தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அடுத்த வாரத்தில் முடிவு: ரணில்
தேர்தல் முறைமை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுத்துள்ளோம். அடுத்த வாரமளவில் கூடவுள்ள கட்சி தலைமைக்குழு கூட்டத்தில் இது குறித்து இணக்கம் காண்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதேவேளை தற்போதைய பாராளுமன்றத்தில் ஊழல் மோசடிக்காரர்களே உள்ளனர். இதனை நாம் ஏற்கிறோம். இதனை மாற்றி அமைத்து நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பெப்ரல் அமைப்பின் மார்ச் 12 பிரகடனம் வெளியீட்டு நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:
“மக்கள் பிரதிநிதித்துவத்தின் தரம் குறித்து ஆராய்வதற்கு முன்பு பாராளுமன்றம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் தரமும் அந்தஸ்தும் கட்டியெழுப்பப்பட வேண்டும். தற்போது பாராளுமன்றத்திற்கு உரிய அந்தஸ்து இல்லை. அதனை இல்லாமல் செய்துள்ளனர். அத்தோடு முன்னைய காலங்களை போன்று பாராளுமன்றில் முக்கிய அம்சங்கள் கலந்துரையாடப்படுவதில்லை. மூன்று நாட்களுக்கு மேல் செய்ய வேண்டிய விவாதங்கள் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்படுகின்றன.
ஜனாதிபதி பாராளுமன்றிற்கு பொறுப்பு கூடியவராக இல்லை. இது மிகவும் ஆபத்தானது. பாராளுமன்ற செயற்பாடுகள் அனைத்தும் ஜனாதிபதிக்கு கீழ் இடம்பெறுகின்றன. எனவே நாட்டின் அனைத்து துறை சார்ந்த அதிகாரங்களும் பாராளுமன்றத்திடமே காணப்படல் வேண்டும். மேலும் அனைத்து துறை சார்ந்த தீர்மானங்களையும் பாராளுமன்றம் எடுக்க வேண்டும். மேலும் பாராளுமன்றம் மக்களுக்கு பொறுப்பு கூடிய நிலைமையை தோற்றுவிக்க வேண்டும்.
எனினும் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோரின் தரம் குறைந்துள்ளது. ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டோர்களாகவும் பொய்யர்களாகவும் உள்ளனர். தற்போது பாராளுமன்றில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனை நாம் ஏற்று கொள்கிறோம்.
இதற்கமைய இதனை மாற்றி அமைக்க வேண்டும். ஜனாதிபதி முறையை நீக்கி பாராளுமன்ற அதிகாரத்தை பலப்படுத்த வேண்டும். மேற்படி நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும். இந்த நல்லாட்சி பயணத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுச் செயலாளராகவிருந்த மைத்திரிபால சிறிசேனவை தலைமைபீடத்தில் அமர வைத்தோம். இந்நிலையில் தற்போது 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சுதந்திர கட்சி ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.
ஜனாதிபதி முறைமை உள்ளிட்ட அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளோம். எனினும் தேர்தல் முறைமை குறித்து இந்த வாரம் கட்சி தலைவர் குழு கூட்டத்தில் விசேட முக்கிய தீர்மானம் எட்டப்பட்டன. எனினும் இது தொடர்பில் அடுத்த வாரமளவில் இக்குழு கூட்டத்தில் இணக்கம் ஏற்படுத்த உள்ளோம். எனவே நல்லாட்சி பயணத்தின் மீது தனக்கு எந்த அச்சமோ, சந்தேகமோ இல்லை என்றார்.




