தேசிய அரசாங்கம் அமைக்க ஐ.தே.க. – ஶ்ரீல.சு.க. இணக்கம்: அமைச்சர்களின் 45 ஆக அதிகரிக்கும்
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய இவ்விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட இணங்கியிருக்கின்றது.
தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக அமையவேண்டும் என்றும் அதில் 17 அமைச்சுக்கள் சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படவேண்டும் என்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சில நிபந்தனைகளின் பிரகாரம் புதிய அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கவும் சுதந்திரக் கட்சி மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மாற்றப்படும்போது தேர்தல் முறையும் மாற்றப்படவேண்டும் என்பதே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுபபினர்கள் கலந்துகொண்ட இரண்டு நாள் அமர்வு கட்டுநாயக்க ஹோட்டல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற்றுள்ளது. இந்த கருத்தரங்கிலேயே குறித்த விடயங்கள் ஆழமாக ஆராயப்பட்டதுடன் சில இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.
“இந்தக் கருத்தரங்கில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. 2016 ஆம் ஆண்டு வரை தேர்தலை நடத்தாமல் தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்தும் ஆராயப்பட்டது. ஆனால் எந்த விடயம் குறித்தும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை” என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாகங்ம் அமைக்குமாயின் பாராளுமன்றத் தேர்தல் இவ்வருடம் நடைபெறாது என்றும் 2016 ஆம் ஆண்டே தேர்தல் நடைபெறலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.




