செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்சஸ் காணியுடன் அடுத்த வருடத்தில் 10,000 வீடுகள் : அமைச்சர் திகாம்பரம்

தோட்ட தொழிலாளர்களுக்கு 7 பேர்சஸ் காணி உறுதிப்பத்திரத்துடன் அமைக்கப்படவுள்ள 25 ஆயிரம் வீட்டுத்திட்ட முன்மொழிவின் முதற் கட்டமாக தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியில் 10 ஆயிரம் வீடுகளை 2017 ஆம் ஆண்டு நிர்மானிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள் மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் திகாம்பரம் இதனை தெரிவித்துள்ளார்.
நாம் மக்களோடு ஒன்றாக இருந்து அவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அவற்றுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவர்கள் வாக்கை எதிர்பார்த்து அரசியல் இலாப நோக்கிலேயே இவ்வாறு பேசி வருகின்றனர். ஆட்சியிலிருந்த எந்த அரசாங்கமும் தோட்ட மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணவில்லை. ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எல்லா நாளும் எமது மக்களை ஏமாற்ற முடியாது. மக்களுக்கு காணி உறுதி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தேசிய அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு 7 பேர்சஸ் காணியுடன் தனி வீடு திட்டத்தினை ஆரம்பித்து இன்று நடைமுறைபடுத்தி வருகின்றோம். இது தமிழ் முற்போக்கு கூட்டணியினாலேயே சாத்தியமானது.
தற்பொழுது நாம் முன்னெடுக்கும் காணியுரிமை உடனான தனி வீடு திட்டம் நிறைவு பெற்றுவிடவில்லை. மலையகத்தில் தோட்ட சேவையாளர்கள் உட்பட பெருந்தோட்ட தொழிலாளியாக தொழில் புரியாத மற்றைய தரப்பினர்களுக்கும் நிலத்திற்கான, வீட்டிற்கான தேவை நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் தற்பொழுது பெருந்தோட்ட தொழிலாளர் வர்க்கத்திற்கான தனிவீடு திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
பெருந்தோட்ட தொழிலாளர் சமூகம் வாழுகின்ற லயன் அறைகளில் இருந்து 7 பேர்சஸ் காணித் துண்டினை தெளிவான காணியுறுதியோடு வழங்குகின்ற முன்மொழிவு முக்கியமானதாகும். இந்த மக்களுக்கு காணி உரிமை வழங்க வேண்டும் என்பது கொள்கையாக அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாக இருந்தாலும் வரவு செலவு திட்ட முன்மொழிவாக இது முன்வைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
தோட்டத்துறைக்கு 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிலம் மற்றும் ஏனைய வசதிகள் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் எனும் உறுதிமொழியும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இதனை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு தேவையான பொறிமுறைகள் அறிவிக்கப்படுமென எதிர்ப்பார்க்கின்றேன்.
வரவு-செலவு திட்டத்திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக வரவு-செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள 25 ஆயிரம் வீடுகளை நிர்மானிக்கும் முன்மொழிவில் முதற் கட்டமாக ஒரு மில்லியன் ரூபா பெறுமதியில் 10 ஆயிரம் வீடுகளை 2017 ஆம் ஆண்டு நிர்மானிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மலையக வீடமைப்பு திட்டத்திற்கென ஆயிரம் கோடி ரூபா கிடைக்க இருப்பது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
தோட்டக் கம்பனிகளுக்கு உட்படும் காணிகளின் பரப்பளவினை 5000 ஏக்கர்களுக்கு மட்டுப்படுத்துவதற்கான சிபாரிசொன்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் எவ்வித வேலைவாய்ப்பும் இழக்கப்படமாட்டாது என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். -(3)