செய்திகள்
தோட்டத் தொழிலாளருக்கு காணி உரிமைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பாக ஆலோசனை ; நவீன் திசாநாயக்க
பெருந்தோட்டத்துறையில் காணப்படும் நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்கான முயற்சியாக தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணி உரிமைகளைப் பகிர்ந்தளிக்கும் உத்தேச திட்டமொன்று தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற தோட்டப்பகுதி மக்களின் வாழ்க்கை நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைமீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் நவீன் திசாநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
“தற்போதிருக்கும் முறைமை நடைமுறைச் சிக்கல் கொண்டது என்பது தொழிற்சங்கத்தினருக்கும் தெரியும். இந்த நெருக்கடிகளை போக்குவது என்றால் தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணி உரிமைகளை வழங்கவேண்டும். இவ்வாறானதொரு முறைமைக்கு தொழிற்சங்கத்தினரும் அதேபோல் கம்பனிகளும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
அதாவது குத்தகையில், தொழிலாளர்களுக்கு உப குத்தகையொன்றை வழங்கும் உத்தேச திட்டமே இது. உதாரணமாக தோட்டமொன்றில் 300 ஹெக்டேயர் காணி இருந்தால் அதில் 150 ஹெக்டேயர் காணி தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். குடும்பங்களுக்கே இந்த காணிகள் பகிரப்படும்.
இவ்வாறானதொரு முறைமைக்கு சகல தரப்பினரிடம் இருந்தும் பொதுவான இணக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த முறைமையின் பிரகாரம் பறிக்கப்படும் கொழுந்துகள் கம்பனிக்கு வழங்கப்பட வேண்டும். இந்த உத்தேச முறைமை பற்றிப் பேசி முடிவுக்கு வரவேண்டும்.
தற்போதிருக்கும் முறைமை மாறி புதிய முறைமை நடைமுறைக்கு வந்தால் தோட்டப்பகுதி மக்களுக்கு கல்வி, சுகாதாரம், வீடமைப்பு என சகல வசதிகளும் கிடைக்கக்கூடியதாக இருக்கும்’ என்று கூறினார்.
n10




