தற்போதைய ஆட்சியின் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை: சபையில் சம்பந்தன்
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளாலும் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருப்பதாகவும் முன்னைய அரசாங்கத்தை போன்றே இந்த அரசாங்கமும் தம்மை கொடுமைப்படுத்துவதாகவே தமிழ் மக்கள் கருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.
இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டங்கள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் தீர்வொன்று அவசியம் என்று தான் நாம் வலியுறுத்தி வருகிறோம். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. நாம் இது தொடர்பான நடவடிக்கைகள் வெற்றியளிப்பதற்கு பல்வேறு ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளோம். பிளவுபடாத ஐக்கிய நாடொன்றுக்குள் தீர்வொன்றை காண்பதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம். அதில் எமது கௌரவமும் எமது பிரதேசத்தில் நாமே எமது தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்த பிரச்சினையினால் கடந்த காலங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளதுடன், ஒரு இலட்சத்து 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாதுகாப்பு படையினரும் எமது போராளிகளும் ஏனைய சிவில் மக்களும் உயிரிழந்துள்ளனர். நாம் இல்லையென்று சொல்லவில்லை. வன்முறைகள் மற்றும் யுத்தம் ஆகியவையே இதற்கு காரணமாக இருந்தன. பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட்டிருந்தால் ஆயுதம் போராட்டம் உருவாகியிருக்காது. இந்த இழப்புகளும் இருந்திருக்காது. ஆகவே, இனியாவது இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை கண்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் முன்னைய அரசாங்கத்தைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் கையாள்வதாகவே மக்கள் நம்புகின்றனர். காணி விவகாரத்தை பொறுத்த வரையில், சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் மேலும் பல காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் தயாராக இல்லை.
சொந்த காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் கேப்பாபிளவு மக்கள் இன்றும் தமது குடும்பம், பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது காணிகள் திரும்ப அவர்களுக்கே ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் மேலும் அர்ப்பணிப்புடனான செயற்பாட்டை நாம் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கிறோம்.
இந்த காணிகள் புலிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த காணிகளாக இராணுவத்தினர் கருதுகின்றனர். புலிகள் பிடித்து வைத்திருந்தபோது அன்று எதிர்க்காத மக்கள் இன்று எப்படி உரிமை கோர முடியும் என்று இராணுவத்தினர் கேட்கலாம். ஆனால், இராணுவம் என்பது சர்வதேச தர அங்கீகாரங்கள் கொண்ட அரசாங்கமொன்றினுடையதாக இருக்கும் போது விடுதலைப் புலிகளைப் போன்று செயற்பட முடியாது.
அதேபோல், அனைத்து படையினரும் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்று நாம் கூறவில்லை. மேல் மட்டங்களில் இருந்தான உத்தரவுகளின் பேரில் அவர்கள் செயற்பட்டிருக்கலாம். சில படையினர் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை போன்ற தனிப்பட்ட ரீதியிலான குற்றங்களிலும் ஈடுபட்டிருந்திருக்கலாம். அவைப் பற்றி தகுந்த விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டு பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது மனம்பேரி என்ற இளம்பெண் ஒருவர் படையினராலேயே படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர்கள் தொடர்பில் கண்டறியப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. ஆகவே, அவ்வாறு தவறிழைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அனுபவிக்க வேண்டும்.
இதேநேரம், படையினருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான மனக்கசப்பும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். டி.எஸ. சேனாநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் படைத் தளபதிகளாக தமிழர்கள் இருந்திருக்கின்றர். அவர்கள் திறமைமிக்க அதிகாரிகள். ஆகவே, தமிழ் மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மனக்கசப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மேலும் தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களும் படையில் அங்கம் வகிக்க வேண்டும்.
படையினர் தரப்பிலும் காணாமல்போனோர் இருக்கின்றனர். அவர்களது குடும்பத்தினருடன் பேசி அவர்களுக்கு தேவையான இழப்பீடுகள் உள்ளிட்டவற்றை அரசாங்கம் வழங்கியுள்ளதால் அவர்கள் போராடவில்லை. ஆனால், அந்த வசதிகள் எமது மக்களுக்கு வழங்கப்படவில்லை. அரசு இதற்கு பதிலளித்து செயற்பட வேண்டும். உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டு இழப்பீடுகள் வழங்க வேண்டும்.
அரசின் நடவடிக்கைகளில் மக்களுக்கு முழுமையான திருப்தி இல்லாவிட்டாலும் கூட, ஓரளவேனுமாவது திருப்தி இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். -(3)




