செய்திகள்

தைப்பூசமும் தில்லை திருநடனமும்

மருத்துவர். சி. யமுனாநந்தா

சிதம்பரத்திற்கு தில்லைவனம், புலியூர், பொன்னம்பலம், சிற்றம்பலம், விதாகாசம் என்ற பெயர்கள் உண்டு. தில்லை மரம் தல விருட்சம் என்பதனால் தில்லைவனம் எனப் பெயர் பெற்றது. அறிவு வெளி எனும் கருத்தில் சித் –அம்பலம் சிதம்பரம் எனப் பெயர் பெற்றது. ஞான ஆகாயம் என்ற கருத்தில் சிதகாசம் எனப் பெயர் பெற்றது.

மத்யந்தனர் என் முனிவரே தில்லை வனத்தில் ஆலமர நிழலில் சிவலிங்கத்தைக் கண்டு அதனை வழிபாட்டிடமாக்கினார். அதிகாலையில் வண்டுகள் தேன் குடிக்க முன் பூக்களை பறிப்பதற்காக மரங்களில் ஏறும்போது பனியால் கால்கள் வழுக்கி விழாதவாறு இறைவனை வேண்டி கைகளிலும் கால்களிலும் புலிகளின் நகங்களைப் பெற்றார். இருட்டிலும் பார்வைத்திறனைப் பெற்றார். வியாக்கிரம் என்றால் புலி. புலி போன்ற உறுதியான பாதங்களைப் பெற்றமையால் மத்யந்தனர், வியாக்கிரபாதர் என்று அழைக்கப்படலானார்.

வியாக்கிரபாதரின் வழிபாட்டினாலும் தில்லைவனத்தில் நடராஜப் பெருமானின் ஆனந்த நடனம் கைகூட ஆதிசேடனும் திருமாலிடம் இருந்து விடைபெற்று (தனது மகன் அனந்தனை திருமாலிற்கு ஆணையாக்கிய பின்) நாகலோகம் சென்று அங்கிருந்து ஒரு பிலத் துவாரத்தின் வழியே தில்லையம்பதியை அடைந்தார்கள். ஆதிசேடன் தனது பாம்புருவை விட்டு சிவபெருமான் கூடியிருந்தபடி மனித உருவத்தோடு ஐந்து பாம்புத் தலைகளுடன் பதஞ்சலியாக பெயர் பெற்றான். பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் இறைவனை வணங்க திருநடனக்காட்சி அளிக்கும் நாள் கைகூடியது அந்நாளே தைமாதம் குரு வாரத்தில் பூச நட்சத்திரமும் பூரணையும் கூடிய நன்னாள். அன்று தில்லையில் ஆனந்த திருநடனக் காட்சி தருவதற்கு சிவகாமி சமேதரராய் நடராஜர் காட்சி தந்தார். தேவலோகமே அவர் பின்னால் திரண்டிருந்தது. எல்லோரும் ஓம் சிவ சிவ என சிரம் மீது கரம் கூப்பி ஆராதித்தனர்.

இறைவன் ஐந்தொழில் இன்பக்கூத்தினை ஆடியருளினான்.

தன் வலக்கையால் தமருகத்தை ஒலித்தபடி மற்றொரு கையால் அபயம் அளித்தபடி, இடக்கையில் தீச்சட்டி ஏந்தி, இன்னொரு கையினால் அழகிய திருப்பாதத்தைக் சுட்டிக் கொண்டு வலக்காலை முயலகன் முதுகில் ஊன்றி, இடக்காலை உயர்த்திக் கொண்டு, திருச்சடைகள் பக்கங்கள் தோறும் விரிந்தாட தேவதுந்துவிகள் ஒலிக்க ஆனந்த நடனம் ஆடினான்.

குனித்த புருவமும் கொவ்வைச்
செவ்வாயிற் குமின் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல்
மேனியிற்பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்
பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதோ
இந்த மாநிலத்தே.

என்கின்றார் அப்பர் சுவாமிகள்.