செய்திகள்

தையிட்டி விகாரையை உடைக்க சதி: சிங்கள மக்களை தூண்டும் அர்ச்சுனா எம்.பி!

ஜனவரி 3ஆம் திகதி தையிட்டி திஸ்ஸ விகாரைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுப்பி அதனை உடைப்தற்கு திட்டமிடப்படுவதாகவும் இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி கூறியுள்ளார்.

சிங்கள மக்களுக்கு கூறுவதற்கென சிங்கள ஊடகங்களுக்காக நேற்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

யாழ்ப்பாணத்தில் இந்த நாட்களில் சில சம்பவங்கள் நடக்கின்றன. இது தொடர்பில் சிங்கள மக்களுக்கும் கூற வேண்டியுள்ளதால் சிங்களத்தில் இங்கே இதனை கூறுகின்றேன். குறிப்பாக திஸ்ஸ விகாரை தொடர்பிலான வரலாறுகள் எனக்கு தெரியாது. ஆனால் 2017ஆம் ஆண்டில் ரணிலினின் ஆட்சி காலத்தில் அந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. நான் இந்து என்ற ரீதியிலும் தமிழர் என்ற ரீதியிலும் இதனை வழிபாட்டு இடமாகவே நான் பார்க்கின்றேன். எனினும் உண்மையில் இது விகாரைக்கான இடத்தில் அமைக்கப்படவில்லை. விகாரைக்கென ஒதுக்கப்பட்ட காணி வேறு இடத்தில் இருக்கின்றது. ஆனால் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி மக்களுடையது ஆகும். இதில் 12 ஏக்கர், 20 ஏக்கர் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் இன்னும் நிலம் அளக்கப்படவில்லை. எவ்வாறாயினும் விகாரையின் நிர்மாணப்பணிகள் 2017ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2021ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்ப்டுள்ளது.

இந்த விகாரைக்கென பிக்குவொருவர் இருக்கின்றார். நான் அவரை சந்தித்துள்ளேன். ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் நிலையில் அவர் என்னுடன் கலந்துரையாடினார். இந்த விடயத்தை தீர்த்துக்கொள்வதற்கே நாங்கள் முயற்சித்தோம். இது முடியாமல் போனமையினால் நான் அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்தேன். இதன்போது இரண்டு வாரங்களில் இதற்கு தீர்வு காண்பதாக கூறினர்.

இதில் சில பிரச்சினைகள் உள்ளன. இந்த விகாரையுடன் தொடர்புடைய காணிகளின் 18 குடும்பங்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நான் அவர்களிடம் காணி உரித்துகள் இருந்தால் வழக்கு போடுவதற்காக எடுத்து வருமாறு கோரினேன். பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகவே தமிழ் அரசியல்வாதிகளின் கருத்தாக இருக்கின்றன.

1983ஆம் ஆண்டில் இருந்து தமிழர் சிங்களவர் என்று நான் பிரிய ஆரம்பித்தோம். அப்போது ஆரம்பித்தலில் இருந்து 2009இல் யுத்தம் முடிவுக்கு வந்தது. நான் 1986இல் பிறந்தேன். அப்போதிருந்து 2007இல் நான் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு போகும் வரையில் எனக்கு சிங்களம் தெரியாது. அதனால் சிங்களவர்கள் முழுமையாக தவறானவர்கள் என்றே நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் காலம் போக எனக்கு சிங்களம் பேச முடியுமாக இருந்தது. பல சிங்களவர்களுடன் பழக முடியுமாக இருந்தது. ஆனால் இரண்டு கட்சிகள் உள்ளன. இவர்கள் எமது மக்களை தூண்டுகின்றனர். எனக்கு தமிழ் மக்களின் ஆதரவு இருக்கின்றது. எனக்கு டயஸ்போராக்கள் பணம் கொடுக்கின்றது. வேண்டியளவுக்கு பணம் உள்ளது. தேர்தலுக்காக பணம் வழங்கினர். இப்போதுள்ள தமிழர்கள் எவரும் மீண்டும் துப்பாக்கியை ஏந்த விரும்பவில்லை. எனது சட்டத்தரணியொருவர் என்னிடம் மீண்டும் தமிழீழத்தை அமைக்கவா முயற்சிக்கின்றீர்கள் என்று கேட்டார் அந்த கோணத்தில் என்னை பார்த்தால் எனது வழக்குகளை பேச வேண்டாம் என்று நான் அவரிடம் கூறினேன். எனது வழக்குகளை தெற்கில் சிங்கள சட்டத்தரணிகளே பார்க்கின்றனர். எனது மனதில் அவை கிடையாது. ஆனால் தமிழ் மக்களை தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர். ஒவ்வொரு குடும்பங்களில் தாய், தந்தை, பிள்ளைளகள் உயிரிழந்திருக்கலாம். ஆனால் கஜேந்திரகுமார் என்பவரின் கட்சியும் மற்றும் சுமந்திரன் போன்றோரின் இலங்கை தமிழரசுக் கட்சி என்பன கிராமங்களுக்கு சென்று பிரிவினை தொடர்பில் பேசும் போது கிராமங்களில் உள்ள மக்கள் தமக்கு வீதிகள் அமைக்கப்படவில்லை, வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையென தமக்கு தமிழீழம் வேண்டும் என்ற நிலைப்பாட்டை இப்போதும் உருவாக்குகின்றனர். அதனை மாற்ற முடியாது. நான் இதற்கு எதிராக கதைத்து தையிட்டி விகாரை தொடர்பிலும் கதைக்கின்றேன்.

இந்த விகாரை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் விரும்பவில்லை. எங்களை புலிகள் என்று பேசிக்கொண்டிருக்க வேண்டும். இல்லாமல் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. இந்நிலையில் 3ஆம் திகதி திஸ்ஸ விகாரையை உடைப்பதற்காக அழைத்துவரப் போவதாக கூறப்படுகின்றது. அரசியல் பின்னணி இன்றி இதனை செய்ய முடியாது. இவ்வாறு என்னால் கூறிவிட்டு வீதியில் செல்ல முடியுமா? திஸ்ஸ விகாரையை உடைப்பதாக பேஸ்புக்கில் பதிவிட கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் கூறும் போது அவர்களை கைது செய்வதில்லை. நான் இதனை நிறுத்துவதற்கே பார்க்கின்றேன். நான் அரசியல்வாதியென்ற வகையில் காயத்திற்கு சிகிச்சையே வழங்க வேண்டும். இத்தனை காலமாக காயத்திற்கு மருந்து கொடுத்தே பழகியுள்ளேன். அந்த காயத்தை சொறிந்து பழக்கமில்லை. இந்த பிரச்சினையை தீர்ப்பதாகவே மகாநாயக்க தேரர்கள் கூறினர். இவர்களை சந்தித்துவிட்டு நான் வருகின்ற போது அங்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்துமாறு அநுரகுமார அரசாங்கமோ அல்லது முன்னாள் அரசாங்கத்தில் எவராவது தூண்டுகின்றனர்.