செய்திகள்

தாஜுதின் கொலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

ரகர் வீரர் வசீம் தாஜுதின் கொலையுடன் சில மாதங்களுக்கு முன்னர் மித்தெனியவில் கொல்லப்பட்ட அருண சாந்த எனப்படும் கச்சா என்பவர் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் பதில் பேச்சாளரான உதவி பொலிஸ் அத்தியட்சர் மினுர சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2012 மே 17ஆம் திகதி அதிகாலை வேளையில் பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதின் வாகன விபத்தில் உயிரிழந்திருந்த நிலையில் அது சந்தேகத்திற்கிடமான மரணமாக முதலில் கூறப்பட்டது. இதன்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது முதலில் வாகன விபத்தால் ஏற்பட்ட மரணமாக கூறி அந்த விசாரணை பைல் மூடப்பட்ட நிலையில், அதன் பின்னர் 2015ஆம் ஆண்டில் பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த அறிக்கைக்கு அமைய அது தொடர்பான விசாரணை பொறுப்புகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது. இதன்போது முதலில் செய்யப்பட்ட மரண விசாரணை சரியாக நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி கல்கிசை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரண்டாவது மரண பரிசோதனை அந்த உடலின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு அது வாகன விபத்தால் ஏற்பட்ட மரணம் அல்ல. இதுவொரு கொலை என்று தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று தாஜுதின் பயணித்த வாகனம் பயணித்த வீதிகள் மற்றும் அவரை பின்தொடர்ந்த வாகனங்கள் தொடர்பில் சீசீரிவி காட்சிகள் வெளியாகின. எனினும் சம்பந்தப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்படவில்லை.

இந்நிலையில் தற்போது இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள கேகல்பத்மே பத்மே உள்ளிட்ட குழுவில் பெக்கோ சமந்தவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது சில மாதங்களுக்கு முன்னர் மித்தெனியவில் கொல்லப்பட்டஅருணசாந்த என்ற கச்சா கொலையுடன்  பெக்கோ சமந்த தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கச்சா என்பவர் கொல்லப்பட முன்னர் யூடியுப் நேர்காணலொன்றில் தாஜுதின கொலை தொடர்பில் பல விடயங்களை கூற முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாஜுதின் கொலையுடன் தொடர்புடைய அவரின் வாகனத்தை பின்தொடர்ந்த வாகனத்தில் கச்சா இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கச்சாவின் மனைவி அவரை வீடியோவில் அடையாளம் காட்டியுள்ளார்.

இதன்படி இப்போது விசாரணைகளில் தாஜுதின் கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி தொடர்ந்தும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.