செய்திகள்

தீர்வுக்கான அழுத்தத்தை கொடுக்க பேரவையின் செயற்பாடு தேவை! தமிழ் மக்கள் பேரவை குறித்து வன்னி மக்களின் கருத்துக்கள்

-கே.வாசு-

கடந்த சில வாரங்களாக தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழ் ஊடகங்கள் மத்தியிலும் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விடயமாகிவிட்டது தமிழ் மக்கள் பேரவை. கடந்த மாதம் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத்தலைமையில் தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவை பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, சில விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. புதிய அரசாங்கம் சர்வதேச அழுத்தம் காரணமாக அரசியல் யாப்பு சீர்திருத்தம், இனப்பினரச்சனை தீர்வு என்பன தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய சூழ்நிலைகள் உருவாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 30 வருட அகிம்சை, 30 வருட ஆயுதப்போராட்டம் என இனப்பிரச்சனைத் தீர்வுக்காக போராடிய தமிழ் பேசும் மக்கள் இன்று மீண்டும் ஒரு ஜனநாயக போராட்டத்திற்குள் உள்ளனர்.

தமிழ் மக்களுக்கான தீர்வு எவ்வாறு அமைய வேண்டும், தமிழ் மக்கள் முன்னுள்ள காணிப்பிரச்சனை, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோர் விவகாரம் என்பன தொடர்பாக வெளிப்படையாக அரசாங்கத்திற்கும், சர்வதேச இராஜதந்திரிகளுக்கும் மக்கள் கருத்துக்களை முன்வைக்கும் வகையில் ஒரு மக்கள் இயக்கமாக தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இது எதிரானது அல்ல எனவும் அதனுடன் இணைந்தே இது பணியாற்றும் எனவும் கூறப்பட்டாலும், கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் இதனை கடுமையளாக விமர்சித்து வருகின்றன. ஊடகங்கள் கூட இந்த விடயத்தில் இரு நிலைப்பட்டு செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட மக்கள் சிலர் எமக்கு வழங்கிய கருத்துக்கள் இவை…

திவாகரக்குருக்கள்,சிதம்பர லக்சுமி திவாகரக்குருக்கள்,
பிரதம குரு,
வவுனியா ஆதிவிநாயகர் ஆலயம்

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்களது பேரவை எமக்கு விடிவைத் தரவேண்டும். இன்று அவரது பெயரில் பல கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஒன்றுபட்டு நிற்கின்றன. கடந்த 60 வருடகால எமது பிரச்சனைக்கும், துன்பத்தில் இருந்து நாம் விடுபடுவதற்கும் 2016 ஆம் ஆண்டில் வழி ஏற்பட வேண்டும். அதற்கு விக்கினேஸ்வரன் ஐயா தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை ஒரு திறந்த வெளி அரங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அவர்கள் அவர்கள் கருத்துக்களையும் பெற்று தீர்வு நோக்கி நகர வேண்டும். வடக்கு, கிழக்கு என்ற வேறுபாடின்றி அனைவரும் தமிழ் மக்கள் பேரவையின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

எஸ்.கண்ணன்

எஸ்.கண்ணன்
வியாபார நிலைய உரிமையாளர்,
வைரவபுளியங்குளம்

எமது தமிழ் மக்கள் மத்தியில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அரசியல் கைதிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பில் பாரபட்சம், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனை, இராணுவ ஆக்கிரமிப்பு, கலாசார அழிவு என் பல பிரச்சனைகளை நாம் எதிர் கொண்டு வருகின்றோம். பாராளுமன்றத்தில் எமது வாக்குப் பலத்தால் நாம் அனுப்பி வைத்த பலர் இன்று பதவி மோகத்தில் இருக்கிறார்கள். இந்த பிரச்சனைகளை தீர்க்க வழங்கும் அழுத்தம் போதியதாக இல்லை. இவற்றில் வெளிப்படை தன்மையாகவும் அவர்கள் பேசுவதாக தெரியவில்லை. எனவே, தமிழ் மக்கள் நலன்சார் சிந்திக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து தமிழ் மக்கள் பேவை மக்கள் முன்னுள்ள இப்பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். ஆயுதம் ஏந்தாத வகையில் ஜனநாயக ரீதியாக தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வைப்பெற இந்த பேரவை உழைக்க வேண்டும். விக்கினேஸ்வரன் ஐயா அவர்களின் இந்த முயற்சிக்கு என்றும் எமது ஆதரவுகள்.

ஜெயசீலன்எம்.ஜெயசீலன்
தனியார் கல்வி நிலைய ஆசிரியர்,
கணிதக்கல்லூரி- வவுனியா

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கம் ஒரு ஆக்கபூர்வமான செயற்பாடு. காரணம் தமிழ் மக்கள் மேய்ப்பர் இல்லாத ஆடுகளாக கனகாலம் இருக்கிறார்கள். தங்களுக்கு என்ன நடக்கிறது, என்ன செய்ய வேண்டும், யார் தலைமை ஏற்று நடத்துவது, யார் பொறுப்பு கூறுவது என ஒரே குழப்பம். கட்சிகள் எல்லாம் செயலற்றவர்களாகவும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் மக்களுக்கு தெரியாது. இந்த நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாகியுள்ளது. அதை உருவாக்கியவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றிகள். இதுவும் ஏனைய கட்சிகளைப் போல் இருக்காது தமிழ் மக்கள் பிரச்சனையை சீக்கிரமாக தீர்க்க் கூடிய ஒரு மக்கள் இயக்கமாக செயற்பட வேண்டும்.

சந்திரகுமார்செ.சந்திரகுமார்,
தலைவர்,
வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம்

தமிழ் மக்கள் பேரை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதனை நாம் சந்தேக கண் கொண்டு பார்க்கவில்லை. இருப்பினும் அதில் வெளிப்படைத் தன்மை இன்னும் வரவில்லை. பகிரங்கமாக எல்லா பொது அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. தமிழ் மக்கள் பேரவை என்ன செய்யப் போகிறது என அடிமட்ட தமிழ் மக்களுக்கு தெரியாது. அவர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் வெளிப்படுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு என்பது ஒரு மக்களுக்கும் தெரியாது. அதனை மக்கள் முன் வெளிப்படுத்தி முதலமைச்சர் என்றாலும் தீர்வைப் பெற வெளிப்படையுடன் செயற்பட வேண்டும்.

கி.சிவஇந்திராணி,
வீட்டுப் பணிப்பெண்,
கற்குழி

தமிழ் மக்களைப் பொறுத்தவரை நாம் பல வருடங்களாக எமது அரசியல் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமையை நம்பி வருகின்றோம். அது எமக்கான தீர்வை நோக்கி நகருகின்றது. இந்தவேளையில் புதிய அமைப்புக்கள் தோன்றி மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி ஒற்றுமையை சிதைக்காமல் தமிழ் மக்கள் பேரவை, கூட்டமைப்பு இரண்டும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.

இவ்வாறு பலர் தமது கருத்துக்களை பகிர்கிறார்கள். இன்னும் பல மக்களின் கருத்துக்களின் பகிர்வுகள் தொடரும்…..

N5