செய்திகள்

தேசிய நல்லிணக்கம் மீதான வடக்கு கிழக்கு மாகாண மக்களின் விதந்துரைகள், எதிர்பார்ப்புக்கள் குறித்த பிரகடனத்தை வெளியிடும் விசேட வைபவம் -முதலமைச்சர் கூற்று

தேசோதய சபைகள் கூடி தேசிய நல்லிணக்கத்திற்கான தேவைகளைத் தேடித் தரும் சந்தர்ப்பம் இது.
உங்கள் கருத்துரையாடல்களின்போது நீங்கள் சில அடிப்படை விடயங்களில் ஒற்றுமை கண்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. அவையாவன –

  • தேசிய நல்லிணக்க செயன்முறையொன்று அவசியம்.
  • இனவாத அடிப்படையில் அல்லாமல் சகல மக்களையும் ஒன்றிணைத்துச் செயற்படும் கலாச்சாரம் அவசியம்.
  • அரசியலமைப்பு ரீதியான திருத்தங்கள் அவசியம்.
  • கடந்தகால குற்றங்களுக்குப் பக்கச்சார்பற்ற நீதி விசாரணை அவசியம்.
  • பாதிக்கப்பட்டவர்களின் வாழ்கையில் மறுசீரமைப்பு அவசியம்.
  • மக்கள் பங்கேற்புடன் நில மட்ட அபிவிருத்தித் திட்டமானது விரயமின்றி நடைமுறைப்படுத்தப்படல் அவசியம்.
  • காணாமற் போனோர்களைத் துரிதமாகக் கண்டுபிடித்தல் அவசியம்.
  • சமூகச் சீரழிவைக் கட்டுப்படுத்த துரித வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தல் அவசியம்.
  • உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருப்போருக்கு உரிய சிகிச்சையும் நிவாரணங்களும் அளித்தல் அவசியம்.
  • அரச குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் சகல இன மக்களின் பிரதிநிதித்துவம் அவசியம்.
  • மரணித்த உறவுகளை நினைவு கூர சகலருக்கும் சமவாய்ப்பு அளித்தல் அவசியம்.
  • பாடசாலைப் பாடவிதானங்களில் நல்லிணக்கத்தை பலப்படுத்தக்கூடிய பாடங்களை உள்ளடக்குதல் அவசியம்.
  • ஆணைக்குழுக்கள் இதுகாறும் போலல்லாது மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் அவசியம்.
  • மக்கள் மட்டத்தில் நல்லிணக்கம் சம்பந்தமான கலந்துரையாடல்களை ஏற்படுத்துதல் அவசியம்.
  • இன, மத அடிப்படை அல்லாது இலங்கைப் பிரஜைகள் அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு தலைமைத்துவத்தை உருவாக்கல் அவசியம்.
  • புதிய அரசியல் கலாசாரமொன்றை ஏற்படுத்தல் அவசியம்.

மேற்கண்ட 16 விடயங்களும் எம்மால் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டியவையே. அவற்றை முன்மொழியப் போகின்ற பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
உங்கள் சிந்தனைகளுக்கும் எங்கள் சிந்தனைகளுக்கும் இடையில் பாரிய வேற்றுமைகள் இல்லை. எனினும் சில விடயங்களை நாங்கள் சற்று வித்தியாசமாகப் பார்க்கின்றோம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

இனரீதியான சித்தனைகளைத் தவிர்த்து தேசிய ரீதியில் சிந்திக்க வேண்டும் என்றும் அதற்கான கலாசாரம் உண்டாக்கப்பட வேண்டும் என்றும் நீங்கள் முடிவு எடுத்துள்ளீர்கள். உங்கள் முடிவு 1919ம் ஆண்டில் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் எடுத்த முடிவையொட்டி உள்ளது. அவரும் நாம் யாவரும் இலங்கையர் என்ற சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தார்.

அதனால்த்தான் அவர் பிரிந்திருந்த இனங்களை ஒன்று சேர்க்கும் எண்ணத்துடன் இலங்கை சீர்திருத்தக் கழகம் ;  Ceylon Reform League இலங்கை தேசிய சங்கம்Ceylon National Association யாழ்ப்பாண சங்கம் Jaffna Association  ஆகியவற்றை ஒன்று சேர்த்து இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress) என்ற சங்கத்தை அமைத்தார். அவர் மனித குலத்தின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மதித்தார்.

அந்தக் காலத்தில் ஆங்கிலம் சகல இன படித்த மக்களாலும் பேசப்பட்டு வந்ததால் ஆங்கில மொழி சகலரையும் அவர்கள் மட்டத்தில் ஒன்றிணைத்தது. இலங்கை மக்களின் அரசியல் ரீதியான கோரிக்கைகளில் எம் மக்கள் மத்தியில் ஒற்றுமையிருந்தால் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் எமக்குத் தன்னாட்சி தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று கூறியிருந்தார்கள். அதனால்த்தான் மிகவும் பிரயாசப்பட்டு ஒற்றுமையை உருவாக்கினார் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள். இன ரீதியாகச் செயற்பட்ட யாழ்ப்பாண சங்கத்தை இனரீதியான சட்டசபை பிரதிநிதித்துவத்துக்குப் பதிலாக பிரதேச ரீதியான சட்டசபைப் பிரதிநிதித்துவத்தை ஏற்கச் செய்தார். யாழ் சங்க உறுப்பினர்கள் இனரீதியான பிரதிநிதித்துவத்தையே ஊழஅஅரயெட சுநிசநளநவெயவழைn வேண்டி நின்றார்கள். அதற்குப் பதிலாகப் பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை அவர்கள் வுநசசவைழசயைட சுநிசநளநவெயவழைn ஏற்க வேண்டும் என்று அவர் வலிந்து கேட்டதற்கிணங்க அவர்கள் அதற்கு உடன்பட்டார்கள். ஆனால் யாழ் சங்கத்தவர்களுக்குப் புரிந்த ஒரு விடயம் சேர் பொன்னம்பலம் அருணாசலத்திற்குப் புரியவில்லை. இலங்கையின் ஐக்கியத்தை மட்டுமே அவர் பார்த்தாரே ஒளிய சில இனத்தவர்களின் உள்ளக் கிடக்கைகளை அவர் புரிந்து கொள்ளவில்லை.

கொழும்பில் அப்போது பெருமளவு தமிழர்கள் வாழ்ந்தார்கள். கொழும்பில் தமிழ்ப் பேசும் மக்களுக்கென்று ஒரு ஆசனம் வழங்குவதாக எழுத்து மூலம் உத்தரவாதம் கொடுத்த சிங்களத் தலைவர்கள் சேர் ஜேம்ஸ் பீரிஸ், திரு. நு.து.சமரவிக்கிரம ஆகியோர் ஆங்கிலேயர் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்ட உடனேயே தமது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டனர். இதை சேர் அருணாசலம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்பொழுதிருந்தே தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விட்டார்கள். மனவருத்தத்தில் ஒரு சில வருடங்களில் சேர் அருணாசலம் மதுரை சென்ற போது அங்கு உயிர் நீத்தார்.

மேற்கண்ட இன ரீதியான பிரதிநிதித்துவம் Communal Representation பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம் Territorial Representation என்ற பதங்களின் வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனரீதியாகச் சிந்திப்பது தவறு என்றே எமக்குக் கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால் அவ்வாறான சிந்தனை இல்லை என்றால் ஒரு சிறிய இனம் பெரிய இனத்தினுள் சங்கமமாகிவிடும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கௌரவ சபாபதி அவர்களால் வழி நடத்தப்பட்ட யாழ் சங்கமானது அரசாங்கம் சகல இனங்களையும் சமமாகப் பாவித்து அந்த இனங்கள் சார்பாகப் பிரதிநிதிகளை நியமித்துச் சகல இனங்களையும் பாகுபாடு இல்லாமல் நடத்த வேண்டும் என்று எதிர்பார்த்தது. பெரும்பான்மையினத் தலைவர்கள் நாட்டைப் பிரதேசங்களாகப் பிரித்து அந்தந்தப் பிரதேச மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதனை யாழ் மக்கள் ஏற்க வேண்டும் என்று சேர் அருணாசலம் வலிந்து கேட்டதால் அவர்கள் இன ரீதியான தமது கோரிக்கைகளைக் கைவிட்டனர்.
ஆனால் பிரதேச பிரதிநிதித்துவமானது பெரும்பான்மையினத்தவர்கள் நாட்டின் முழு அரசாங்க இயந்திரத்தையுந் தம் கைவசம் எடுத்தக் கொள்ள உதவியது. அதாவது பிரதேச மட்டத்தில் பெரும்பான்மையினர்தான் அரசாங்கத்தை உருவாக்கி அரசாண்டார்கள். இன்றும் அதே நிலைதான். பாராளுமன்றத்தில் ஒரு சிலரே எம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்கள். அவர்கள் சிறுபான்மையினர். பெரும்பான்மையினரின் தயவிலேயே அவர்கள் வாழவேண்டி வந்துள்ளது. எமது சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

ஆகவே நீங்கள் உங்கள் கோரிக்கையில் இனவாத அடிப்படையைத் தவிர்ப்போம் என்று கூறும் போது அது பெரும்பான்மை மக்களுக்கு எமது உரித்துக்களைத் தாரை வார்த்துக் கொடுப்பது போல் ஆகிவிடுகின்றது. சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்து அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்கிய பின்னரே தேசிய ரீதியில் நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும். இல்லை என்றால் நாங்கள் பெரும்பான்மைச் சமூகங்களின் ஒரு அங்கமாக மாறி விடுவோம். உதாரணத்திற்கு ஒரு கூட்டத்திற்கு செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பான்மையான மக்கள் அங்கு ஆங்கிலத்திலேயே பேசுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். தமிழர்களாகிய நாங்களும் ஆங்கிலத்திலேயே பேசுவோம். அதே போல் சிங்கள மக்களிடையே சிங்களத்தில்த்தான் பேசுவோம். காலக்கிரமத்தில் தமிழ் மறந்து போய்விடும்.

மேலும் ஒரு உதாரணத்தைக் கூறுகின்றேன். டொன் ஜுவான் தர்மபால என்ற அரசனுக்கு முடிசூட்ட மதுரையில் இருந்து 400 வருடங்களுக்கு மன்னர் வந்த தமிழர்கள் பலர் இங்கு குடியேறியதால் இன்று அம்பலாங்கொட-:பலபிற்றிய போன்ற இடங்களில் அவர்கள் சிங்களவர்களாக மாறி நிற்கின்றார்கள். மலைநாட்டில் இருந்து அண்மையில் வத்தளை, நீர்கொழும்பு போன்ற இடங்களில் குடியேறியவர்கள் சிங்களவர்களாகவே தம்மைப் பெயர் மாற்றியுள்ளார்கள். தென்னாபிரிக்காவில் அரசியல் பிணக்கைத் தீர்த்த பிறகே நல்லிணக்க நடவடிக்கைகளில் இறங்கினார்கள். அரசியல் ரீதியான அடையாளமும் உரிமைகளும் உத்தரவாதப்பட்ட பின்னரே நாங்கள் தேசிய ரீதியில் செயலாற்ற வேண்டும்.
அதனால்த்தான் நாங்கள் எங்கள் அரசியல் முன்மொழிவுகளில் சமஷ்டி முறையை வலியுறுத்துகின்றோம். வடக்குக் கிழக்கு தமிழ்ப் பேசும் பிராந்தியங்களாக சட்டப்படி ஏற்கப்பட்டு விட்டால் அங்கு தமிழ் வாழும்; தமிழர்கள் வாழ்வார்கள்; தமிழ்க் கலாசாரம் வளரும். இல்லை என்றால் பெரும்பான்மை மொழி, கலை, கலாசாரத்தினுள் நாம் அமிழ்ந்து விடுவோம் என்று அஞ்சுகின்றோம். அவ்வாறு அமிழ்ந்து விடவைப்பது இனப்படுகொலைக்கு ஒப்பாகும் என்று சட்டம் சொல்லுகின்றது.

எமது இனத் தனித்துவத்தை வலியுறுத்திக் கொண்டே தேசிய ரீதியாக நாங்கள் நடந்து கொள்ள முன்வர வேண்டும். சிறுபான்மையினர் தமக்கு உரித்துக்கள் கிடைக்க முன்னர் தேசிய ரீதியாக நடக்க முற்பட்டால் அவர்கள் பெரும்பான்மையினத்துடன் இரண்டறக் கலந்து விடுவார்கள். அதனால் என்ன என்று சிலர் கேட்கலாம். கிறீஸ்துவுக்கு முன்னர் இருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் வளர்ந்து வந்த செம்மொழி, அதன் கலை, கலாசாரத்தை நாம் கொச்சைப்படுத்த வேண்டுமா? அவற்றை மறந்து விட வேண்டுமா? என்பதை மக்களாகிய நீங்களே தீர்மானிக்க வேண்டும்.

இந்தக் கருத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்து உங்கள் முயற்சிகளைப் பாராட்டி நண்பர் கலாநிதி ஆரியரத்ன அவர்கள் பல வருடகாலம் வாழ்ந்து எம்மையெல்லாம் வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்தி எனக்கு இந்த நீண்ட செய்தியை உங்கள் முன் சமர்ப்பிக்க உதவிய சகலருக்கும் நன்றி தெரிவித்து என் செய்தியை முடிவுறுத்திக் கொள்கின்றேன்.

N5