தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்தவிதமான இணக்கப்பாடுமின்றி எட்டாவது தடவையாகவும் தோல்வியில் முடிந்துள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. இதன்போது முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்ட 500 ரூபா என்ற அடிப்படை சம்பளத் தொகையையும் ஏனைய நிபந்தனைகளையும் முற்றாக மறுத்துரைத்த சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் அடிப்படை சம்பளமாக 620 ரூபாவும் ஏனைய கொடுப்பனவுகளுடனான 1000 ரூபாவையும் தாண்டிய சம்பளத் தொகையையும் வலியுறுத்தியுள்ளன.
இதனால் இரு தரப்புக்குமிடையிலான இந்த பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றியே தோல்வியில் முடிந்துள்ளது. இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், தலைவர் முத்துசிவலிங்கம் , உப தலைவர்களான எம் ரமேஸ்வரன், ஏ.பி. சக்திவேல், சட்டத்தரணி கே. மாரிமுத்து ஆகியோரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், சங்கத்தின் நிர்வாக செயலாளர் வேலாயுதம் ருத்திரதீபன் ஆகியோரும் பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின்சார்பில் அதன் தலைவர் எஸ். இராமநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த கூட்டு ஒப்பந்தம் 17 மாதங்கள் கடந்தும் மீண்டும் புதுப்பிக்கப்படாதுள்ளது. ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளும் முகமாக இடம்பெற்றுவந்த ஏழு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் தோல்வியடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை எட்டாவது தடவையாக பேச்சுவார்த்தை இடம்பெற்று தோல்வியில் முடிந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




