தியாக தீபம் நினைவேந்தலும் நினைவு கூரும் உரிமையும்!
சிவ.கிருஸ்ணா-
தமிழ் தேசிய இனம் தனது உரிமைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியிலும், ஆயுத ரீதியிலும் முன்னெடுத்து மீண்டும் ஜனநாயக ரீதியில் ஒரு தீர்வுத் திட்டத்தை கோரி நிற்கின்றது. இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற காலம் முதல் ஜனநாயக ரீதியாக தமது போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுத்திருந்த நிலையில் தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவாக இளைஞர், யுவதிகள் ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களுடன் ஒப்பந்தம் செய்த இந்திய அரசாங்கம் ‘அமைதிப் படை’ என்ற பெயரில் வடக்கிற்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்தது. இந்திய இராணுவம் அமைதிப்படையாக வந்த போதும் மெல்ல மெல்ல தனது சுயரூபத்தை காட்டத் தொடங்கியது. தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபடத் தொடங்கியது. இந்தநிலையில் இந்திய அமைதிப்படையின் முகத்திரையை கிழிக்க களம் இறங்கியவனே தியாக தீபம் தீலீபன்.
அகிம்சையைப் போற்றும் பாரத தேசம் தியாக தீபம் திலீபன் அவர்களின் கோரிக்கையையும் கண்டு கொள்ளும் என்ற ஒரு நம்பிக்கையில் திலீபன்இ 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூர் வீதியில் 12 நாட்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தான். அந்தப் போராட்டத்தை இந்திய அமைதிப்படையோ அல்லது இந்திய அரசாங்கமோ அல்லது இலங்கை அரசாங்கமோ கண்டு கொள்ளவில்லை. தியாக தீபத்தின் உயிர் 26.09.1987 அன்று இந்த மண்ணை விட்டு பிரிந்தது. ஆயுத ரீதியில் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பத்தில் அகிம்சைப் போராட்டத்திலும் நம்பிக்கை கொண்டிருந்தது. அதனாலேயே திலீபனை பறிகொடுத்தது தமிழர் தேசம். ஆயுத ரீதியிலும், அகிம்சை ரீதியிலும் போராடிய விடுதலைப் புலிகள் அதன் பின் ஆயுதவழிப் போராட்டதிதை தீவிரப்படுத்தியும் இருந்தனர்.
2009 முள்ளியவாய்கால் பேரவலத்துடன் தமிழ் தேசிய இனத்தின் ஆயுதவழிப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது. அதன் பின்னர் கடந்த மஹிந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமது உரிமைக்காக போராடி இறந்த உறவுகளைக் கூட மக்கள் நினைவு கூர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த மைத்திரி – ரணில் அரசாங்கம் நினைவு கூரல் உரிமைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. முள்ளியவாய்கால் நினைவேந்தல், மாவீரா நாள், தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் என இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளை நினைவு கூர முடியாது என அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதும் மாவீரர் நாளில் துயிலும் இல்லங்களில் விளக்கு ஏற்றுவதற்கும், தியாகதீபம் திலீபனை நினைவு கூறுவதற்கும் இடமளித்திருந்தது.
அந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் புலம்பெயர் தேசங்களிலும், வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இம்முறையே இவ் நினைவு தினத்தில் அதிக மக்கள் கூட்டத்தையம் காண முடிந்திருக்கிறது. புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகின்ற போதும் இம்முறை பிரித்தானியாவில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இரண்டு அம்சக் கோரிக்கையுடன் நடைபெற்றுள்ளது.
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் பிரதமர் இல்லத்திற்கு முன்பாக கேசவன், விஜியதீபன், பிரசாத், குகறூபன், அசந்தன் உள்ளிட்ட பல ஈழத் தமிழ் இளைஞர்கள் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் போராளிகளுக்கான குடும்ப நலனுக்கான பிரதி அமைச்சர் நிமலன், விளையாட்டு சமூக நலன் பிரதி அமைச்சர் யோகலிங்கம் ஆகியோருடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களாகிய குகறூபன், குஜியந்தன், கேசவன், நிமல் ஆகியோரின் ஏற்பாட்டில் கடந்த 17, 24, 25 ஆம் திகதிகளில் இரத்த தான முகாமும் பிரித்தானியாவில் இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டு இரத்தானம் வழங்கியதுடன், தியாக தீபம் திலீபனுக்கும் அஞ்சலி செலுத்தினர். புலம்பெயர் தேசங்கள் பலவற்றிலும் திலீபனின் நினைவு தின நிகழ்வுகள் ஈழத்தமிழர்களால் நினைவுகூரப்பட்டது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தியாதீபம் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் 12 தினங்களும் நினைவு தினம் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. இறுதி நாளில் முன்னாள் போராளி ஒருவர் கைதடியில் இருந்து நல்லூர் வரை தூக்குக் காவடி எடுத்து திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார். மட்டக்களப்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றதுடன், எதிர்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் அவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
தியாக தீபம் மறைந்து 30 ஆண்டுகள் கடந்தும் அவர் இன்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களால் பூசிக்கப்படுகின்றார். தமிழ் மக்களின் உரிமைக்காக அவன் மடிந்த போதும் அந்த உரிமை இன்று வரை தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. புதிய அரசியலமைப்பு வரவுள்ள நிலையில் தமிழ் மக்களின் உரிமைக்கான தியாகங்களையும், அவர்களது இழப்புக்களையும், வலிகளையும் புரிந்து கொண்டு ஒரு நிரந்தர தீர்வை காண்பதற்கு தென்னிலங்கை சமூகம் முன்வர வேண்டும். அதன் மூலமே ஒன்று பட்ட இலங்கையை கட்டியெழுப்பி, நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வுடன் வாழக் கூடிய நிலை உருவாகும்.
N5
