செய்திகள்

நல்லாட்சி அரசின் போலி முகத்திரையை கிழிக்கும் கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் மண் மீட்புப் போர்!

-கே.வசந்தன்-

யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் ஆகின்ற நிலையில் கூட தமிழ் மக்களின் பூர்வ நிலங்கள் பல இன்றும் விடுவிக்கப்படாத நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது. அந்த காணிகளுக்குரிய மக்கள் முகாம்களிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தற்போதும் குடியிருப்பதுடன் பல்வேறு பிரச்சனைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராடி வந்த மக்கள் இன்றும் தமது வாக்கின் மூலம் தெரிவு செய்த இந்த நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படும் இன்றைய நிலையிலும் தமது காணி விடுவிப்புக்காக போராட வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையிழந்த மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தாமாகவே வீதியில் இறங்கிப் போராட தொடங்கியுள்ளனர். அந்த போராட்டங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்திருக்கிறார்கள் முல்லைத்தீவு, கேப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு மக்கள்.

முல்லைத்தீவு, கோப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு பகுதியில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி விமானப்படையினர் வசமுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இக் காணிகளில் மக்கள் குடியிருந்ததுடன், அதனுடன் இணைந்த காணிகளில் விவசாயமும் செய்து வந்தனர். நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் வரை சென்ற மக்கள் இங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் மீள்குடியேறிய போது அவர்கள் வேறு காணிகளில் தற்காலிகமாக குடியேற்றப்பட்டிருந்தனர். அவர்களது இந்தக் காணிகள் விமானப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இராணுவத் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. கேப்பாபுலவு மக்கள் முகாமில் தங்கியிருந்த நிலையில் அவர்களுக்கான மாதிரி கிராமம் சூரிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு அங்கு அம் மக்களை குடியேற்றினர். இதன்போது புலவுக்குடியிருப்பு மக்களும் அங்கு தற்காலிகமாக குடியேற்றப்பட்டனர். ஆனால் பரம்பரபரம்பரையாக தொழில் செய்து தாம் வாழ்ந்து வந்த தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி இந்த மக்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த நிலையில் அதனை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இதன் தொடர்ச்சியாக விரக்தியும், அதிருப்தியும் அடைந்த மக்கள் குறித்த இராணுவ முகாம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வகின்றனர். கைக்குழந்தைகள் தொடாக்கம்முதியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக மழை, வெயில், பனி என பாராது தமது உரிமைக்காக போராடி வருகின்றனர். பள்ளிப் புத்தகங்களுடன் பாடசாலைக்கு செல்ல வேண்டிய சிறுவர்கள் கூட போராட்ட களத்தில் போராடி வருகின்றனர். நாளுக்கு நாளுக்கு ஏற்பட்டு வரும் நிலமைகள் போராட்ட களத்தில் உள்ள சிறுவர்களுக்கு மன ரீதியாகவும், உள ரீதியாகவும் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றது. அவர்களது நாளாந்த செயற்பாடுகள் அதனை வெளிப்படுத்துகின்றன.

இந்த நிலையில் அந்த மக்களின் உடைய போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டு 21 நாட்களை எட்டிய போதும் அவர்களுக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட்டதாக தெரியவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வந்த வெற்றி வாதத்தில் பங்கு போட்டுக் கொண்ட தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள இந்த தேசிய அரசாங்கம் தமது நாட்டில் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வரும் ஒரு தேசிய இனத்தின் வாழ்வாதாரம், உணர்வுகளுடன் இணைந்துள்ள வெறும் 42 ஏக்கர் காணியைக் கூட உடனடியாக விடுவிக்க தாயாராக இல்லாத நிலையிலேயே இருக்கிறது. பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை கையகப்படுத்தி அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள இராணுவம் 42 ஏக்கர் காணியை விடுவிடுவிப்பதற்கு காட்டும் தயக்கம் என்பதும் அது தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படாதது என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமே. மக்கள் குடியிருக்கும் சாதாரண ஒரு காணியைக் கூட விட தயங்கும் இந்த அரசாங்கம் நிரந்தரமான அரசியல் தீர்வு நோக்கி எப்படி நகரப் போகின்றது என்ற கேள்வி தவிர்க்க முடியாததே.

புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து குறித்த காணிகளில் முதல்கட்டமாக 25 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக அரசாங்க அதிபர் ஊடாக தெரிவித்துள்ள அரசாங்கம் போராட்டத்தை கைவிடுமாறும் கோரியிருக்கின்றது. மறுபுறம் இந்த அரசாங்கத்தின் இணைபேச்சாளரும் அமைச்சருமான ராஜித அவர்கள் இம் மக்களின் போராட்டங்கள் அர்த்தமற்றவை என ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். ஒரு புறம் 25 ஏக்கரை விடுவிப்பதாகவும், மறுபுறம் அந்த அரசாங்கத்தின் பேச்சாளர் இந்த போராட்டம் அர்த்தமற்றது எனக் கூறும் போது அரசின் வாக்குறுதியை எவ்வாறு நம்ப முடியும் என அம் மக்கள் கேள்வி எழுப்புவது நியாயமானதே.

கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம், காணி விடுவிப்பு கோரி நடந்த போராட்டம் என்பவற்றின் போது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது என்பதும், போராட்டம் நிறுத்தப்பட்ட பின்னர் அந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டமையும் கடந்த கால படிப்பினைகள். இதன் காரணமாகவே அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பாத மக்கள் காணி விடுவிக்கப்பட்டால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளனர். இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

சைட்டம் விவகாரம், அரிசி விலை, அம்பாந்தோட்டை காணி விவகாரம் என்பவற்றுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தில் ஒரு பகுதியைக் கூட இந்த அரசாங்கம் 21 நாளாக போராடும் இந்த மக்களின் போராட்டத்திற்கோ, இம் மக்களுக்கு ஆதரவாகவும் புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி அப் பகுதி மக்களால் கடந்த 19 நாட்களாக மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கோ கொடுக்கவில்லை. மறுபுறம் இந்த அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூட இந்த விடயத்தில் அரசாங்கத்துடன் பேசி காத்திரமான நடவடிக்கையை எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையிலேயே இராணுவ புலனாய்வாளர்கள், விமானப்படையினர் என அப்பகுதியில் குவிந்து அம் மக்களை புகைப்படம் எடுத்தும், ஒளிப்பதிவு செய்தும் அச்சுறுத்துகின்ற போதும் அம் மக்கள் தமது சொந்த மண்ணில் வாழ்வதற்காக மண்மீட்பு போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

இப்பத்தி எழுதும் வரை இந்தப் போராட்டத்திற்கு நியாயமான தீர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் இந்த போராட்டம் வேறு பரிமாணங்களை நோக்கி நகர இருக்கின்றது. அது இந்த அரசாங்கத்தின் நல்லிணக்கம், நல்லாட்சி என்ற போலி முகத்திரையை கிழிப்பதாகவே அமையும்.

N5