தேசிய ஒற்றுமையின் தேவையை குறைத்து மதிப்பிட கூடாது : ஜனாதிபதி
நாட்டின் எதிர்காலம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் ஒவ்வொருவரின் அதிகாரம் மற்றுத் தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் மூலம் மறைக்கப்படக் கூடாதெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ‘விங்ஸ் 2016 – நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையின் தேவையை குறைத்து மதிப்பிடக்கூடாதெனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளை பெடரல் நல்லிணக்கமெனக் கூறும் சிலர் அதனை கேவலப்படுத்துவதாகவும் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாமென தான் அவர்களிடம் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தைப் பெறுவதற்கு நாடு எஞ்சியிருக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்துக்கான தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பண்பாடு மற்றும் கலைகள் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கான முக்கியமான காரணிகளாகுமெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அனைத்து மக்கட் பிரிவுகளுக்கிடையிலும் ஒற்றுமை, ஒத்துழைப்பு, நட்புறவு கட்டியெழுப்பப்படுவதற்கு அது உந்துசக்தியாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை கலைப் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் இலங்கை கெயார் நிறுவனம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் இந்த கலை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச.எம். பௌஸி ஆகியோர் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்களும் அறிஞர்களும் இந்நிறைவு நிகழ்வில் பங்குபற்றினார்கள். -(3)




