தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டம் போதுமானதாக இல்லை : இராஜங்க அமைச்சர்
தோட்டத் தொழிலாளர்களுக்காக 3 இலட்சம் வீடுகள் தேவைப்படுகிறது. புதிய மலையக கிராம அமைச்சினூடாக 25 ஆயிரம் வீடுகளும் இந்திய உதவியினூடாக 4 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட உள்ளபோதும் இது போதுமானதல்ல என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராம, உட்கட்டமைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:- 80 வீதமான பெருந்தோட்டக் கம்பனிகள் அரசாங்கத்துக்கு சொந்தமானவை. அவை தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
200 வருடங்களாக பெருந்தோட்டங்களில் வாழும் எமது மக்களுக்கு காணி உரிமை வழங்க வேண்டும். எமது மக்களுக்கு 3 இலட்சம் வீடுகள் தேவைப்படுகிறது. இங்குள்ள அநேக வீடுகள் மண் சரிவு பகுதிகளிலேயே உள்ளன. மேலும் வீடுகள் கட்டப்படுகின்றன. 4 ஆயிரம் வீடுகளை இந்திய அரசு வழங்க உள்ளது. மேலும் வீடுகளை இந்தியா வழங்க முன்வர வேண்டும்.
தற்காலிக வீடுகளில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். லயன்களுக்கு தேவையான கூரைத் தகடுகள் வழங்கப்படவில்லை. வீட்டு உரிமை, காணி உரிமை தொடர்பான பிரச்சினை என்று தீரும் என மக்கள் ஏங்கிக் கிடக்கின்றனர். மலையக வீடுகள் அமைக்க பெருந்தோட்ட அமைச்சு முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு காணி வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சுமார் 11 ஆயிரம் பெருந்தோட்ட ஆசிரியர்களில் பலருக்கு வீடுகள் கிடையாது. இவர்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும். மலையக பாலுற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். -(3)




