செய்திகள்

தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி, குழப்பமான சூழ்நிலையை உருவாக்க சிலர் எதிர்பார்க்கின்றனர்

ஐ.நா. வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் விஜயத்தை விட, தமது விஜயம் வெற்றிகரமாக அமைந்திருந்ததாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், இளவரசர், செய்த் ராத் அல் ஹுசைன்,தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி, குழப்பமான சூழ்நிலையை உருவாக்க சிலர் எதிர்பார்க்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று பிற்பகல் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இமேலும் தெரிவிக்கையில்;

ஒரு சிலர் தம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களைத் தம்மால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்ததுடன்,  எதிர்ப்புகளுடன் கூடிய சுலோகங்களைக் காணவும் நேர்ந்தது.

எவ்வாறாயினும், சிவில் சமூகத்தின் அனைத்து குரல்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளதுடன் ஒருசில இடங்களில் ஒவ்வாத குரல்கள் எழுப்பட்ட போதும், அவை செவிமடுக்கப்பட்டது.

கடந்த வருடம் முதல் இலங்கை மேற்கொண்டுள்ள நீண்ட பயணத்தின் ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு விடயத்தையும் அறிக்கையிட முடியும். கொழும்பு அதேபோன்று தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கில் அச்சுறுத்தல்கள் அடியோடு இல்லாமற்போயுள்ளன. அனைவராலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய முன்னேற்றம் இருக்கின்றது. எனினும், அதனை மேலும் விஸ்தரிக்க வேண்டும். இனங்களுக்கு இடையில் சகவாழ்வு தென்படுகிறது.

இதற்கு சான்றாக 50 ஆவது தசாப்தத்தின் பின்னர், முதற் தடவையாக சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழில் இசைக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம். இதற்கு மறுநாள், வட மாகாண முதலமைச்சர் யாழ். விகாரையொன்றுக்கு சென்று வழிபட்டமை சிறந்த எடுத்துக்காட்டாகும். தம்மைக் கொலை செய்ய முனைந்த விடுதலைப் புலி உறுப்பினருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமையும், சாதகமான நடவடிக்கையாகும்.

இவை அனைத்தையும் வருடக்கணக்கில் நிலவிய சந்தேகங்களை நீக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சாதகமான நடவடிக்கைகளாக குறிப்பிட முடியும். பாதிக்கப்பட்ட பெண்கள், அங்கவீனமடைந்தவர்கள், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தோட்டப்புற தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் போன்ற விடயங்களுக்கு தீர்வு வழங்குவதில் இலங்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. அரசியல் மறுசீரமைப்புடன் இந்த விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் ஆரம்பம் மிகவும் சிரமமாகவே இருக்கும். அதன்போது தவறொன்று இடம்பெற்றால் அது பின்னர் நீண்டகால பிரச்சினையாக உருவெடுக்கும். இலங்கையில் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசியலமைப்புத் திருத்தம் மிகவும் முக்கியமானது. பிரதமர் அண்மையில் கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார்.

காணாமற்போனவர்களை உயிரிழந்தவர்களாகக் கருதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி ஏற்படுகிறது என அவர் கூறியதால் காணாமற்போனவர்களின் உறவினர்களின் இறுதி எதிர்பார்ப்பு வீணடிக்கப்பட்டது. இது குறித்து அதிகக்கவனம் செலுத்த வேண்டும். யாராவது உயிரிழந்திருந்தால் அவர் எவ்வாறு உயிரிழந்தார், எந்த இடத்தில் சம்பவம் இடம்பெற்றது போன்ற விடயங்களை வெளிப்படுத்த வேண்டும்.ஜெனீவா அறிக்கை தொடர்பில் பல்வேறு தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இது உங்களது நாட்டின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல் அல்ல. இது சர்வதேச சக்திகளின் ஆக்கிரமிப்பு அல்ல. ஐக்கிய நாடுகளின் பிரேரணையை ஏற்றுக்கொள்கின்றமை இலங்கை அரசாங்கத்தின் பலவீனத்தைவிட பலத்தை உறுதிப்படுத்திய சந்தர்ப்பமாகும். இலங்கைக்கு இறைமை, முன்னேற்றம் மற்றும் பலம் என்பன தேவைப்படுகின்றன.

அதேபோன்று, பக்கச்சார்பற்ற, நம்பிக்கையான சட்டக்கட்டமைப்பு அவசியமாகிறது. இலங்கையில் சிரேஷ்ட நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். எனினும், கடந்த காலங்களில் அது அரசியல்மயப்படுத்தப்பட்டு, நம்பிக்கை இழந்து காணப்பட்டது. அதன் காரணமாக யுத்தத்தினால் இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் இந்த பொறிமுறைக்கு சர்வதேச உதவிகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை பிரேரணை முன்வைத்தது. எவ்வாறாயினும், கடந்த ஒரு வருட காலத்தில் இலங்கையர்கள் நல்லிணக்கம், சட்டம் மற்றும் நியாயத்திற்காக வாக்களித்துள்ளனர்.

தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி, குழப்பமான சூழ்நிலையை உருவாக்க சிலர் எதிர்பார்க்கின்றனர். எனினும், எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தும் மிக முக்கியமான விடயங்கள் தொடர்பில் முழுமையாக கருத்தாடலை ஏற்படுத்துவதே தற்போது இலங்கையில் இடம்பெற வேண்டும்.

n10