செய்திகள்

நடேஸ்வரா, காங்கேசன்துறை கனிஷ்ட வித்தியாலயம் கால் நூல்றாண்டின் பின் மீண்டும் ஆரம்பம்

பாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்பட்ட யாழ் காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரி மற்றும் காங்கேசன்துறை கனிஷ்ட வித்தியாலம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் பூர்வீக இடங்களில் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுமார் 26 வருடங்களின் பின்னர் இந்த இரு பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று பூர்வீக இடத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராநா தலைமையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப விழாவில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர். யுத்தத்தின் பின்னர் பாதுகாப்பு பிரிவினர் நிலைகொண்டிருந்த குறித்த இரண்டு பாடசாலைகளும் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி விடுவிக்கப்பட்டதாக வட மாகா கல்வி அமைச்சின் செயலாளர் ராசா ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரி மற்றும் காங்கேசன்துறை கனிஷ்ட் வித்தியாலயம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 26 வருடங்களாக தௌ்ளிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகில் தனியார் காணியில் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

காங்கேசன்துறை, மாவிட்டபுரம், தெல்லிப்பழை, மயிலிட்டி, தையிட்டி, ஊரணி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த இரு பாடசாலைகளிலும் கல்வி பயில்கின்றனர். மேலும் யுத்ததால் இடம்பெயர்ந்து சபாபதிபிள்ளை முகாம் மற்றும் கன்னகிபுரம் முகாமில் தங்கியுள்ள மாணவர்களும் இந்த இரண்டு பாடசாலைகளிலும் கல்வி பயில்வதாகவும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
R-06