செய்திகள்

தோட்டப்பகுதிகளில் திட்டமிட்ட கருத்தடை

மலையக தமிழ் மக்கள் என்ற தேசிய இனக்குழுமத்தின்  சனத்தொகையைக் குறைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட கருத்தடைகள் தோட்டப்பகுதிகளில் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட  எம்.பி.யான எஸ்.சிறிதரன் நேற்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தோட்டப்பகுதி மக்களின் வாழ்க்கை நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சிறிதரன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
“தோட்டப்பகுதிகளில் கட்டாய கருத்தடை  காணப்படுகிறது. இது மலையக மக்கள் என்ற தேசிய இனக் குழுமத்தின் சனத்தொகையை குறைக்கும் திட்டமிடப்பட்ட செயற்பாடாகும்.
இந்த நவீன உலகில் வீடு, காணி இல்லாத நிலைமையில் மலையக மக்கள் வாழ்கின்றனர்.  இது இந்த நாட்டிலுள்ள இனமொன்றின் முக்கிய பிரச்சினையாகும்.
இதேநேரம் தமிழர் கல்வியையும் மலையக கல்வியையும்  முன்னெடுத்துச் செல்ல அப்பகுதியில் பல்கலைக்கழகமொன்று அமைக்கப்பட வேண்டும். மலையகத்தில்  தொழில்நுட்ப பீடமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.  அப்போது தான் மலையக மக்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த அது உதவியாக இருக்கும்.
அத்துடன்  பாதை விஸ்தரிப்பு என்று கூறி அங்கு பெரும்பான்மையினத்தவர்கள் குடியேற்றப்படுகின்றனர். தோட்டங்களை காடாக்கி அதை சிங்கள மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கின்றனர்.
அது மட்டுல்லாது மலையக மக்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவதை நிறுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழர்கள் என்று அழைக்கப்படுவது போன்று அம்மக்கள் மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்பட வேண்டும்.  அதற்கு காணி வழங்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறினார்.
இதேநேரம் அமைச்சர் திகாம்பரம் தமிழில் பேசுவதை விடவும் சிங்களத்தில் சரளமாக பேசுவதாகவும் கூறிய சிறிதரன் எம்.பி. அதை மலையகத்தில் நிலவும் சிங்கள திணிப்புக்கான உதாரணமாகவும் சுட்டிக்காட்டினார்.
n10