திருமலையில் கடற்புலிகளின் போர்த்தளபாடங்களையும் பார்வையிட்டார் இந்தியத் தளபதி
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியத் தளபதி வைஸ் அட்மிரல் கிரிஷ் லுத்ரா, நேற்று மதியம் திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படையின் டொக்யார்ட் தளத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
உலங்குவானூர்தி மூலம், திருகோணமலைக் கடற்படைத் தளத்தைச் சென்றடைந்த வைஸ் அட்மிரல் கிரிஷ் லுத்ராவுக்கு கிழக்கு கடற்படைத் தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதையடுத்து இலங்கை கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதியும், கடற்படையின் பிரதி தலைமை அதிகாரியுமான ரியர் அட்மிரல் நீல் ரொசாரியோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, இலங்கை கடற்படையின் பயிற்சி வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.
குறிப்பாக நீருக்கடியிலான தாக்குதல்களை முறியடிக்கும் பயிற்சிகள் குறித்து அவர் ஆராய்ந்ததுடன், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், படகுகள் மற்றும் தளபாடங்களையும் பார்வையிட்டார்.
அதையடுத்து இலங்கை கடற்படையின் நான்காவது அதிவேகத் தாக்குதல் அணியின் பீரங்கிப் படகின் மூலம், திருகோணமலைத் துறைமுகப் பகுதியையும் சுற்றிப் பார்வையிட்டுள்ளார்.

n10




