செய்திகள்

துயரங்கள் நிறைந்த மே மாதத்தில் வடக்கையும் வாட்டியெடுத்த வர்ணபகவான்!

-கே.வசந்தரூபன்-

மே மாதம் என்பது இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மாதம். பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட ஒரு துயரம் நிறைந்த மாதம். அந்த துயரத்தின் 7வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்படும் வேளை, வர்ணபகவானும் தனது பங்கை கொட்டித் தீர்த்துள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் மழை காரணமாக கடுமையாக பாதிப்படைந்துள்ளன. இலங்கை முழுவதும் இதன் தாக்கம் இருந்த போதும் மீள்குடியேறிய வடபகுதியில் மக்கள் பெரும் இடர்களை எதிர்நோக்கியே இருந்தனர். முழுமைபெறாத மீள்குடியேற்றம், தற்காலிக வீடுகள், ஒழுங்கற்ற வடிகாலமைப்பு என்பவற்றுக்குள் சிக்குண்ட வடக்கின் பல குடியிருப்புக்கள் அடை மழைகாரணமாக மிகவும் அதிகமாகவே பதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் வெப்பத்தினால் சில உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருந்தன. அதிக வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் மழையை வேண்டியும் இருந்தனர். அந்த மழை தற்போது குளிர்ச்சியை மட்டுமல்ல மக்கள் வாழ்வில் அதிக பாதிப்புக்களையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது. அந்த வகையில், வடக்கில் பெய்த மழை காரணமாக ஏறத்தாழ 8000 குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தைந்தாயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

vel2அதிக மழை

இலங்கையில் அதி கூடிய மழை வீழ்ச்சி கிளிநொச்சியில் பதிவு. கிளிநொச்சி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியாக இதுவரை காலமும் 1250 மில்லி மீற்றர் இருந்து வந்த நிலையில் கடந்த திங்கள் மாத்திரம் 380 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியது. இதுவே கிளிநொச்சி வரலாற்றில் அதி கூடிய மழை வீழ்ச்சி என்பதுடன் இம் மழை காரணமாக கிளிநொச்சியின் பரந்தன், சிவபுரம், கட்டைக்காடு, பொன்னகர், அறிவியல் நகர் என பல பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்ததுடன், குளத்து நீர்மட்டங்களும் அதிகரித்தது. இது தவிர, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் மழைக்கு குறைவில்லை.

vel1குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

நீண்டநாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் காரணமாக குளத்தின் நீர்மட்டம் தாழ்வடைந்திருந்த நிலையில் கடும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்தது. இரணைமடுக்குளம் 26 அடி, அக்கராயன்குளம் 27.8 அடி, கரியாலை நாகபடுவான் குளம் 11 அடி, பாவற்குளம் 12 அடி, கனகராயன்குளம் 11 அடியாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை, கட்டுக்கரைக் குளம், வன்னிவிளாங்குளம் உள்ளிட்ட பல குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. வவுனியா குஞ்சுக்குளம் உடைப்பபெடுத்துள்ளதுடன் அதன் கீழ் இருந்த வயல் நிலங்கள் அழிவடைந்தும் உள்ளன. செட்டிகுளம், முகத்தான் குளம் உடைப்பெடுக்கும் நிலையில் இருந்த போதும் அணைகட்டி தடுக்கப்பட்டுள்ளது.

20151114_094656நலன்புரி நிலையங்களின் அவலநிலை

யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் கடந்துள்ள போதும் வடக்கில் இன்றும் இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் ஆயிரத்து 608 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 732 பேர் வாழ்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 318 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 737பேர், வவுனியா மாவட்டத்தில் 290 குடும்பங்களைச் சேர்ந்த 995 பேர் வாழ்வதாகவும் தகவல்கள் இருக்கிறது. யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்காக அமைக்கப்பட்ட வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையம், சிதம்பரபுரம் நலன்புரி நிலையம் மற்றும் வலிவடக்கு சபாபதி பிள்ளை நலன்புரி நிலையம் என்பவற்றில் வாழும் மக்கள் மழை நீராலும், வெள்ள நீராலும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். உக்கிய தார் சீற்றக்களால் ஆன கொட்டகைக்குள் வாழ்ந்த மக்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர். இம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்ற போதும் அவை முழுமை பெறாது மந்த கதியில் அதற்கான வேலைகள் இடம்பெறுவதால் இவர்கள் கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான உதவிகள் எவையும் இதுவரை வழங்கப்படவில்லை.

vel3மீள்குடியேறிய மக்களின் வாழ்வில் விளையாடிய மழை

யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்தவர்களில் யாழ்ப்பாணத்தில் முப்பத்தொராயிரத்து 845 குடும்பம், மன்னாரில் இருபத்தாறாயிரத்து 390 குடும்பம், வவுனியாவில் பதினாறாயிரத்து 862 குடும்பம், கிளிநொச்சியில் நாற்பத்தொராயிரத்து 862 குடும்பம், முல்லைத்தீவில் நாற்பத்தொராயிரத்து 322 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இவர்களில் 40 வீதமான மக்களுக்கு வீட்டுத் திட்டம் முழுமை பெற்றுள்ள போதும் அதிகளவிலான மக்கள் தற்காலிக வீடுகளிலேயே வசிக்கின்றனர். மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது அமைக்கப்பட்ட தற்காலிக வீடுகள் இன்று 7 வருடங்கள் முடிந்த நிலையில் மழைக்கு ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியாக பெய்த அடை மழை காரணமாக இம் மக்களின் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரினால் பலரது வீட்டில் இருந்த பொருட்கள் கூட பாதிப்டபடைந்துள்ளது. அவ் வீடுகளில் வசித்து வந்த மாணவர்களின் கல்வி நிலை கூட பாதிப்பையே எதிர்நோக்கியுள்ளது. மெல்ல மெல்ல மீண்டும் வரும் மக்களின் வாழ்வில் மீண்டும் மழை விளையாடியுள்ளது.

சீரற்ற வடிகாலமைப்பு

நகரப்பகுதிகளில் அமைக்கப்பட்ட வடிகாலமைப்பு முறை திட்டமிடப்பட்டு அமைக்கப்படாமையால் நகரப்பகுதிகளில்வெள்ள நீர்மட்டம் அதிகரித்தே காணப்பட்டது. இப் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் வினைதிறனற்ற செயற்பாடே இதற்கு காரணம். குறிப்பாக பரந்தன் சந்தி, கிளிநொச்சி நகரம், வவுனியா நகரப்பகுதி போன்றவற்றில் வெள்ள நீர் புகுந்தமைக்கு இதுவும் காரணமே. கடந்த காலத்தில் வடிகாலமைப்புக்கு என வவுனியா நரசபைக்கு மத்திய அரசினால் வழங்கப்பட்ட 900 கோடி நிதி திரும்பிச் சென்றிருந்தது. இது கூட அதிகாரிகளினதும் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளினதும் கவலையினமே.

அதிகாரிகளின் அசமந்தம்

கடந்த காலத்தில் மழை பெய்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு என அனர்த்த முகாமைத்துவ பிரிவால் வழங்கப்பட்டிருந்த சுமார் 2 இலட்சம், ஒரு இலட்சம் பெறுமதியான சிறிய வீடுகள் அப்பகுதி பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் வடக்கு, கனராயன்குளம் வடக்கு போன்ற பகுதிகளில் வசிக்கும் சில மக்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் வீட்டுத் திட்டத்திற்கான பணம் வழங்கப்பட்ட போதும் அதனை பொறுப்பேற்று கட்டிய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அவர்களுக்கான வீட்டினை கட்டிக் கொடுக்கவில்லை. மக்களது வங்கிக் கணக்குப் புத்தகத்திற்கு பணம் வந்த போதும் அதனை பெற்ற அப்பகுதி பிரதேச செயலக அரச உத்தியோகத்தர் அதனை கட்டி தருவதாக பணத்தை பெற்ற போதும் 2 வருடங்கள் கடந்த நிலையிலும் அவர்களுக்கு வீடும் இல்லை. பணமும் இல்லாத நிலையே உள்ளது. சிலரது வீடுகள் அரைகுறையாக அமைக்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் மிகுதி பணங்கள் அதிகாரிகளால் இன்னும் வழங்கப்படவில்லை. கொட்டித் தீர்த்த மழையினால் இம் மக்கள் கூட மீளவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே அவர்களுக்கு வீடு வழங்கியதாக அரச தகவல்கள் உள்ளதால் அவர்கள் மழைப் பாதிப்பு உதவியைக் கூட பெற முடியாத அவலநிலையில் தற்போது உள்ளனர்.

குளத்து நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு

வடமாகாணத்தில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பல குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நீர் தேங்க முடியாது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கிளிநொச்சிக்குளம் மண் நிரவப்பட்டு கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் வவுனியளா மாவட்டத்தில் 700 வரையான குளங்கள் உள்ள போதும் அவற்றில் நூறுக்கு மேற்பட்ட குளங்களின் நிலப்பகுதி குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, நீர்வழிந்தோடும் பகுதிகள், வடிகால்கள் கழிவுகளாலும், குப்பை கூழாங்களாலும் நிரம்பியுள்ளதுடன் நீர் வழிந்து செல்லும் பகுதிகள் கூட ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் பல பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. வவுனியா, பேயாடி கூழாங்குளம் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி, தாண்டிக்குளத்தில் இருந்து நொச்சி மோட்டை வரையிலான பகுதிகள் நீர் வழிந்தோடும் பகுதிகள். ஆனால் அவை இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் சில பகுதிகள் தற்போது மண் போட்டு நிரவப்பட்டும் வருகிறது. இதனால் நீர் வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதேநிலை தான் யாழ்ப்பாணம் நகரம், மன்னார் நகரம் என்பவற்றிலும் காணப்படுகின்றது.

மொத்தத்தில் கொட்டித் தீர்த்த மழையால் யுத்த அவலங்களை சுமந்து மெல்ல மெல்ல தலைநிமிர்ந்து வரும் மக்களின் பொருளாதாரம், வாழ்க்கை முறை என்பன முற்றாக பாதிப்படைந்துள்ளது.

N5