செய்திகள்

தாழமுக்கம் சூறாவளியாக விருத்தியடைய வாய்ப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று, மே 09 ஆம் திகதி ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், படிப்படியாக ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட அகலாங்குகள் 02N இற்கும் 15N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 85E இற்கும்100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

-(3)