செய்திகள்

தோட்டப்புற மக்களிடம் ரணில் மன்னிப்பு கேட்க வேண்டும் : அனுரகுமார சபையில் கோரிக்கை

யாழ் நூலகம் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்பு கோரியது போல் தோட்டப்புற மக்களின் இன்றைய நிலைக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், 180 வருடங்களுக்கு அதிமான காலமாக அந்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பேரனர்த்தங்களுக்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள் மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
1873 ஆம் ஆண்டிலிருந்து 180 இற்கும் மேற்பட்ட வருடங்களாக இந்த மக்கள் எமது நாட்டின் தேசிய வருமானத்தை உற்பத்தி செய்வதற்காக பாரிய சேவையாற்றியுள்ளனர். ஆடை கைத்தொழில்துறை முன்னேற்றமடைவதற்கு முன்னர் தேயிலை பெருந்தோட்டத்துறையானது எமது நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும் பங்கை வகித்திருக்கிறது. ஆகவே, எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு அவர்கள் ஆற்றியுள்ள சேவையானது கணக்கிட்டு அளவிட முடியாததொன்றாகும். ஆகவே, அந்த மக்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக கருதி அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கு நாம் செயற்பட்டுள்ளோமா? நாட்டின் ஏனைய பகுதி மக்கள் சொகுசான வாழ்க்கையை வாழாத போதிலும், அந்த மக்கள் அனுபவிக்கும் குறைந்தப்பட்ட வாழ்க்கை தரத்தையேனும் தோட்டப்பகுதி மக்களுக்கு நாம் வழங்கத் தவறியுள்ளோம்.
யாழ். நூலகம் தீ வைத்து எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியிருந்தார். எனினும், தோட்டப்புற மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமை குறித்தும் அந்தப்பகுதி மக்களிடம் நீங்கள் மன்னிப்பு கோர வேண்டும். 180 வருடங்கள் அந்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த பேரனர்த்தங்களுக்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும். என தெரிவித்துள்ளார். -(3)