செய்திகள்
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு விஷால் போட்டி பொருளாளர் பதவிக்கு குஷ்பு
சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். அவரது அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு நடிகை குஷ்பு நிற்கிறார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தற்போதைய நிர்வாகிகள் பதவி காலம் முடிவடைவதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய அடுத்த மாதம் (மார்ச்) 5–ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தலைவர் பதவிக்கு ஒருவரும் 2 செயலாளர்களும், 2 துணைத்தலைவர்களும் ஒரு பொருளாளரும் 21 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் இந்த தேர்தல் நடக்கிறது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனை ஐகோர்ட்டு நியமித்து உள்ளது. வேட்புமனுதாக்கல் கடந்த 30–ந்தேதி தொடங்கியது.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு நடிகர் விஷால் போட்டியிடுகிறார். சங்கத்தில் இருந்து இவரை 3 மாதங்கள் நீக்கி வைத்திருந்த முடிவை தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு நேற்று முன்தினம் கூடி ரத்து செய்ததால் தேர்தலில் அவர் நிற்கிறார். நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் அவர் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் அணி சார்பில் சங்கத்தின் பொருளாளர் பதவிக்கு நடிகை குஷ்புவும் செயலாளர்கள் பதவிக்கு ஏ.எல்.அழகப்பன், கே.ஈ. ஞானவேல்ராஜா ஆகியோரும் துணைத்தலைவர் பதவிக்கு நடிகர் பார்த்திபனும் போட்டியிடுகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு தற்போதைய செயலாளர் ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகிறார். அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவரது அணி சார்பில் செயலாளர் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் ஆகியோரும் துணைத்தலைவர் பதவிக்கு கே.ராஜன், சுரேஷ்காமாட்சி ஆகியோரும் மனுதாக்கல் செய்தனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு வி.சி.குகநாதன், அழகன் தமிழ்மணி உள்ளிட்ட பலர் போட்டியிடுகிறார்கள்.
வேட்புமனுதாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. 8–ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
N5




