செய்திகள்

தலதா மாளிகையை அண்மித்த வீதியை திறக்கக் கோரிய ஆர்ப்பாட்டத்தால் மோதல்

பௌத்தர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கண்டி தலதா மாளிகைக்கு முன்னாள் உள்ள தர்மாராஜ மாவத்தை வீதியை திறக்கக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இரண்டு பிரிவினருக்கிடையே நடந்த மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த வீதியை திறக்கக்கோரி, கண்டி நகரின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் அமைப்பினர் அங்குள்ள தர்மராஜ கல்லூரிக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டத்துடன், பேரணியாக தலதாக மாளிகையை நோக்கி சென்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர்களும் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் பேரணியில் கலந்துக்கொண்டனர்.

இதனிடையே இந்த வீதியை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிக்குகள் அடங்கலான மற்றுமொரு குழுவினர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பேரணியாக வந்த இந்த இரண்டு குழுவினரும், ஒருவரை ஒருவர் சந்தித்தபோதே அங்கு மோதல் வெடித்தது.

இதளையடுத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

இந்த வீதி மூடப்பட்டுள்ளமையினால், வாகன நெரிசல், சுற்றுச்சூழல் மாசு ஆகியவை ஏற்படுவதாகவும், 15 கிலோ மீட்டர் தூரத்தை வாகனத்தில் கடக்க மூன்று மணி நேரம் எடுப்பதாகவும் கண்டி நகரின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் அமைப்பு கூறுகிறது.

இந்த வீதியை திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் இந்த பாதையை திறப்பதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று எதிர்ப்பு தெரிவித்த குழுவினர் தெரிவித்தனர்.

1998 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலதா மாளிகை மீது நடத்திய தற்கொலைத் தாக்குதல் நடத்தியதைஅடுத்து, இந்த வீதி மூடப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

n10