோடை கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் பாரிய பங்களிப்பினை அல் அக்ஷா வித்தியாலயம் வழங்கிக்கொண்டிருக்கின்றது. இப்பாடசாலையின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி அறிவு வளர்ச்சிக்கும் தேவையான விடயங்களை செய்துகொடுக்க வேண்டியது இப்பிரதேசங்களில் உள்ள தனவந்தர்கள் மற்றும் அரசியல் தலைமைகளின் கடமையாகும். அதன் அடிப்படையில் கடந்த வருடம், அதிபர் பாடசாலையின் நிலைமைகளை என்னிடம் எடுத்துரைத்து போட்டோ கொப்பி இயந்திரம் முக்கிய தேவையாக இருக்கின்றது. அதனைப் பெற்று தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளினைப் பூர்த்தி செய்யும் முகமாக கடந்த வருடம் எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான போட்டோ கொப்பி மற்றும் பிரிண்டர் இயந்திரங்களை இன்று கையளித்துள்ளோம்.
இலங்கை அரசாங்கம் பாடசாலைகளை வளப்படுத்தி இலவச கல்வியை வழங்குவதன் நோக்கம் மாணவர்களாகிய நீங்கள் சிறந்த முறையில் கல்வியினை கற்று சிறந்த கல்விமான்களாக வளர்ச்சியடைந்து இலங்கைத் திருநாட்டிற்கு நற்பிரஜைகளாகவும் பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெற்றோர்களுக்கும் மதிப்பையும் பெருமையையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே. எனவே நீங்கள் அதற்கான முழு முயற்சியினையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் 600 பாடசாலைகளை அபிவிருத்தி செய்கின்ற திட்டத்தில் இப்பாடசாலையை உள்வாங்க அனைத்து நடவடிக்கைகளையு>ம் மேற்கொண்டிருக்கின்றோம். மாணவர்களில் கல்விப் பெறுபேற்று வீத வளர்ச்சியானது அதிகரிக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்துப் பாடசாலைகளிலும் ஏதாவது ஒரு குறைபாடு காணப்படுகின்றது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் கிழக்கு மாகாண சபை ஈடுபட்டு வருகின்றது. படுவான்கரைப் பிரதேசத்தில் இருக்கின்ற பாடசாலைகளைவிட எமது கரையோர பிரதேசங்களில் இருக்கும் பாடசாலைகள் வளர்ச்சிடையந்து காணப்படுகின்றன. படுவான்கரை பாடசாலைகளின் வளப்பற்றாக்குறை காரணமாக அங்குள்ள மாணவர்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இருந்தபோதிலும் அவர்கள் கல்வியை இடைவிடாமல் கற்று இன்று மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளாக அரச நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கின்றனர்.
எனவே இங்குள்ள மாணவர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்தும் ஏற்படுகின்ற சிரமங்கள் அனைத்தையும் சகித்துக்கொண்டும் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும். ஆசிரியர்களையும் மற்றும் சக மாணவர்களையும் மதித்து செயற்பட வேண்டும். அதனூடாக அனைவருக்கும் கௌரவத்தினை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதே போல் இங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பினை வழங்கி நாட்டின் சுபீட்சத்திற்கும் ஒற்றுமைக்கும் பாடுபட வேண்டும். நல்லதோர் வளமிக்க சமுதாயத்தினை உருவாக்கி, அதனூடாக அனைத்து துறைகளிலும் தலைசிறந்த கல்விமான்களாக இம்மாணவர்கள் திகழ்ந்து இப்பிரதேசத்திற்கும் பாடசாலைக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
n10




