திருக்கேதீஸ்வரம் மர்ம கிணறு தோண்டும் நடவடிக்கை நிறுத்தம்: மீண்டும் பணிகள் இன்று ஆரம்பம்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழிக்கு சற்று தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட மர்ம கிணறு தோண்டும் நடவடிக்கை நேற்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டுள்ளதோடு,மீண்டும் குறித்த கிணற்றின் அகழ்வுப்பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெறவுள்ளது.
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிக்கு சற்று தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட மர்ம கிணறு திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
முழுமையாக மூடப்பட்ட குறித்த கிணறு தோண்டிய ஆரம்பத்தில் சிறிய இரண்டு எலும்புத்துண்டுகள் தடையங்களாக மீட்கப்பட்டது.மதியம் 1 மணிவரை தோண்டப்பட்ட போது வேறு எவ்வித தடையங்களும் மீட்கப்படவில்லை.

மீண்டும் மாலை 2 மணியில் இருந்து 5 மணி வரை குறித்த கிணறு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன் போது கிணற்றின் கட்டுகள் உடைக்கப்பட்டு கற்கள் அகழ்வு பணியின் போது கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. தற்போது வரை 2.5 அடி தோண்டப்பட்டுள்ளது.
எனினும் எவ்வித தடையங்களும் மீட்கப்படவில்லை.இந்த நிலையில் குறித்த கிணற்றின் அகழ்வு பணிகள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அண்மையில் மனித புதைகுழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.இந்த நிலையில் காணாமல் போன உறவுகள் சார்பாக குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான கிணறு ஒன்று இருப்பதாக சட்டத்தரணிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதோடு விசாரனைகளும் இடம் பெற்று வந்தது.

இந்த நிலையிலே குறித்த கிணற்றில் மனித எலும்புக்கூடுகள் காணப்படலாம் என்ற சந்தேகத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




