துருக்கி – சிரியா நிலநடுக்கம்: “இடிபாடுகளில் குரல் கேட்கிறது, காப்பாற்ற யாரும் இல்லை”
துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 4,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விரைவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தொடும் என மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் உடல்களை மீட்புக்குழுவினர் தொடர்ந்து கண்டெடுத்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. பேரிடர் ஏற்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் கட்டடங்களுக்குள் செல்வதற்கே அஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.
நிலநடுக்கத்தால் யாரேனும் உயிர் பிழைத்துள்ளனரா என இடிபாடுகளுக்கிடையே தங்களின் வெறும் கைகளால் தோண்டி மீட்புப்பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளுக்காக சிறப்பு குழுக்கள், மோப்ப நாய்கள், உபகரணங்களை வழங்கி உலக நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. நிலநடுக்கம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், ‘நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த பேரழிவை நாங்கள் கூடிய விரைவில் கடந்து செல்வோம் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
ஜண்டைரிஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன் குடும்பத்தினர் 12 பேர் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக, ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்தார். தன்னுடைய குடும்பத்தினர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பதாக, மற்றொரு நபர் தெரிவித்தார்.”அவர்களின் குரல் கேட்கிறது. அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனால், காப்பாற்ற யாரும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
வடக்கு சிரியாவின் இட்லிப்பில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றியவர் பிரிட்டனை சேர்ந்த ஷஜுல் இஸ்லாம். பிபிசி ரேடியோ 4-இன் ‘தி வேர்ல்ட் டுநைட்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்கள் மருத்துவமனை மிக மோசமான மரணங்களை இந்த நிலநடுக்கத்தால் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.
“எங்கள் மருத்துவமனை நிரம்பியுள்ளது. சுமார் 300-400 பேர் தற்போது எங்கள் மருத்துவமனையில் உள்ளனர். ஒரு படுக்கைக்கு இரண்டு முதல் மூன்று பேர் உள்ளனர்,” எனத் தெரிவித்தார்.மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள 40-45 பேரை, தான் ஐசியூவுக்கு அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார். “மற்றவர்களிடமிருந்து வென்டிலேட்டரை அகற்றி, உயிர் பிழைக்க அதிக வாய்ப்புள்ளவர்களுக்குப் பொருத்துகிறோம். மருத்துவமனையின் நுழைவு வாயிலில் இருந்துகொண்டு யாரைக் காப்பாற்ற முடியும் என்பது குறித்து முடிவு செய்கிறோம்,” எனத் தெரிவித்தார்.(15)





