செய்திகள்

நல்லாட்சி அரசின் மீதும் தமிழர்கள் நம்பிக்கையிழந்துள்ளனர்!

-கே.வாசு-

நேர்காணல்

மூன்று தசாப்த கால போர் ஓய்ந்து இன்று 7 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இன்றும் பல அடிப்படை பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாது உள்ளது. இந்நிலையில் தற்போதைய வன்னியில் நிலமைகள் தொடர்பாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவக்தி ஆனந்தன் அவர்கள் வழங்கிய கருத்துக்களே இவை…

கேள்வி: யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வன்னியின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பன எவ்வாறு உள்ளது?

பதில்: மீள்குடியேறிய மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் ஐம்பதாயிரம் வீடுகள் வீடுகள் வழங்கப்பட்டது. அது கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. பயனாளிகள் தெரிவில் இருந்து பல குழப்பங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. உண்மையில் அரசாங்க அதிபர்கள் சுதந்திரமாக பயனாளிகளை தெரிவு செய்ய முடியாத நிலையில் தலையீடுகள் காணப்பட்டது. இன்னும் வடமாகாணத்தில் கிட்டத்தட்ட ஓரு இலட்சம் பேருக்கு வீடு தேவையாகவுள்ளது. தற்காலிக வீடுகளிலிலேயே பலர் வசிக்கின்றனர். உள்ளூராட்சி சபை வீதிகள், மலசல கூட வசதியின்மை, உயிரிழந்த மக்களுக்கான நஸ்ட ஈடுகள், சொத்துக்களை இழந்தவர்களுக்கான இழப்பீடுகள், காணாமல் போனோர், அரசியல் கைதிகள் பிரச்சனை என பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று யுத்த்திற்கு பின்னர் 7 வரவு செலவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த 7 வரவு செலவுத் திட்டத்திலும் கடந்த அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி பாதுகாப்புக்கே அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த போரினால் பாமதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம், பொருளாதாரம், மீள்கட்டுமாண வசதி, நஸ்ரஈடுகள் என பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை. அதனால் புதிய அரசாங்கம் மீதான கோபமும், குறைகளும் இந்த மக்கள் மத்தியில் இருக்கின்றது.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படும் நிலையில் தற்போதைய இந்த நிலை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லையா?

பதில்: எங்களது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இறுதியாக எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவின் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் கலந்து கொண்டோம். அதன் போது இந்த அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான ஒரு உத்தியோக பூர்வமான பேச்சுக்கு கால நேரத்தை ஒதுக்குமாறு கேட்டிருந்தோம். இதன்போது எங்களுடைய மக்களுக்கு இருக்கக் கூடிய அன்றாட அத்தியாவசியப் பிரச்சனைகள், அரசியல் தீர்வை காணுவதற்கான ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்படுதல், மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் பிரச்சனை, காணாமல் போனோர் பிரச்சனை தொடர்பாகவும் இந்த நல்லாட்சி அரசாங்கம் என்ன மாதிரியான ஒரு அரசியல் தீர்வை காண விரும்புகின்றது என்ற விடயங்கள் தொடர்பிலும், காணி, பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட ஒரு சமஸ்டி முறை தேவை என்பதை வெளிப்படுத்தவும் அரசாங்கத்துடன் பேச்சினை நடத்த வேண்டும் எனவும் இந்த அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் கோட்டிருந்தோம். அந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைக்கான ஒரு ஏற்பாட்டை சம்பந்தன் ஐயா தற்போது தான் ஒதுக்கி தந்துள்ளார்.

கேள்வி: புதிய அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டமாக எவ்வாறானதொரு தீர்வுத் திட்டத்தை கூட்டமைப்பு முன்வைக்க இருக்கிறது?

பதில்: இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பல தடவை பேசியிருந்தாலும் கூட ஆனால் நான்கு கட்சிகளும் இணைந்து இது தான் எங்களது தீர்வுத்திட்டம் என்கிறதை முறையாக தயாரித்து அரசாங்கத்திடம் இன்னும் உத்தியோகபூர்வமாக கையளிக்கவில்லை. வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி ஆட்சி தேவை என அவ்வப்போது தேவை வரும் போது நாங்கள் பல விடயங்களை பேசிக் கொண்டாலும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் சம்மதத்தோடு எழுத்து பூர்வமாக அதனை தயாரித்து கையளிப்பதற்கான செயற்பாடு சரியான முறையில் நடைபெறவில்லை.

கேள்வி: தற்போது தமிழ் மக்கள் பேரவை, வடமாகாண சபை என்பன ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரித்து அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: நாங்கள் அதை வரவேற்கின்றோம். ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2013 மாகாண சபைத் தேர்தல், 2015 பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்யைத் தான் அந்த இரண்டும் முன்வைத்துள்ளது. ஆகையால் அது வரவேற்கக் கூடிய ஒரு தீர்வுத்திடடம். அதனை தான் நாமும் தேல்தல் காலங்களில் கூறி வந்திருக்கின்றோம்.

கேள்வி: புதிய அரசாங்கம் வந்த பின்னர் மாவட்ட இணைத் தலைமைகளில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா?

பதில்: வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம், இந்த மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் என பல கூட்டங்களில் மீள்குடியேற்றம், வாழ்வாதாரப் பிரச்சனை, காணிப்பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, வீதிகள், கல்வி, சுகதாரம் என பல விடயங்கள் ஆராயப்பட்டது. மக்களது குறைபாடுகள் அங்கு ஆராயப்பட்டாலும் கூட இவற்றை முன்னெடுப்பதற்கு பாரியளவில் நிதி தேவைப்படுகிறது. ஆகவே புதிய நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தேவைப்படும் நிதியினை வழங்க முன்வர வேண்டும். சம்மந்தப்பட்ட சில திணைக்களங்கள் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உறுதியாக இருந்தாலும் கூட நிதி இல்லாத பிரச்சனையால் அதனை செய்ய முடியவில்லை. இரண்டாவதாக எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த சிலர் தடையாகவும் இருக்கின்றனர். உதாரணமாக இரணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு என்ற விடயத்தில் இராணுவத்தினர், கிராமிய வீதிகளை புனரமைப்பதில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வனஇலாகா போன்றன இச் செயற்பாட்டை செய்ய தடையாகவுள்ளனர். குறிப்பாக வன இலாகாவின் செயற்பாடு படுமோசமாகவுள்ளது. ஆகவே, ஜனாதிபதி, பிரதமர் அவர்கள் இந்த கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதோடு தேவையான நிதியையும் வழங்க முன்வர வேண்டும்.

கேள்வி: கடந்த காலத்தைப் போன்று தற்போதும் வன்னியின் மன்னார், முல்லைத்தீவு பிரதேசங்களில் மீனவர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் ஆக்கபூர்வ நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டுள்ளதா?

பதில்: மீனவர்களுக்கு இரண்டு வகையான பிரச்சனை இருக்கின்றது. ஒன்று தென்னிலங்கை மீனவர்களின் வருகை. மற்றது தென்னிலங்கையில் இருந்து கொக்கிளாய், கொக்குதொடுவாய் போன்ற பல பகுதிகளில் வந்து சட்டவிரோத மீன்பிடியை மேற்கொள்பவர்கள் பிரச்சனை. இது தொடர்பாக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல தடவை நாம் வலியுறுத்தியுள்ளோம். மீன்பிடி அமைச்சர் கூட முல்லைத்தீவுக்கு வந்து பல வாக்குறுதிகளை வழங்கிவிட்டுச் சென்றிருக்கின்றார். ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. எல்லா வாக்குறுதிகளுமே காற்றிலே பறக்கவிடப்பட்டுள்ளது. ஆகவே, மீனவர்களுக்கு நீண்டகாலமாக தீர்க்க முடியாமல் இருக்கின்ற இந்த இரு பிரச்சனைகளும் தீர்க்க ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தியாவுடன் பேசி இந்திய மீனவர்கள் தொடர்பாக ஒரு முடிவை எடுப்பதுடன், தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தடை செய்யப்படவேண்டும்.

கேள்வி: தற்போது மத்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் வடமாகாண சபையின் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுவதான குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இணைந்து தான் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்தனாங்கள். குறிப்பாக வடக்கினுடைய அபிவிருத்தி திட்டங்களில் கூட குறைந்த பட்சம் நாங்களும் இந்த நல்லாட்சி அரசாங்கமும் சேர்ந்து பணியாற்ற முடியாத துப்பாக்கிய நிலை இருக்கிறது. அரசியல் தீர்வுப் பிரச்சனை, காணாமல் போனோர் பிரச்சனை என பல பூதாகரமான பிரச்சனைகள் இருக்கின்ற போதும் வடக்கிலும், கிழக்கிலும் நடக்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளில் வடக்கு, கிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலருடனும் கதைத்து பேசி செய்யும் நிலைப்பாடு இன்று வரை இல்லை. குறிப்பாக 65,000 வீட்டுத்திட்டத்தை எமது பிரதேச காலநிலைக்கு ஏற்ப கல்வீடுகளாகவும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகளாகவும் மாற்றுமாறு தொடர்ச்சியாக கோரிவந்த போதும் அதனை மாற்றியமைக்க முடியாமல் இருப்பது மிகவும் ஒரு துர்ப்பாக்கியமான நிலை. இரண்டாவதாக வவுனியவிற்கான பொருளாதார மத்தியநிலையம் தொடர்பாகவும் முதலமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தீர்மானம் எடுக்கப்படவில்லை. தாண்டிக்குளம் இடம் தராவிட்டால் வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்வோம் என கூறுவது எமக்கு அச்சுறுத்தல் விடுத்து அபிவிருத்திக்கு இணங்க வைக்க முயற்சிப்பதே தவிர எமது ஆலோசனைகள் பெறப்படவில்லை. இந்தப் பணம் எமது மாவட்டத்திற்கு வெளியில் போகக் கூடாது என்பதற்காகவே தாண்டிக்குளத்தை வழங்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் ஒட்டுமொத்த நிலைப்பாடு இது தாண்டிக்குளத்தில் இல்லாது ஓமந்தையில் அமைக்க வேண்டும் என்பதே. ஆகவே, இவ்வாறான விடயங்களில் கூட முன்னைய அரசாங்கத்திற்கும், தாங்கள் கொண்டு வந்த புதிய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கின்றது என்ற எண்ணத்தையும், கோபத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி: தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று மீண்டும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: அதிமுகவைச் சேர்ந்த செல்வி ஜெயலலிதா வெற்றி பெற்றுருந்தாலும் கூட திமுகவும் கடந்த முறை நடைபெற்ற தேர்தலிலும் பார்க்க கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. பலமான எதிர்கட்சியாக திமுக உள்ள நிலையில் தான் அதிமுக ஆட்சியமைகிறது. எனவே, இந்த இரு கட்சிகளும் ஈழத்தமிழர் விடயத்தில் ஒரு பலமாக செயற்படும் என்ற நம்பிக்கை இருப்பதுடன், மத்திய அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தங்களையும் பிரயோகிக்கும் என நம்புகின்றோம்.

N5