திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பொலிஸாரின் விளக்கம்!
திருகோணமலை துறைமுக காவல்துறை பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் இருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அமைதியின்மையைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அத்துடன், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சில தவறான செய்திகளும் உருவாக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அது தொடர்பான சரியான நிலைமையை தெளிவுபடுத்துவதற்காகவே, அறிக்கையை வெளியிடுவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் தேரர்கள் மற்றும் அதன் நம்பிக்கையாளர்கள், திருகோணமலை நகரில் கடற்கரை பாதுகாப்பு வலயத்துக்குள் அத்துமீறி குடிலொன்றை அமைத்து புத்தர் சிலை ஒன்றை வைக்க முயற்சிப்பதாக முறைப்பாடு ஒன்று கிடைத்தது.
கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள முகாமைத்துவத் திணைக்கள அதிகாரிகளே, திருகோணமலைத் துறைமுக பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை செய்தனர்.
அதற்கமைய, காவல்துறை அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று, குறித்த அத்துமீறிய நிர்மாண வேலையை நிறுத்துமாறு அறிவுறுத்திய போதிலும், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள பகுதியில், இதற்கு முன்னரும் அத்துமீறிய நிர்மாணம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.




