தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையமா? அனுமதிக்க முடியாது என விவசாய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு அனுமதிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்து வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை கல்லூரி முன்பாக இன்று மேற்கொண்டனர்.
வவுனியா, தாண்டிக்குளம், விவசாய கல்லூரி வாயில் முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் ‘ தமிழ் தலைமைகளே மாணவர்கள் கல்வியை சீர்குலைக்காதே, வேண்டாம் வேண்டாம் தாண்டிக்குளத்தில் பொருளாதார நிலையம், கல்விச் சூழலை குழப்பாதே, தமிழ் தலைமைகளே மாணவர்கள் நிலையை புரிந்து கொள், உங்களுக்கு அரசியல் மாணவர்களுக்கு வாழ்க்கை, எமது தலைமைகளே கல்விச் சூழலை பாதுகாப்பு தாருங்கள்’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு விவசாய கல்லாரி ஆகிய எமது கல்லூரியில் நாளாந்தம் மாணவர் தொகை அதிகரித்து அதன் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது வரவேற்கக் கூடிய விடயம். அதனை நாமும் வரவேற்கின்றோம். ஆனால் அதனை பொருத்தமான இடத்தில் அமைப்பதை விடுத்து எமது கல்வியை சீர்குலைக்கும் வபைகயில் அமைக்க முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் அமையும் பட்சத்தில் அங்கு வரும் பலவகைப்பட்ட மரக்கறிகளுடன் இணைந்து பீடைகள், களைகள், கிருமிகளும் வரவாய்ப்புள்ளது. அது எமது கற்றல் மற்றும் களஆய்வுப் பயிர் செய்கையில் தாக்கத்தை உண்டு பண்ணும். அங்கு வரும் வாகன இரைச்சல்கள், சத்தங்கள், கழிவுகள் எமது கல்லூரி மற்றும் விடுதிகளில் தங்கி மாணவர்கள் கற்பதையும், இயல்பு நிலையையும் குழப்பும். காலப்போக்கில் அதை விஸ்தரித்தல், வீதிகளை விஸ்தரித்தல் போன்றவற்றால் எமது கல்லூரி பாதிப்படையும். எனவே எமது தலைமைகள் கடந்த காலத்தில் கல்வித் தடைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் திரண்டு எழுத்த சம்பவங்களை மனதில் நிறுத்தி நாமும் கற்க வேண்டும் என்பதை உணர்ந்து தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதை தடுக்கு வேண்டும். அதனை அமைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
N5







