தேசிய அரசுக்கு ஆதரவளித்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் நான்தான்: நிமல் சிறிபால டி சில்வா
தேசிய அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவளித்தாலும் நானே எதிர்க்கட்சித் தலைவர். நான் அந்தப் பதவியை விட்டு விலகமாட்டேன் என்று எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை பலப்படுத்தவே சுதந்திரக் கட்சியின் 26 பேர் அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளனர். நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே அரசுக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது
“தேசிய அரசாங்கம் பற்றி தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. இந்நிலையில் இது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவும் மத்திய குழுவும் தேசிய அரசாங்கம் அமைக்க இணங்கியது. அதாவது ஜனாதிபதி மைத்திரி்பால சிறிசேன இந்த நாட்டின் தலைவராகவும் எமது கட்சியின் தலைவராகவும் இருக்கின்றார்.
எனவே அவரின் கரங்களை பலப்படுத்தி 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம். எமது கட்சியின் 26 பேர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். இறைச்சுக்கும் முல்லுக்கும் நாங்கள் அரசாங்கத்தில் இணையவில்லை. மாறாக 100 நாள் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வரலாற்று விடயத்தை முன்னெடுக்கவே ஆதரவு வழங்குகின்றோம்.
ஆனால் சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்று ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தினாலும் பெரும்பானமை உறுப்பினர்கள் எதிரணியிலேயே உள்ளனர். எனவே நாங்கள் எதிர்க்கட்சியின் வகிபாகத்தை முன்னெடுப்போம். அரசாங்கத்தை விமர்சிக்கவேண்டுமாயின் விமர்சிப்போம். மேலும் எமது கட்சியின் தனித்துவத்தை இழக்கமாட்டோம். தேசிய அரசாங்கத்தை அமைத்தோம் என்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் நாங்கள் இணைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.




